Pages

Monday, March 29, 2010

From: நாத்திகம் ; To: இஸ்லாம்



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

டாக்டர் ஜெப்ரி லேங் (Dr.Jeffrey Lang), அமெரிக்காவின் கன்சாஸ் பல்கலைகழகத்தில் (University of Kansas) கணிதத்துறை பேராசிரியராய் இருப்பவர். 1980 களின் முற்பகுதியில், தன் 28 ஆவது வயதில் இஸ்லாத்தை தழுவியவர். தன் பதினாறு வயதிலிருந்து இஸ்லாத்தை ஏற்கும்வரை நாத்திகராக இருந்தவர்.        

நேர்த்தியாக பேசக்கூடியவர். அவருடைய கருத்துகளாகட்டும், அதை அவர் சொல்லக்கூடிய விதமாகட்டும், கேட்பவர்களை சிறிதாவது யோசிக்க வைத்துவிடும். 


தான் நாத்திகத்திலிருந்து இஸ்லாத்திற்கு வந்த விதம் பற்றி அவர் கூறிய கருத்துக்கள் இந்த விதத்தை சார்ந்தவை தான். இன்ஷா அல்லாஹ், இந்த பதிவில், அவர் இஸ்லாத்திற்கு வந்த விதம் பற்றி கூறியதை பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்.       

இந்த பதிவு, நடுநிலையோடு சிந்திக்கும் நாத்திக சகோதரர்களுக்கு தங்கள் வளையத்தை தாண்டி வர உதவலாம்...இன்ஷா அல்லாஹ்.

"நான் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தவன் (1954). என் தாய் கடவுள் நம்பிக்கை மிக அதிகமுடையவர், மிக இனிமையானவர். என் தந்தையும் கடவுள் நம்பிக்கை உடையவர்தான், ஆனால் துரதிஷ்டவசமாக குடிப்பழக்கத்திற்கு ஆளாகி விட்டார். அவருடைய வன்முறைக்கு அதிகம் இலக்கானது என் தாய்தான். 

என் தந்தையால் என் தாய்க்கு ஏற்பட்ட கஷ்டங்கள் மிக மோசமானவை (லேங் அவர்களின் தாய் தன் கணவரின் வன்முறையால் மனநிலை பாதிக்கப்பட்டவர்). எனக்கு இன்றும் நினைவில் இருக்கிறது, என் ஏழு, எட்டு வயதில் கடவுளிடம் வேண்டிக்கொள்வேன், கடவுளே தன் தந்தையை எங்களிடமிருந்து அழைத்து சென்று விடு என்று.      

இந்த சூழ்நிலைகள் தான் என்னை நாத்திகனாக வைத்தன. 

  • என் தாய் கடவுளையே தன் துணையாக கொண்டவர். அப்படிப்பட்ட நல்லவருக்கு, தன்னையே நாடியவருக்கு ஏன் இந்த கடவுள் இவ்வளவு கஷ்டங்களை கொடுக்க வேண்டும்? 
  • ஏன் ஒருவன் மற்றொருவனை அடக்கியாள வேண்டும்? (Why should strong oppress the poor), அதனை ஏன் இறைவன் பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும்? 
  • உலகில் எங்கு பார்த்தாலும் ஊழல்கள், வன்முறைகள், அநியாயங்கள்...இதையெல்லாம் அடக்காமல் இறைவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்? 
  • இறைவன் பூரணமானவன் (perfect) என்றால், அவன் உருவாக்கிய இந்த உலகமும் பூரணமாகத்தானே இருக்க வேண்டும்?
  • நல்லதெல்லாம் இறைவனிடமிருந்து வந்ததென்றால், தீமையும் அவனிடமிருந்து தானே வந்திருக்க வேண்டும்?   

இப்படி என்னுள் பல கேள்விகள், முடிவில் கடவுளே இல்லையென்று என் பதினாறாம் வயதில் முடிவெடுத்து விட்டேன்.          

நன்றாக படித்தேன், நல்ல வேலையிலும் சேர்ந்தேன். நான் சான் பிரான்சிஸ்கோ பல்கலைகழகத்திற்கு வந்த போதுதான் இஸ்லாம் எனக்கு அறிமுகமானது. ஒரு அருமையான இஸ்லாமிய குடும்பத்தை சந்தித்தேன். நிறைய முறை அவர்களுடைய வீட்டிற்கு சென்றிருக்கிறேன். 

கடவுள் பற்றிய என்னுடைய கேள்விகளை அவர்களிடம் கேட்பேன். என்னுடைய கேள்விகள் அவர்களை பெரும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தின. பதிலளிக்க மிகவும் கஷ்டப்பட்டார்கள்.      

பிறகு ஒருமுறை, அப்துல்லா யூசுப் அலியால் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கில குரானை எனக்கு பரிசளித்தார்கள். "தங்களால் தான் அவர் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை,குரானைப் படிப்பதால் அவருக்கு  பதில்கள் கிடைக்கலாம்" என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.   

அந்த குரானை படிக்கவேண்டும் என்று அப்போதைக்கு நான் விரும்பவில்லை. குரானை என் வீட்டிலிருந்த புத்தக மேசையில் வைத்து விட்டு அப்படியே விட்டுவிட்டேன். பல  நாட்கள் அந்த குரான் அங்கேயே இருந்தது. 

ஒருநாள் ஓய்வு நேரம். என்னிடம் இருந்த அனைத்து புத்தகங்களையும் படித்தாகி விட்டது, புதிதாக படிப்பதற்கு ஒன்றுமில்லை. அப்போது, மேசையில் இருந்த குரான் கண்ணில் பட்டது. 

வீட்டில் போரடிக்கும் போது, ஒரு வார இதழை எடுத்து நாலு பக்கங்களை புரட்டி பின்னர் வைத்துவிடுவோமே, அதுபோல நினைத்துதான் குரானைத் திறந்தேன். 

குர்ஆனில் குறை கண்டுபிடிக்க வேண்டுமென்ற எண்ணமெல்லாம் இல்லை. என்னைப் பொறுத்தவரை கடவுள் இல்லை, அவ்வளவுதான். இது மற்றுமொரு புத்தகம், அவ்வளவே...      

முதல் அத்தியாயத்தை பார்த்தேன், அல் பாத்திஹா என்றிருந்தது. அதில் ஏழு வசனங்கள். நல்ல அழகான, கோர்வையான வசனங்கள். முஸ்லிம்கள் குரானை இறைவேதமென்று சொன்னாலும், என்னைப் பொறுத்தவரை அது மனிதரால் எழுதப்பட்டது. அதனால், இந்த புத்தகத்தை எழுதியவர் நல்ல இலக்கியவாதி என்று பாராட்டினேன். நல்ல புத்திசாலி என்றும் நினைத்தேன், படிப்பவர்களை துவக்கத்திலேயே நன்றாக கட்டிப்போடுகிறாரே...

அதில் ஒரு வசனம், 

தீர்ப்பு நாளின் அதிபதி --- Qur'an 1:3  

என்ன தீர்ப்பு நாளா?, இவரே மக்களுக்கு கஷ்டத்தை கொடுப்பாராம், இவரே தீர்ப்பு சொல்லுவாராம் என்று கோபப்பட்டேன்...

முதல் சூரா என்னை மேற்கொண்டு படிக்க தூண்டியது. அடுத்த அத்தியாயம், சூரத்துல் பகரா...

அதன் இரண்டாது வசனம், 

இது திரு வேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. பயபக்தியுடையோருக்கு நேர்வழி காட்டியாகும். --- Qur'an 2:2

என்ன ஒரு அதிகார தோரணை என்று வியந்தேன். நிச்சயமாக இந்த புத்தகத்தை எழுதியவர் அறிவாளிதான். அதுமட்டுமல்லாமல் ஒரு அறிவுசார்ந்த விவாதத்திற்கு தயார்படுத்தின அந்த வசனங்கள்.   

படித்துக்கொண்டே வந்தேன். அந்த சூராவின் முப்பதாவது (30) வசனம் ஒரு கனம் என்னை திக்குமுக்காட செய்தது. ஏனென்றால் என் மனதில் நீண்ட நாட்களாக இருந்த கேள்வி அங்கு கேட்கப்பட்டிருந்தது. 

ஏன் கடவுள் அநியாயக்கார மனிதனை படைக்க வேண்டும்? என்ற கேள்விதான் அது...   

என்னுடைய கேள்வியை இங்கே வானவர்கள் கேட்கின்றனர்.     

இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி "நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்" என்று கூறியபோது, அவர்கள் "நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி ரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னை துதித்து, உன் பரிசுத்தத்தைப் போற்றியவர்களாக இருக்கின்றோம்" என்று கூறினார்கள்.          --- Qur'an 2:30            

இந்த ஒரு வசனம் என் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 

நான் நாத்திகனாக மாறியதில் இந்த ஒரு கேள்விக்கு நிச்சயம் முக்கிய பங்குண்டு. 

வானவர்கள் கேட்பது நியாயம்தானே?. அவர்களோ தவறு செய்யாதவர்கள், இறைவனுக்கு கட்டுப்பட்டவர்கள், அவர்களையே பூமியில் வாழ வைத்திருக்கலாமே? ஏன் இந்த அநியாயக்கார மனிதனை படைக்க வேண்டும்? வானவர்களின் கேள்வி மிக நியாயமானது...இதற்கு என்ன பதில் என்று ஆர்வமுடன் மேற்கொண்டு படித்தேன். 

அதே வசனத்தின் இறுதியில், 

அவன் " நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்" எனக் கூறினான் --- Qur'an 2:30. 

என்ன நீ அறிவாயா? ஏன் பாவம் செய்யக்கூடிய மனிதர்களை படைத்தாய் என்று கேட்டால், அதற்கு அனைத்தையும் நீ அறிவாய் என்பதுதான் பதிலா? 

இப்போது குரானுடன் நான் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்துவிட்டேன் (சிரிக்கிறார்), இந்த குரானை முழுமையாக படித்து என் மற்ற கேள்விகளுக்கும் என்ன பதிலளிக்கிறது என்று பார்த்து விட வேண்டியதுதான் என்று முடிவெடுத்துக் கொண்டேன்.   

நாலு பக்கங்கள் மட்டுமே திருப்பலாம் என்றிருந்தவனை இந்த குரான் மென்மேலும் படிக்க தூண்டிக்கொண்டே இருந்தது, என்னுடைய கேள்விகள் ஒவ்வொன்றாய் பதிலளிக்கப்பட்டு கொண்டே வந்தன.          



என் அனுபவங்களை முழுமையாக சொல்ல இந்த நேர்க்காணல் நேரம் போதாது. ஆனால் நான் சொல்ல விரும்புவதெல்லாம், குரானை முழுமையாக படித்த பிறகு, தனிப்பட்டமுறையில் என் கேள்விகளுக்கு விடைகள் கிடைத்தன. 

குரானின் வசனங்கள் ஆணித்தரமானவை, ஆழ்ந்த கருத்துக்களை கொண்டவை. 

பிறகு, என் இருபத்தி எட்டாவது வயதில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். 

ஒருமுறை என் மகள் கேட்டாள், 

"சரி dad, குரான் உங்கள் கேள்விகளுக்கு பதிலளித்து விட்டது. ஆனால், உங்கள் கேள்விகளுக்கெல்லாம் ஒரு புத்தகம் பதிலளித்து விட்டால் மட்டும் இறைவன் இருக்கிறானென்று ஆகிவிடுமா, அல்லது அந்த புத்தகம் இறைவனிடமிருந்து வந்துவிட்டதாக தான் நீங்கள் நினைத்துவிட முடியுமா?" 

இது என்னிடம் பலரும் கேட்க நினைக்கக்கூடிய அர்த்தமுள்ள கேள்வி.  

நான் குரானை மென்மேலும் படிக்க படிக்க, என் கேள்விகளுக்கு பதில்கள் கிடைக்க துவங்கின. பதில்கள் கிடைக்க கிடைக்க நாத்திகத்தை கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டேன்.    

நான் எந்த அளவு குரானை மேற்கொண்டு படித்தேனோ அந்த அளவு நாத்திகத்தை கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டேன். 

நான் கடவுள் இல்லை என்பதில் மிக உறுதியாய் இருந்தவன், யார் எப்படி விளக்கினாலும் கடவுள் இல்லை என்பதில் நின்றவன். 

ஆனால் குரான், அதனைப்பற்றி நிறைய கேள்விகளை எழுப்பிவிட்டது.
    
அதுமட்டுமல்லாமல், குரானைப் படித்து முடித்ததும் என் மனதில் ஏற்பட்ட அமைதி இருக்கிறதே, இதுநாள் வரை என் வாழ்வில் அனுபவிக்காதது. இறைவனின் அன்பு என்பது இதுதானோ? சில நேரங்களில் அந்த உணர்வு பத்து, பதினைந்து நிமிடங்கள் கூட நிலைத்திருக்கும். என் மனம் அமைதியடைந்தது, ஒரு அற்புதமான உணர்ச்சி அது.  

என் வாழ்நாளில் கஷ்டங்களை அதிகம் பார்த்தவன், அந்த அற்புத மன அமைதி எனக்கு பதிலளித்துவிட்டது, இறைவன் இருக்கிறானென்று, இது இறைவேதமென்று. 

குரானை ஓதும்போது பலமுறை கண்கலங்கியிருக்கிறேன், அன்பு என்றால் என்னவென்று புரியவைத்தது குரான் தான்.

பலரும் என்னிடம் கேட்பார்கள், "இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதால் உங்கள் வாழ்வில் என்ன திருப்பம் வந்துவிட்டது" என்று.

நான் இப்போது சக மனிதர்களை அதிகம் நேசிக்க ஆரம்பித்திருக்கிறேன். இதுதான் இஸ்லாம் எனக்கு கற்றுகொடுத்த முதல் பாடம்.

தற்போது மனைவி, மூன்று குழந்தைகள் என்று ஒரு நிறைவான வாழ்வை இறைவன் எனக்கு அளித்திருக்கிறான்.  

இஸ்லாத்தை ஏற்ற புதிதில், விடியற்காலை தொழுகைக்கும், மாலை நேர தொழுகைகளுக்கும் பள்ளியில் சென்று தொழுது வருவேன். குரான் ஓதப்படுவதை கேட்பது ஒரு மிக அழகான உணர்வு.

ஒருமுறை ஒருவர் என்னிடம் கேட்டார், "டாக்டர் லேங், உங்களுக்கு அரபி புரிகிறதா?" என்று,

நான் சொன்னேன், "ஒரு குழந்தை தன் தாயை எதிர்க்கொள்கிறதே, அதுபோல தான்" என்று...

வாழ்வின் அர்த்தங்களை தேடி கொண்டிருப்போருக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம் ஒன்று தான். நீங்கள் தேடுவதை தொடருங்கள், ஆனால் நேர்மையாய், திறந்த மனதுடன் தேடுங்கள். 

உங்களை என் மார்க்கத்தை ஏற்க சொல்லி கட்டாயப்படுத்தி நான் என் மார்க்கத்தை விற்க விரும்பவில்லை. முஹம்மது (ஸல்) அவர்களுக்கே அந்த உரிமையை இறைவன் வழங்கவில்லை. எடுத்து சொல்வது மட்டும்தான் எங்கள் கடமை, உங்களை நேர்வழியில் செலுத்துவதெல்லாம் இறைவனின் நாட்டம். 

அதனால் தேடுவதை தொடருங்கள்...."


இது தானே குரானின் பலம். ஒருவர் மிகத் தீவிரமாய் இருக்கக்கூடிய ஒரு கொள்கையை உடைத்தெறிய வைப்பதென்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால், குரான் அதை எளிதாக, நேர்த்தியாக செய்து முடித்துவிட்டது....அல்ஹம்துலில்லாஹ்.  

நாத்திகர்களுக்கு முஸ்லிம்களாகிய நாங்கள் விடுப்பதேல்லாம் ஒரே ஒரு வேண்டுகோள்தான். நன்கு சிந்திக்கக்கூடியவர்களாய் இருக்கிறோம், அதனால் தயவு கூர்ந்து சிந்தியுங்கள், உங்கள் வட்டங்களை விட்டு வெளியே வந்து சிந்தியுங்கள். ஒரு நேர்க்கோட்டை வரையும்போது, அதை அருகில் இருந்து பார்க்கும் போது நேராகத்தான் தெரியும், தூரத்தில் இருந்து பார்த்தால் தான் உண்மை புரியும்.

அதுபோல நீங்கள் உங்கள் வட்டங்களை விட்டு வெளியே வந்து சிந்தியுங்கள். சொல்வதை சொல்லிவிட்டோம், ஏற்பதும் ஏற்காததும் உங்கள் இஷ்டம்...

டாக்டர் ஜெப்ரி லேங் அவர்களை முதன் முதலில் நான் (வீடியோக்களில்) பார்த்தது, டாக்டர் ஜமால் பதாவி அவர்களுக்கும் கிறித்துவ மிசனரியான அனீஸ் ஷோறோஷ் அவர்களுக்கும் இடையே நடந்த விவாதத்தில் தான். அப்போது கேள்வி நேரத்தில் தன் கேள்வியை அனீஸ் ஷோறோஷ் அவர்களிடம் முன்வைத்தார் அவர். 

பிறகு டாக்டர் ஜமால் பதாவி அவர்களுடன் சேர்ந்து விவாதங்களில் பங்கேற்றிருக்கிறார் டாக்டர் லேங். தற்போது பல இஸ்லாமிய கருத்தரங்குகளில் பங்கேற்று தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகிறார். 

இவர் எழுதி வெளிவந்து பலருக்கும் உதவியாய் இருந்த/இருக்கும் நூல்கள் 
  • "Losing my religion, A call for Help", 
  • "Struggling to Surrender" மற்றும் 
  • "Even Angels Ask:: A Journey to Islam in America" 

இவர் இஸ்லாத்திற்கு வந்தது பற்றியான முழுமையான விளக்கம் இவருடைய "Losing my Religion, A call for help" புத்தகத்தின் முதல் அத்தியாயத்திலும், இவருடைய மற்றொரு புத்தகமான "Even Angels Ask" என்பதிலும் இடம் பெற்றுள்ளது.   



நான் முன்பே கூறியது போன்று, தன் கருத்துக்களை மிக அழகாக, ஆழமாக வெளிப்படுத்துவதில் வல்லவர் டாக்டர் லேங். அல்ஹம்துலில்லாஹ். 

இவருடைய இந்த புத்தகங்களை படிப்பவர்கள் நிச்சயம் இதை உணர்வார்கள். 

அதிலும் இவருடைய "Even Angels Ask" என்ற புத்தகம், அமெரிக்காவில் இருக்கும் இளைய தலைமுறை முஸ்லிம்களை இலக்காக கொண்டு எழுதப்பட்டது. பலருடைய பாராட்டுதல்களையும் பெற்ற இந்த புத்தகத்தில் இஸ்லாமின் பல்வேறு அங்கங்களை தெளிவாக, ஆழமாக விளக்குகிறார் லேங். 

டாக்டர் லேங்கை போல, நாத்திகத்திலிருந்து இஸ்லாத்திற்கு வந்த மற்றுமொரு பிரபலமான நபர் சகோதரர் நூமன் அலி கான் (Nouman Ali Khan) அவர்கள். அமெரிக்காவின் பய்யினாஹ் கல்வி நிறுவனத்தின் (Bayyinah Institute) தலைவராய் இருக்கிறார். இவருடைய கதையும் சிந்திக்கும் நாத்திகர்களுக்கு அழகிய பாடம். 

For the believers, there is always a bright spot at the end of the tunnel.....

இறைவன் இவர்களுக்கு மென்மேலும் உடல்நலத்தையும், மனபலத்தையும் தந்தருள்வானாக...ஆமின்.              

இறைவன் நமக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்கின்ற வாய்ப்பை என்றென்றும் தந்தருள்வானாக....ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...


Dr.Jeffrey Lang's Books can be bought at:
1. Amazon.com
2. Or by requesting any popular book shop with their ISBN numbers which follows.
        a) Losing My Religion, A call for Help.  ISBN: 978-1590080276. link
        b) Struggling to surrender. ISBN: 978-0915957262
        c) Even Angels Ask. ISBN: 978-0915957675 


My Sincere Thanks to:
1. Br. Eddie
2. Dr.Jeffrey Lang, Associate Professor, University of Kansas, USA. 
3. Amazon.com

References:
1. Dr.Lang's Interview with Br.Eddie for The Deen Show. thedeenshowdotcom. 


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ      

Friday, March 26, 2010

எழுத்து விவாதங்களில் பங்கேற்கும் முஸ்லிம்கள் கவனத்திற்கு - I


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்...


             நம்மில் பலரும் சில இணையதளங்களில் வரும் இஸ்லாத்திற்கெதிரான பதிவுகளை எதிர்கொண்டு எழுத்து விவாதங்களில் பங்கேற்றிருப்போம். எழுத்து விவாதங்கள் என்பது, பெரும்பாலான நேரங்களில் திசை திரும்பிதான் போகின்றன. எழுதும் நமக்கும் ஒருவித சோர்வைத்தான் தருகின்றன. விவாதங்களில் கலந்து கொள்ளாமல் விடலாம் என்றால் அதுவும் முடியாது. ஏனென்றால் நம்மிடம் பதிலில்லை என்று நினைக்க வாய்ப்புள்ளது. 

ஆனால் இந்த விவாதங்கள் சரியான முறையில் நடந்தால் நமக்கு நிறைய பலனுள்ளது. சமீப காலங்களாக எழுத்து விவாதங்கள் நம் சகோதரத்துவத்தை பறைச்சாற்றி வருகின்றன. ஒற்றுமையை அதிகரிக்க வைத்திருக்கின்றன. அந்த வகையில் இந்த விவாதங்களை முன்வைப்போரை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும். 

அதுமட்டுமல்லாமல், நிறைய சகோதரர்களை இப்போதெல்லாம் விவாதங்களில் காணமுடிகிறது. இது இன்னும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அல்ஹம்துலில்லாஹ், எல்லாப் புகழும் இறைவனுக்கே... 

இந்த பதிவுகள் எழுத்து விவாதங்களில் பங்கேற்கும் நம் சகோதரர்களுக்கு ஒரு சிறு உதவி.

இந்த பதிவுகளில் இரண்டு விஷயங்களை பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். அதுவும் முழுமையாக அல்ல, சின்ன அடிப்படையை மட்டும்தான்...

1. நான் எப்போதும் சொல்லுவதுண்டு, நாத்திகத்தை வெல்ல இஸ்லாமினால் மட்டுமே முடியும் என்று. அது அவ்வப்போது நிரூபணமாகி தான் வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்...       

நமக்கெல்லாம் தெரிந்ததுதான், நாத்திகத்திற்கு இன்றைய சூழ்நிலையில் பெரிதும் உதவி புரிவது பரிணாம வளர்ச்சி கோட்பாடுதான். அது ரீலா இல்லை ரியலா என்ற விவாதம் அன்றிலிருந்து இன்றுவரை இருந்து கொண்டுதான் இருக்கிறது.

பெருமளவு மக்களை திசைதிரும்ப வைத்திருக்கிறது இந்த நிரூபிக்க படாத தத்துவம். பரிணாம வளர்ச்சி கோட்பாடு (அல்லது தத்துவம்) இந்த வகையில் தான் முக்கியத்துவம் பெறுகிறது.

நம் ஒவ்வொருவரும் இந்த தத்துவத்தின் அர்த்தமற்ற வாதங்களை அம்பலப்படுத்துவது முக்கியம். ஒவ்வொரு விவாதத்தின் போதும் இதை சேர்த்துக்கொள்வதும் காலத்தின் அவசியம்.

மிக முக்கியமான ஒன்று, பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின் எல்லாப் பகுதிகளையும் நான் மறுப்பதில்லை. ஏனென்றால், பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை என்னை பொறுத்தவரை இரண்டாக பிரிக்கலாம்.

  • Micro or Horizontal Evolution
  • Macro or Vertical Evolution

இந்த Macro பரிணாம வளர்ச்சிதான் விவகாரமே. இதிலிருந்து அது வந்தது, அதிலிருந்து மற்றொன்று வந்தது, (இப்போதைக்கு) கடைசியாய் நாம் வந்தோம் என்று சொல்லுகிற இந்த macro evolution தான் பிரச்சனையே. நடுநிலையோடு சிந்திக்கிற எவரும் இந்த macro பரிணாம கொள்கையால் குழம்பி போவது உறுதி...

"Biological evolution is a change in the genetic characteristics of a population over time. That this happens is a fact. Biological evolution also refers to the common descent of living organisms from shared ancestors. The evidence for historical evolution -- genetic, fossil, anatomical, etc. -- is so overwhelming that it is also considered a fact. The theory of evolution describes the mechanisms that cause evolution. So evolution is both a fact and a theory"  --- Talk Origins Site   

நான் மேலே குறிப்பிட்டுள்ள வாசகம் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை ஆதரிக்கும் பிரபல தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. அவர்களாலும் Macro பரிமாண வளர்ச்சி கோட்பாடு உண்மை என்று உறுதியாக சொல்ல முடியவில்லை.

பரிணாம வளர்ச்சி கோட்பாடு என்றாலே இந்த Macro Evolution தான் பலருக்கும் ஞாபகம் வரும். அதனால் தான் வெறுமனே பரிணாம வளர்ச்சி கோட்பாடு என்றே சொல்கின்றனர்.

நான் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை பற்றி இங்கு விளக்க போவதில்லை. ஆனால் நான் கூற விரும்புவதெல்லாம், நீங்கள் ஒரு நாத்திகரை (அல்லது வேறு யாரையும்) விவாதத்தில் சந்தித்தால், அவருக்கு பரிணாம வளர்ச்சி கோட்பாட்டில் நம்பிக்கை இருந்தால், அவரை கண்ணியத்தோடு அணுகி விளக்கம் கேளுங்கள், பரிணாம வளர்ச்சி கோட்பாட்டிற்கும் பகுத்தறிவுக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்று?

மற்றொன்று, எல்லா நாத்திகர்களும் பரிணாம வளர்ச்சியை ஏற்றுக்கொண்டவர்கள் என்று நாம் நினைத்து விடக் கூடாது. ஏனென்றால் அதனை ஏற்றுக்கொள்ளாத சில பேர் இருக்கிறார்கள்...
  
எப்படி ஒருவருக்கு பரிணாம வளர்ச்சியில் நம்பிக்கை இருக்கிறதா என்று அறிவது? 

சுலபம், நமக்கு தெரியாததுமல்ல, நாம் எப்படி இந்த உலகிற்கு வந்திருப்போம் என்ற ஒரே ஒரு கேள்வியை கேட்டால் போதும்....

அதற்கு அவர் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை விளக்கமாக கொடுத்தால் அவர்தான் நாம் எதிர்பார்க்கும் சகோதரர். 

அவரிடம் ஆரோக்கியமான முறையில் விவாதியுங்கள். பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின் அபத்தங்களை எடுத்துக் கூறுங்கள். 

அவர்கள்,தாங்கள் இவ்வுலகில் இருப்பதற்கு வேறெந்த காரணத்தை வேண்டுமென்றாலும்  கூறட்டும், பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை மட்டும் கூறக்கூடாது என்ற அளவில் விவாதங்கள் இருக்கவேண்டும். 

"சரிப்பா, நான் எப்படியோ வந்துட்டேன்" என்று சொல்லி தாங்கள் இவ்வுலகில் இருப்பதற்கான காரணங்களை தேடி ஆராயட்டும், பரிணாம வளர்ச்சி என்ற படுத்து விட்ட கோட்பாட்டை மட்டும் உதவிக்கு கொண்டு வரக்கூடாது.     

இதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான், பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை பற்றி நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். மேலோட்டமாக அல்ல, ஆழமாக...   

பரிணாம வளர்ச்சியை பற்றி அறிய விரும்புகிறவர்கள், பரிணாம வளர்ச்சி ஆதரவு மற்றும் எதிர்ப்பு தளங்களை பார்க்கலாம்.

பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின் இரு முக்கிய தூதர்கள் என்றால், அன்று டார்வின் இன்று ரிச்சர்ட் டாகின்ஸ் (Richard Dawkins). 



டார்வினை பற்றி பேச தேவையில்லை, அவரே அவரது புத்தகத்தில் தன்னால் சிலவற்றை தற்போது நிரூபிக்க முடியாதென்றும், எதிர்காலத்தில் நிரூபிக்க படலாம் என்றும் கூறிவிட்டார். 

இப்போது நம்முடைய கவனமெல்லாம், தற்காலத்திய பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின் காவலர் ரிச்சர்ட் டாகின்ஸ் பற்றித்தான் இருக்கவேண்டும். டாகின்ஸ், ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் விலங்கியல் துறையின் பேராசிரியராய் இருந்தவர். 

இவர் எழுதி பரபரப்பாய் விற்பனையான புத்தகம் "The God Delusion". இதில் கடவுள் ஏன் இல்லை என்று விளக்குகிறார் டாகின்ஸ். அதையாவது  இவர் தெளிவாக சொன்னாரா என்றால்...இல்லை. குழப்பம் மட்டுமே மிஞ்சுகிறது...




உதாரணத்துக்கு....

"God almost certainly does not exist" --- Richard Dawkins in his book "The God Delusion", Page No:158 

"The God Delusion" என்பதற்கு பதிலாக "The Dawkins Delusion" என்று வைத்திருக்கலாம், பொருத்தமாக இருந்திருக்கும்.

நீங்கள் விவாதங்களில் சிலர் இந்த புத்தகத்தை மேற்கோள் காட்டுவதை பார்க்கலாம். 

டாகின்ஸ்சுடைய இந்த புத்தகம் முஸ்லிம்களிடையே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், மற்றவர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது உண்மை. 

இந்த புத்தகத்தில் பரிணாம வளர்ச்சியையும் வைத்துதான் கடவுள் இல்லை என்று வாதிடுகிறார் டாகின்ஸ். 

நான் மேலே சொன்ன ஒரு சிறு உதவி இங்கேதான். நீங்கள் உங்கள் விவாதங்களில் டாகின்ஸ்சை பற்றியோ அல்லது அவரது இந்த புத்தகத்தை பற்றியோ அல்லது பரிமாண வளர்ச்சி பற்றியோ உங்களிடம் கேள்விகள் வைக்கப்படுமானால் நீங்கள் நான் இப்போது குறிப்பிட போகும் இரு நபர்களது விளக்கங்களை பரிசீலனை செய்யலாம். 

உலகளவில் முஸ்லிம்கள் பல நாத்திகர்களுடன் விவாதங்களில் கலந்து கொண்டு வருகின்றனர். அவர்களில் எனக்கு தெரிந்த வெளிநாட்டைச் சேர்ந்த சிலர் Shabir Ally, Adam Deen மற்றும் Hamza Andreas Tzortzis ஆவர். 

இவர்களில் ஆடம் தீன் மற்றும் ஹம்சாவை பற்றித்தான் பார்க்கப்போகிறோம். ஆடம் மற்றும் ஹம்சா இருவரும் பல பிரபல நாத்திகவாதிகளுடன் நேரடி விவாதம் புரிந்தவர்கள்/புரிந்து கொண்டிருப்பவர்கள்.




டாகின்ஸ்சுடைய புத்தகத்தை பற்றிய உண்மைகளை அம்பலப்படுத்தி வருபவர்கள். மேற்குலகில் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து (குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன்) பல பல்கலைகழகங்களில் தொடர்ச்சியாக இந்த புத்தகத்தை பற்றி பேசி, விவாதித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.                           



நீங்கள் இவர்களுடைய தளத்திலிருந்து இவர்களது விவாத வீடியோக்களையும், இவர்களது எழுத்து வாதங்களையும் பார்க்கலாம்/படிக்கலாம், பதிவிறக்கம் செய்யலாம்.


  1. hamzatzortzis.blogspot.com
  2. hamzatzortzis.com
  3. adamdeen.com

ஆக, உங்கள் முன் பரிணாம வளர்ச்சி மற்றும் டாகின்ஸ்சுடைய புத்தகத்தை யாராவது மேற்கோள் காட்டினால் (நிச்சயம் காட்டுவார்கள்) இந்த இரு சகோதரர்களின் வாதங்களையும் நீங்கள் விரும்பினால் பயன்படுத்தி கொள்ளலாம்.

நீங்கள் கேட்பது புரிகிறது, ஏன் டாகின்சை நேரடி விவாதத்திற்கு அழைக்க கூடாது?

அழைக்காமலா இருந்திருப்பார்கள் நம் சகோதரர்கள்?, நாம் தான் இந்த விஷயத்தில் முன்னோடிகள் ஆயிற்றே (அல்ஹம்துலில்லாஹ்)... பிரிட்டனின் முன்னணி பத்திரிக்கையான டைம்ஸ் தினசரி மூலமும் சில முறை அழைப்பு விடுத்தாகி விட்டது... பயனில்லை...



டாகின்சை பற்றி பேசும்போது உமர் (ரலி) அவர்கள் ஞாபகம் தான் வருகிறது.

நாயகம் (ஸல்) அவர்கள் குறைஷிகளால் மிகுந்த கஷ்டப்பட்டு கொண்டிருந்த போது,   "இறைவா, உமர் அல்லது அபு ஜஹல் ஆகிய இருவரில் ஒருவரை இஸ்லாத்தை ஏற்க வைத்துவிடு" என்று துவா செய்தார்கள். இறைவன் உமர் (ரலி) அவர்களை இஸ்லாத்தை ஏற்கவைத்து நாயகம் (ஸல்) அவர்களது கரத்தை வலுப்படுத்தினான். அன்றிலிருந்து இன்றுவரை இஸ்லாத்தை எதிர்த்த பலரும் இஸ்லாமின்பால் தங்களை ஐக்கியப்படுத்தி வருகிறார்கள்.

இன்ஷா அல்லாஹ், துவா செய்வோம், டாகின்ஸ்சை இறைவன் இஸ்லாத்தில்பால் கொண்டுவர வேண்டுமென்று...                  

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

இறைவன் நம் ஈமானை அதிகரிக்க செய்வானாக...ஆமின்...

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ    

Wednesday, March 24, 2010

செசன்யா - என்ன தான் பிரச்சனை?




அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்...

செசன்யா....இப்போது என்ன தான் வேண்டும் இந்த பகுதி மக்களுக்கு? 

நான்கே வார்த்தைகளில் சொல்லுவதென்றால்...

"நிரந்தர அமைதி மற்றும் பாதுகாப்பு"

இதுதான் இப்போது செசன்யா மக்களுக்கு தேவை. பார்ப்பதற்கு எளிமையாய் தோன்றும் இந்த நான்கு வார்த்தைகளில் தான் விஷயமே இருக்கிறது. 

பெரும்பாலான செசன்ய மக்களை பொறுத்தவரை இந்த நிரந்தர அமைதி மற்றும் பாதுகாப்பு என்பது செசன்யா சுதந்திர நாடாவதால் மட்டுமே சாத்தியம். 

ரஷ்ய கூட்டரசின் (அல்லது சம்மேளனத்தின்  (Russian Federation) ) முடிவோ, அவர்களது மண்ணில் இருந்து ஒரு பகுதி பிரிவதை ஒருக்காலும் அனுமதிக்க முடியாது என்பது....

இங்குதான் விவகாரமே, ரஷ்ய கூட்டரசு என்னதான் செசன்யா தங்களது பகுதி என்று சொன்னாலும், செசன்ய மக்களை பொறுத்தவரை அவர்கள் என்றுமே தங்களை ரஷ்யாவின் ஒரு பகுதியாக நினைத்ததில்லை/விரும்பியதில்லை, மேலும் செசன்யா ரஷ்யாவின் நிலப்பகுதியும் இல்லை. செசன்னியர்களை பொறுத்தவரை, ரஷ்யா தன் இராணுவ பலத்தால் அவர்களை தன் கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கிறது, அவ்வளவுதான். இன்னும் சொல்லப் போனால் 1990-ஆம் ஆண்டு, தாங்கள் ஒரு சுதந்திர நாடு என்று அறிவித்து கொண்டவர்கள் அவர்கள். பிறகு ரஷ்ய கூட்டரசிற்கும், செசன்யாவிற்கும் இடையே இரு யுத்தங்கள், இவற்றின் மூலம் மறுபடியும் செசன்யா, ரஷ்ய கூட்டரசின் கீழ்.          

செசன்ய பிரச்சனை இன்று நேற்று வந்ததல்ல, அது சுமார் முன்னூறு ஆண்டுகால பிரச்சனை. 

என்று ரஷ்யாவின் ஜார் (Czar) ஆட்சியாளர்களின் படைகள் செசன்னியர்களின் நிலங்களை ஆக்கிரமைக்க துவங்கினவோ (late 18th century) அன்று ஆரம்பித்த பிரச்சனை. இன்று வரை பல ஆட்சியாளர்கள் மாறிவிட்டார்கள், ஆனால் செசன்னியர்களுக்கு அவர்கள் நிலப்பகுதி மட்டும் திரும்ப கிடைக்கவில்லை. அன்றிலிருந்து இன்று வரை லட்சக்கணக்கான மக்களை இந்த விடுதலை போராட்டத்திற்கு அவர்கள் பறிகொடுத்து விட்டனர்.

செசன்ய விவகாரங்களை முழுமையாக இங்கு பார்க்க முடியாது என்றாலும், முக்கியமான சில விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள முயற்சிக்கிறேன்...இன்ஷா அல்லாஹ்...

அதற்கு முன், இன்றைய ரஷ்யாவைப் பற்றி சில தகவல்களை தெரிந்து கொள்வது இந்த பதிவிற்கு அவசியம் என்று நினைக்கிறேன்.            

முதலில், ரஷ்யா என்று அழைப்பதை விட ரஷ்ய கூட்டரசு அல்லது சம்மேளனம் (Russian Federation) என்று அழைப்பதே அரசியல்ரீதியாக சரியாக இருக்கும். எழுதுவதற்கு எளிமையாக இருக்கும் என்பதற்காக இந்த பதிவு முழுவதும் ரஷ்யா என்றே பயன்படுத்தப்படுகிறது. 

ரஷ்யா என்பது மிகப்பெரிய பரப்பளவு கொண்ட நாடு, ஐரோப்பாவின் கிழக்கிலிருந்து ஆசியாவின் கிழக்கு வரை பரந்து விரிந்த பகுதி. ரஷ்யாவின் அரசியல் சாசனத்தின்படி, ரஷ்யா, 83 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது (83 federal Subjects or members of Federation). இதுவே முன்பு 89 ஆக இருந்தது,  பின்னர் சில பகுதிகளை ஒன்று சேர்த்து 83 ஆனது. நம் நாட்டில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள்   இருக்கிறதல்லவா, அதுபோல..

அவற்றில் குடியரசுகள் (Republics) மட்டும் 21. ரஷ்ய சம்மேளனம் உருவான போது, ரஷ்யாவில் இருந்த வெவ்வேறு இனத்தவருக்கு (உதாரணத்திற்கு செசன்னியர்கள்)   அவர்கள் சார்ந்த இனம், மொழி வாரியாக குடியரசுகள் உருவாக்கப்பட்டன. மொழி வாரியாக நம் மாநிலங்கள் பிரிக்கப்பட்டனவே அது போன்று.  

இந்த குடியரசுகள் சுதந்திர நாடுகள் கிடையாது. இவை ரஷ்யாவின் கட்டுபாட்டுக்குள்லேயே  இருக்கும், ரஷ்யாவின் ஒரு பகுதியாகவே அறியப்படும், ஆனால் கூட்டரசின் மற்ற பகுதிகளை விட இவற்றுக்கு அதிகாரம் அதிகம்.

  • இந்த குடியரசுகளுக்கு தன்னாட்சி அதிகாரம் உண்டு (Autonomous)
  • ஒவ்வொரு குடியரசும் தங்களுடைய அரசியல் சாசனத்தை (Constitution) உருவாக்கி கொள்ளலாம். 
  • பாராளுமன்றம், அதிபர் என்று ஒரு நாட்டிற்கு இருக்கக்கூடிய எல்லாம் உண்டு.

சுருக்கமாக சொல்லப்போனால், இவர்களுடைய உள்விவகாரங்களை (Internal Affairs) எல்லாம் இவர்களே பார்த்துக்கொள்ளலாம், ஆனால் வெளியுறவு மற்றும் ராணுவ அதிகாரங்கள் (External Affairs and Military) எல்லாம் ரஷ்யாவிடம் இருக்கும். அதுமட்டுமல்லாமல், இந்த குடியரசுகளின் அதிபரை, ரஷ்ய அதிபர் தான் தேர்ந்தெடுப்பார்.

என்ன தான் தன்னாட்சி அதிகாரம் இருப்பதாக சொல்லப்பட்டாலும் நடைமுறையில் நிச்சயமாக அது இல்லை. புடின் அவர்கள் ரஷ்யாவின் தலைமை பொறுப்புக்கு வந்த பிறகு குடியரசுகளின் அதிகாரங்களை பெருமளவு குறைத்து விட்டார். 

இங்கு ஒன்றை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். சோவியத் யூனியனில் (USSR) இருந்து பிரிந்து சென்ற 14 நாடுகளும் (1991), சோவியத் யூனியனின் குடியரசுகளாக இருந்தவைதான். இதுதான் இன்றைய ரஷ்யாவின் மற்றுமொரு அச்சம். தற்போது ரஷ்ய கூட்டரசின் பகுதிகளாக உள்ள குடியரசுகளும் சுதந்திரம் கேட்க ஆரம்பித்து விட்டால் ரஷ்யாவின் நிலை? கேட்க ஆரம்பித்துவிட்டாலா, ஏற்கனவே சுதந்திர கோஷம் துவங்கிவிட்டது. செசன்யாவில் தான் இது மிக அதிகம் என்றாலும் மற்ற சில குடியரசுகளிலும் (குறிப்பாக செசன்யாவை சுற்றியுள்ள குடியரசுகளான இங்குஷேடியா (Ingushetia) மற்றும் டகெஸ்டான் (Dagestan)) ஆங்காங்கே கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

ரஷ்யாவின் நிலையிலிருந்து பார்த்தோமானால் அவர்களாலும் இந்த சில குடியரசுகளுக்கு தற்போதைய நிலையில் சுதந்திரம் கொடுக்க முடியாது. ஏனென்றால், சோவியத் யூனியன் கலைந்த பிறகு பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சியடைந்து விட்டது. பசி, பஞ்சம் என்று பிரச்சனைகள் தலை விரித்தாடியது. இன்று ரஷ்யா மெல்ல மெல்ல மீண்டு வருகிறது, அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று,  செசன்யா மற்றும் அதனை சுற்றியுள்ள குடியரசுகளின் இயற்கை வளங்கள் (முக்கியமாக எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள்).

அதுமட்டுமல்லாமல் இந்த குடியரசுகளின் பக்கத்தில் உள்ள காஸ்பியன் கடலில் (Caspian Sea) சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எண்ணெய் வளம். இந்த எண்ணெய்யை மேற்கே உள்ள நாடுகளுக்கு கொண்டுச்செல்ல, செசன்யா மற்றும் அதனைச் சுற்றியுள்ள குடியரசுகளின் வழியாக பைப்லைன் (குழாய்கள்) போடுவதுதான் சிறந்த வழி என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

ஆக, ரஷ்யா, இந்த குடியரசுகளுக்கோ அல்லது இதில் ஏதோ ஒரு குடியரசுக்கோ சுதந்திரம் வழங்கிவிட்டால், வளர்ந்து வரும் தன் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று நினைக்கிறது. 

இந்த ஒரு முக்கிய காரணம் தான் செசன்யாவிற்கு சுதந்திரம் அளிப்பதை தடுக்கிறது. என்ன விலை கொடுத்தாவது செசன்யாவை தன்னிடத்தில் வைத்திருக்கவே ரஷ்யா விரும்புகிறது.

இங்கே சற்று நிறுத்தி செசன்யாவின் வரலாற்றை பார்த்து விடுவோம்.

செசன்யாவின் வரலாற்றை பார்க்கும்பொழுது அது பூகோள ரீதியாக அமைந்திருக்க கூடிய பகுதியையும் பார்த்து விட வேண்டும். செசன்யா, ஐரோப்பிய கண்டத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.



செசன்யா அமைந்திருக்ககூடிய நிலப்பகுதி காகசஸ் (Caucasus Region) என்று அழைக்கப்படுகிறது, இந்த காகசஸ் பகுதியின் வடக்கில் தான் செசன்யா இருக்கிறது. அதன் பக்கத்தில் ரஷ்ய சம்மேளனத்தின் மற்ற குடியரசுகளும் (Republics), நிலப்பகுதிகளும் (Territory) இருக்கின்றன.



தென் காகசஸ் (South Caucasus) பகுதியில் ரஷ்யாவிலிருந்து பிரிந்து சென்ற நாடுகளான ஜார்ஜியா (Georgia), அர்மேனியா (Armenia) மற்றும் அசர்பைஜன் (Azerbaijan) போன்ற நாடுகள் இருக்கின்றன.

இந்த பகுதிக்கு காகசஸ் என்று பெயர் வரக்காரணம் இங்குள்ள காகசஸ் மலை தொடர்களால் (Caucasas Mountains) தான். இந்த காகசஸ் மலைத்தொடர், கிழக்கே காஸ்பியன் கடலில் (Caspian sea) இருந்து மேற்கே கருங்கடல் (Black Sea) வரை நீண்டுள்ளது.



ஆக, காகசஸ் பகுதியின் வடக்கே செசன்யா உள்ளிட்ட ரஷ்யாவின் பகுதிகளும், தெற்கே ரஷ்யாவிலிருந்து பிரிந்து சென்ற நாடுகளும் இருக்கின்றன.

இங்கு, இந்த வட காகசஸ் பகுதியில் உள்ள மற்ற இரு முக்கிய ரஷ்ய குடியரசுகள் இங்குஷேடியா (Ingushetia) மற்றும் டகெஸ்டான் (Dagestan) ஆகும். ஏன் இவற்றிற்கு முக்கியத்துவம்? ஏனென்றால் இந்த பகுதிகள் இல்லாமல் செசன்யாவின்  வரலாற்றை பார்க்கமுடியாது.

இப்போது செசன்யாவின் வரலாற்றை பார்ப்போம்.                    

ரஷ்யர்களுடனான செசன்யர்களின் மோதல் என்பது ஆரம்பித்தது 1785 - 1791ல். அப்போது ரஷ்யா தன் நிலப்பகுதிகளை விரிவுப்படுத்த ஆரம்பிக்க, அதன் ஒரு பகுதியாக காகசஸ்சை ஆக்கிரமைக்க தொடங்கியது. ஆனால் ஆக்கிரமிப்பு என்பது சுலபத்தில் முடிந்துவிடவில்லை. ரஷ்ய படைகள் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டி வந்தது. ஏனென்றால் அந்த பகுதியில் இருந்த மக்களின் போர்த்திறமை அப்படி. கொரில்லா யுத்த முறைகளுக்கு பேர் போனவர்கள் அவர்கள். இன்று வரை மலைப்பகுதியில் செசன்யர்களை தோற்கடிப்பது என்பது ரஷ்ய படைகளுக்கு முடியாத காரியமாகவே இருக்கிறது.

அப்போது ரஷ்யர்களை எதிர்க்க படைகளை திரட்டி போராடியதில் முக்கிய பங்கு ஷேக் மன்சூர் (Sheikh Mansur Ushurma) அவர்களுக்கு உண்டு. ரஷ்ய படையினருக்கு சரியான சவாலாக விளங்கின இவரது படைகள்.

பிறகு 1834 முதல் 1859 வரை, ஷேக் மன்சூர் விட்டுச்சென்ற பணியை இமாம் ஷமீல் (Imam Shameel) தொடர்ந்தார். கடுமையான யுத்தத்திற்கு பிறகு 1859 ல், ரஷ்ய படை காகசஸ் பகுதியை முழுமையாக ஆக்கிரமைத்தது. ரஷ்ய ஆட்சி தொடங்கியது.      

ஆக, இவர்களுடைய நிலப்பகுதிகளை முதலில் ஆக்கிரமைத்தது ரஷ்யர்கள்தான். 

அன்று போராட ஆரம்பித்தவர்கள் தான் இன்றளவும் தங்கள் நிலத்தை மீட்க போராடிக்கொண்டிருக்கிறார்கள்.  

பிறகு, 1917 ஆம் ஆண்டு, ரஷ்ய புரட்சிக்கு பிறகு தங்களை சுதந்திர நாடாக பிரகடனப்படுத்திக்கொண்டார்கள் செசன்னியர்கள். ஆனால் அது நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. ரஷ்ய படைகள் மறுபடியும் (இந்த முறை கம்யுனிச படைகள்) ஆக்கிரமித்து, 1923-இல் செசன்யாவையும் இங்குஷேடியாவையும் சேர்த்து செசன்ய-இங்குஷேடிய தன்னாட்சி பகுதி (Chechen-Ingush Autonomous Region) உருவாக்கப்பட்டது. பிறகு இதுவே 1930-இல், செசன்ய-இங்குஷேடிய தன்னாட்சி குடியரசு (Chechen-Ingush Autonomous Republic) என்று மாறியது.    

1944-ஆம் ஆண்டு, தங்கள் விடுதலைக்காக, ஹிட்லரின் நாஜி படைகளுக்கு செசன்யர்கள் உதவுவதாக ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். அதற்கு தண்டனை என்று, செசன்ய மக்களை கஜகஸ்தானுக்கும், சைபீரியாவிற்கும் நாடு கடத்த உத்தரவிட்டார்.

ஸ்டாலினின் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா? உறுதியாக சொல்ல முடியாது. ஏனென்றால், ஹிட்லரின் நாஜி படைகள் செசன்யாவின் எல்லை வரைக்கூட வரவில்லை. அப்படி அவர்கள் வந்திருந்தால், இரண்டாம் உலகப்போர் சீக்கிரத்தில் முடிந்திருக்காது. ஏனென்றால் ஹிட்லரின் நாஜி படைகள் தோல்வியை தழுவியதற்கு மிக முக்கிய காரணம், அவரது துருப்புகளுக்கு தேவையான எண்ணெய் கிடைக்காததே. ஒருவேளை ஹிட்லரின் படைகள் செசன்யாவிற்குள் வந்திருக்குமானால் அவர்களுக்கு தேவையான எண்ணெய் வளத்தை பெற்றிருப்பார்கள், போரும் விரைவில் முடிவுக்கு வந்திருக்காது.

ஆக, ஸ்டாலினின் குற்றச்சாட்டில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பதை இறைவன் மட்டுமே அறிவான். சுமார் 4-8 லட்சம் மக்கள் நாடுகடத்தப்பட்டனர். இவர்களில் சுமார் ஒரு லட்சம் பேர், மிக மோசமான வானிலை காரணமாக போகும் வழியிலேயே உயிரிழந்தனர்.

செசன்ய-இங்குஷேடிய குடியரசு கலைக்கப்பட்டது, ரஷ்ய வரைப்படத்திலிருந்தும் நீட்கப்பட்டது. இந்த சம்பவம் இன்றளவும் செசன்ய மக்களின் மனதில் ஆறாத வடுவாக இருக்கிறது. ஸ்டாலினுக்கு பிறகு, 1957 ஆண்டு, குருஷேவ் (Khushchev) ஆட்சிகாலத்தில் நாடு கடத்தப்பட்ட செசன்னியர்கள் திரும்ப அழைக்கப்பட்டனர். மறுபடியும் செசன்ய-இங்குஷேடிய குடியரசு நிறுவப்பட்டது. 

பிறகு 30 ஆண்டுகள் அமைதி. 1989 இல், பெர்லின் சுவர் இடிக்கப்பட, சோவியத் ரஷ்யா வீழ்ச்சியடைய துவங்கிய நேரம். நவம்பர் 1990-இல், செசன்யா தன் விடுதலையை அறிவித்தது. அதாவது சோவியத் யூனியனின் அரசியல் சாசன விதி 72-இன் படி (Soviet Constitution Article 72), விடுதலை கோரக்கூடிய குடியரசுகளுக்கு விடுதலை வழங்கப்பட வேண்டும். அதுபடி தங்களை சுதந்திர நாடாக அறிவித்துகொண்டார்கள்.    

Dec 31,1991-இல் சோவியத் யூனியன் முற்றிலுமாக வீழ்ச்சியடைய, சோவியத் யூனியனின்  14 குடியரசுகள் தங்கள் விடுதலையை அறிவித்தன. பிறகு ரஷ்ய சம்மேளனம் உருவாக்கப்பட்டது. Mar 31, 1992-இல் தற்போதைய ரஷ்யாவின் அரசியல் சாசனம் இயற்றப்பட்டது. அதிபராக போரிஸ் எல்சின் (Boris Yeltsin) பொறுப்பேற்றார். இங்குஷேடியா, ரஷ்யாவின் ஒரு குடியரசாக சேர, செசன்யா தன் சுதந்திரத்தை மேலும் உறுதிப்படுத்தியது. ஜெனரல் ஜோகர் டுடதேவ் (General Dzhokhar Dudayev) சுதந்திர செசன்யாவின் அதிபராக பொறுப்பேற்று கொண்டார்.

எல்சின், செசன்யாவின் சுதந்திரத்தை அங்கீகரிக்க மறுத்துவிட்டார்.

சோவியத் யூனியனின் மற்ற குடியரசுகள் சுதந்திர தேசங்களாக மாற, தங்களை ஏன் ரஷ்யா அங்கீகரிக்க மறுக்க வேண்டும் என்பது செசன்யாவின் கேள்வி. அதற்கு எல்சின், சோவியத் யூனியனின் மற்ற குடியரசுகளை போல அல்ல செசன்யா என்று சொல்லிவிட்டார்.

ஆனால் உண்மையான காரணமோ செசன்யாவின் இயற்கை வளங்களை ரஷ்யா இழக்க விரும்பவில்லை என்பதே ஆகும். பொருளாதாரரீதியாக துவண்டு கிடக்கும் ரஷ்யாவை செசன்யாவின் எண்ணெய் மற்றும் கனிம வளங்கள் காப்பாற்றும் என்ற நம்பிக்கைதான் அது.

அது பற்றியெல்லாம் செசன்யாவின் புது அரசாங்கம் கவலைப்படவில்லை. தாங்கள் இப்போது சுதந்திர தேசம் என்று பெருமைப்பட்டு கொண்டார்கள். எல்சினோ  மறுபடியும் செசன்யாவை பிடிக்க படைகளை அனுப்ப, செசன்யர்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் பின்வாங்கியது ரஷ்யப்  படை.

மறுபடியும் 1994-இல், எல்சின் தன் படைகளை அனுப்பினார். பெரும் யுத்தம். இது வரலாற்றில் முதல் செசன்ய யுத்தம் (1994-1996) என்றழைக்கப்படுகிறது. இந்த யுத்தம் தான் செசன்னியர்களின் போர்த்திறனை உலகிற்கு அடையாளம் காட்டியது. ரஷ்ய படைகள் மிரண்டுபோயின. நாம் மேலே பார்த்தபடி செசன்னியர்களை காகசஸ் மலைப்பகுத்தில் சந்திப்பதென்பது இன்று வரை ரஷ்ய படைகளால் முடியாத காரியம், ஆனால் நிலப்பகுதியிலும் அவர்கள் வல்லவர்கள் என்பதை நிரூபித்தது இந்த முதல் செசன்ய போர்தான்.

அதுமட்டுமல்லாமல், செசன்னியர்கள் சகோதரத்துவத்திற்கு பேர் போனவர்கள், அவர்களின் ஒற்றுமையை பறைச்சாற்றியதும் இந்த போர்தான். ஆக, முதல் செசன்ய யுத்தத்தில் ரஷ்ய படைகளுக்கு அதிர்ச்சி தோல்வி. இந்த போரில் செசன்ய அதிபர் டுடதேவ் 1995-இல் ரஷ்ய படைகளால் கொல்லப்பட்டாலும், அஸ்லன் மாஸ்கடோவ் (Aslan Maskhadov) தலைமை தாங்கி நடத்தினார்.

1996-ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தது. சுமார் 40,000-80,000 பேர் பலியான கொடுமையான யுத்தம். செசன்ய நகரங்கள் முற்றிலும் சேதமடைந்தன. மக்கள் வீடுகளை இழந்தார்கள்.




ரஷ்ய அதிபர் எல்சினுக்கும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட செசன்ய அதிபர் மாஸ்கடோவ்விற்கும் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஐந்து ஆண்டுகள் அமைதி காக்க வேண்டும் என்றும், பின்பு செசன்ய விடுதலை பரிசீலிக்கப்படும் என்பதும், இந்த ஐந்து ஆண்டு காலங்களில், ரஷ்யா, முற்றிலும் சேதமடைந்த செசன்ய நகரங்களை சீரமைக்க உதவும் என்பதும் ஒப்பந்தத்தின் முக்கிய சாரம்சங்கள்.

1999-இல், அதிபர் அஸ்லன், செசன்யாவில் இஸ்லாமிய ஷரியத் படி அரசாங்கம், அடுத்த மூன்றாண்டுகளுக்கு செயல்படும் என்று அறிவித்தார்.

ஆனால் பிரச்சனை முடியவில்லை, 1999-ஆம் ஆண்டு, ரஷ்யா மறுபடியும் பெரும் படைகளை செசன்யாவிற்கு அனுப்பியது. இரண்டாவது செசன்ய யுத்தம் ஆரம்பம். படைகளை அனுப்பியதற்கு ரஷ்யா சொன்ன முக்கிய காரணங்கள் இரண்டு.

1. முதல் காரணம், பக்கத்தில் உள்ள டகெஸ்டானில் (Dagestan) உள்ள பிரிவினைவாதிகளுக்கு செசன்ய அரசாங்கம் உதவி புரிவதாக குற்றஞ்சாட்டியது, இதை செசன்ய அரசு மறுத்தது.

ஆனால் செசன்யாவில் இருந்து சில செசன்னியர்கள் டகெஸ்டானிற்கு சென்று அங்கு போராடி வந்தவர்களுக்கு உதவி செய்தனர் என்பது உண்மை.

ஆனால் இங்கு நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். வட காகசஸ் பகுதியில் உள்ள செசன்யா, இங்குஷேடியா (Ingushetia) மற்றும் டகெஸ்டான் (Dagestan) ஆகிய மூன்று பகுதிகளை சேர்ந்த மக்கள் காலங்காலமாக ஒன்றாக இருந்தவர்கள், ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டவர்கள்/கொள்பவர்கள். நாம் முன்னே பார்த்த இமாம் ஷமில், டகெஸ்டானை சேர்ந்தவர் தான்.  

ரஷ்யாவின் இந்த குற்றச்சாட்டு பொருத்தமில்லாதது. ஏனென்றால், 1999-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதி, செசன்யாவின் எல்லையை ஒட்டிய, டகெஸ்டானில் இருந்த இரண்டு கிராமங்களை, போராட்டகாரர்களுக்கு எதிரான நடவடிக்கை என்று கூறி, குண்டு வைத்து தகர்த்தது ரஷ்யா. அதில் பல மக்கள் கொல்லப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தான், டகெஸ்டானில் உள்ள போராட்டகாரர்களுக்கு உதவி செய்யப்போனோம் என்பது அங்கு சென்ற செசன்னியர்களின் வாதம். அவர்கள் காலங்காலமாக இப்படி ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டுதான் இருக்கின்றனர். இது ரஷ்யாவிற்கும் தெரியாததல்ல.    

ஆனால், இதில் அரசாங்கத்திற்கு பங்கில்லை என்பது செசன்ய அரசின் வாதம்.

2. இரண்டாவது காரணம், அந்த ஆண்டு மாஸ்கோவில் நடந்த அடுக்குமாடி குடியிருப்பு குண்டுவெடிப்புகளுக்கு செசன்னியர்கள் தான் காரணம் என்று ரஷ்யா குற்றஞ்சாட்டியது.

1994-1996 ஆண்டுகளில் நடந்த முதல் செசன்ய போரின்போதே அப்படிப்பட்ட எதையும் செய்யாதவர்கள் அவர்கள். இப்போது அமைதி காலத்தில் செய்ய வேண்டிய அவசியம் என்ன? செசன்னியர்கள் இதை முற்றிலுமாக மறுத்தார்கள். இது ரஷ்ய உளவுத்துறையின் செயல் என்று குற்றஞ்சாட்டினர். ரஷ்யாவும் செசன்னியர்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை.    

அதுமட்டுமல்லாமல், Economist அக்டோபர் 1999 இதழில், ரஷ்ய உளவாளிகள் ஒரு கட்டிடத்தில் குண்டு வைத்த போது கையும் களவுமாக மாட்டிக்கொண்டதாக செய்தி வெளியானது.

ஆக, ரஷ்யா 1999-ஆம் ஆண்டு செசன்யாவின் மீது போர்த்தொடுக்க முக்கிய காரணங்கள் இதுதான்.
 
ஆனால் விளக்கங்களை ஏற்க மறுத்த ரஷ்ய அரசு, இந்த முறை மாபெரும் படையை அனுப்பியது. மறுபடியும் மோசமான யுத்தம், செசன்ய படைகள் மலைப்பகுதிகளுக்கு துரத்தப்பட, செசன்ய நகரங்கள் அழிக்கப்பட்டன. நிறைய மக்கள் கொல்லப்பட, மூன்றில் ஒரு பங்கு மக்கள் அகதிகளாக வெளியேறினர். ஐ.நா சபை செசன்யாவில் மனித உரிமை மீறல்கள் பெருமளவில் நடப்பதாக 2000-ஆம் ஆண்டு ரஷ்யாவின் மீது குற்றஞ்சாட்டியது.                                          



அப்போது விளாடிமிர் புடின் (Vladimir Putin) ரஷ்யாவின் புதிய அதிபராக பொறுப்பேற்றிருந்தார். புடினுடைய செசன்ய கொள்கைகளும் அவருக்கு முன் சென்றவர்களின் கொள்கையைப் போன்றே இருக்க, செசன்ய விடுதலை என்பது கேள்விக்குறியானது.

2002-ஆம் ஆண்டு, செசன்யர்கள் சிலர், மாஸ்கோவில் உள்ள ஒரு தியேட்டரில் புகுந்து சுமார் 763 பேரை பணயக் கைதிகளாக பிடித்தனர். செசன்யாவில் போரை நிறுத்த வேண்டும் என்று நிபந்தனை விதிக்க, ரஷ்ய அரசாங்கம் அதனை ஏற்க மறுத்தது. பிறகு ரஷ்ய ராணுவம் விஷப்புகையை தியேட்டருக்குள் செலுத்தி அவர்களை கொன்றது. இதில் மக்கள் சுமார் நூறு பேரும் கொல்லப்பட்டனர்.   

2003-ஆம் ஆண்டு செசன்ய குடியரசுக்கான புதிய அரசியலமைப்பு கொள்கைகள் ரஷ்யாவினால் அறிவிக்கப்பட்டன. இதற்கு செசன்ய மக்களின் ஆதரவு இல்லை. பிறகு, ரஷ்யாவின் பல பகுதிகளில் 2003-2004 ஆண்டு வாக்கில் பல குண்டுவெடிப்புகள் நிகழ்த்த பட்டன. அவை ரஷ்யாவை நிலை குலையச்செய்தன.

அவற்றில் மிக முக்கியமானது மற்றும் சோகமானது, செப்டம்பர் 1-3 தேதிகளில், 2004-ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவம். இந்த காலகட்டத்தில், சுமார் 32 கொரில்லாக்கள் (செசன்னியர்கள், இங்குஷேடியர்கள் மற்றும் ரஷ்யர்கள் இவர்களில் அடங்குவர்) செசன்யாவிற்கு பக்கத்தில் உள்ள பெஸ்லான் (Beslan) என்ற இடத்தில் இருந்த ஒரு பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்தனர் (on Sep 1st, 2004). பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என்று சுமார் 1100 பேரை பணயக்கைதிகளாக பிடித்தனர். இப்போதும் போரை நிறுத்த வேண்டும், ரஷ்ய படைகளை திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் அவர்களது கோரிக்கை.

மூன்றாம் நாள்  (on Sep 3rd, 2004) ரஷ்ய படைகள் பள்ளியை நோக்கி தாக்க ஆரம்பித்தன. பிறகு ரஷ்ய படைகளுக்கும், கொரில்லாகளுக்கும் நடந்த சண்டையில் சுமார் 335 பேர் கொல்லப்பட்டனர், அதில் 156 பள்ளிக் குழந்தைகளும் அடங்குவர். இது ஒரு மிக வேதனையான சம்பவம். ஏற்றுக்கொள்ளபடக்கூடாததும் கூட...      

ஆனால் ரஷ்யா தன் முடிவில் உறுதியாய் நின்றது, தனக்கு ஆதரவான அரசாங்கத்தை செசன்யாவில் நிறுவியது. அன்றிலிருந்து இன்றுவரை ரஷ்யா அமைத்துள்ள பொம்மை அரசாங்கம் (Puppet Government) தான் செசன்யாவில் நடந்து வருகிறது.

2009 ஆம் ஆண்டு (April 2009) ரஷ்யா தன் படைகளை செசன்யாவிலிருந்து திரும்பப்பெற்றது. போராட்டகாரர்களும் சென்ற ஆண்டிலிருந்து (August 2009) சண்டையை தற்காலிகமாக நிறுத்தி உள்ளதாக அறிவித்துள்ளனர்.      

ஆக, செசன்யாவின் பிரச்சனை என்பது, நாம் மேலே பார்த்த படி, ஜார் மன்னர்களாகட்டும், ரஷ்ய புரட்சியின் போது ஏற்பட்ட அரசாகட்டும், ஸ்டாலினாகட்டும், எல்சினாகட்டும், புடினாகட்டும், (தற்போதைய அதிபர்) மெட்வடேவாகட்டும், இவர்கள் அனைவரது செசன்ய கொள்கைகளும் ஒரே போன்று இருந்ததுதான்.

செசன்யா தங்களால் ஆக்கிரமைக்க பட்ட பகுதி என்பதை கண்டும் காணாமல் இருப்பதுதான் அபத்தம். எப்படி ஐரோப்பிய நாடுகள் தங்கள் காலனிகளை விட்டுக்கொடுக்க தயங்கினவோ அதைத்தான் ரஷ்யாவும் செய்கிறது. செசன்யா என்ற தன் காலனியை அது விட்டுத்தர விரும்பவில்லை.  

அப்படி அவர்கள் விட்டு தந்திருந்தால், லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்க மாட்டார்கள். எப்படி உலகம் ஹிட்லரை பார்த்ததோ, அப்படித்தான் செசன்ய மக்கள் ரஷ்ய அரசாங்கத்தை பார்க்கின்றனர்.

கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் ஐந்தில் ஒரு செசன்யர் உயிரிழந்திருக்கிறார். எண்ணற்றவர்கள் அகதிகளாய் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். ரஷ்யாவின் மீது கடுமையான வெறுப்பு உருவாகியிருக்கிறது.

ஆக,

1. ரஷ்யா, செசன்யாவை தன்னுள் வைத்திருக்க முழு முதற்காரணம் அந்த பகுதியின் இயற்கை வளம் மற்றும் காஸ்பியன் கடலில் கண்டெடுக்கப்பட்டுள்ள எண்ணெய் வளம். செசன்யா சுதந்திரம் அடைந்து விட்டால் அது ரஷ்யாவிற்கு தர்ம சங்கடமான நிலையைத் தரும்.

2. இரண்டாவது, செசன்ய விடுதலை, விடுதலை கேட்கக்கூடிய மற்ற குடியரசுகளை தூண்டிவிட்டதாய் அமையும்.                     

3. மூன்றாவது, இஸ்லாமிய ஆட்சி அமைந்து விடும் என்ற அச்சம். இது ரஷ்யாவை பொறுத்தவரை ஒரு ஆச்சர்யமான விஷயம். ஏனென்றால், என்னதான் ரஷ்யாவிற்கும் செசன்னியர்களுக்கும் சில நூற்றாண்டுகளாக சண்டை நடந்து வந்தாலும், 2001-ஆம் ஆண்டுக்கு முன்வரை, அதை, ரஷ்யா மதச்சாயம் பூசி பார்த்ததில்லை.

அங்கு முஸ்லிம்கள் இல்லாமல் வேறு மதத்தினர் இருந்து, அவர்கள் ரஷ்யாவிடமிருந்து விடுதலை கேட்டிருந்தால் அவர்களுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டிருக்கும். ரஷ்யர்களை பொறுத்தவரை அவர்கள் செசன்யர்கள், அவ்வளவுதான்.

அப்படியே அவர்களை போராளிகள் என்று சொல்லாவிட்டாலும், செசன்ய தீவிரவாதிகள் என்றுதான் அழைப்பர், இஸ்லாமிய/முஸ்லிம் தீவிரவாதிகள் என்று மதச்சாயம் பூசியதில்லை.

ஒருவேளை செசன்யா சுதந்திரம் அடைந்தால், நிச்சயம் அங்கு இஸ்லாமிய ஷரியத்படி தான் ஆட்சி அமையும். அதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம். காலங்காலமாக செசன்னியர்கள் விரும்பியதும், செயல்படுத்தியதும் அதைத்தான். இஸ்லாம் என்பது அவர்களின் வாழ்வில் ஒன்றிணைந்தது. இஸ்லாத்தை பிரித்து செசன்னியர்களின் வாழ்வை பார்க்க முடியாது.

இதெல்லாம் ரஷ்யாவிற்கும் தெரியாமல் இல்லை. அவர்கள் என்ன இன்று நேற்றா இவர்களுடன் சண்டையிடுகிறார்கள்?, ரஷ்யாவிற்கு இஸ்லாமிய ஆட்சியெல்லாம் ஒரு பிரச்சனையாக இருந்ததில்லை. அதுமட்டுமல்லாமல் ரஷ்யர்களில் முஸ்லிம்களும் அதிகம் (There are good number of Ethnic Russian Muslims).

இப்போது இஸ்லாமிய ஆட்சி, இஸ்லாமிய தீவிரவாதம் என்று அவர்கள் வார்த்தைகளை உபயோகப்படுத்துவதெல்லாம், உலக நாடுகளை செசன்ய பிரச்சனையிலிருந்து விலக்கி வைக்கத்தான். நாங்கள் இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்த்து தான் போராடுகிறோம் என்று அறிவித்துவிட்டால் யார் செசன்யாவிற்கு ஆதரவு அளிப்பார்கள்? அதுதான் அவர்கள் இஸ்லாமிய ஆட்சி, இஸ்லாமிய தீவிரவாதம் என்பது போன்ற வார்த்தைகளை போடுவதற்கு காரணம்.

இந்த தந்திரம் இப்போது நன்றாகவே வேலை செய்கிறது, 2001-ஆம் ஆண்டுக்கு முன் ரஷ்யாவை கண்டித்த நாடுகளெல்லாம் இப்போது வாய் மூடி இருக்கின்றன, ஏனென்றால் ரஷ்யா இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்த்தல்லவா போராடுகிறது?

உலக நாடுகள் வாய்மூடி இருந்தாலும் மனித உரிமை அமைப்புகள் ரஷ்யாவின் அத்துமீறலை கண்டித்து தான் வருகின்றன.

சரி, ரஷ்யாவின் குற்றச்சாட்டுகளுக்கு செசன்னியர்கள் என்ன சொல்கின்றனர்?

1. ரஷ்யா தங்கள் மீது சுமத்தும் பெரும்பாலான தீவிரவாத செயல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் பொய். அந்த குண்டுவெடிப்புகள் எல்லாம் ரஷ்ய உளவுத்துறையே நடத்தி தங்கள் மீதான போரை நியாயப்படுத்திவருகின்றது என்பது. அவர்கள் நிலையிலிருந்து பார்த்தால் இது உண்மைதான். ஏனென்றால் நிறைய குற்றச்சாட்டுகள் ரஷ்யாவினால் நிரூபிக்கப்படவில்லை.   

2. செசன்யா சுதந்திர நாடாகி இஸ்லாமிய ஷரியத்படி ஆட்சியமைந்தால், செசன்யாவில் மத பேதம் பார்க்காமல் அனைவரும் நிம்மதியாக வாழ வழிவகை செய்யப்படுவார்கள் என்பது இரண்டாவது.

செசன்ய மக்கட்தொகையில் கணிசமான அளவில் கிருத்துவர்களும் (8-10%), யூதர்களும் உள்ளனர்.

1944-ஆம் ஆண்டு ஸ்டாலினால் நாடு கடத்தப்பட்டபோது, இவர்களுடைய வீடுகளை பாதுகாத்து, இவர்கள் 1957-ஆம் ஆண்டு நாடு திரும்பியவுடன், இவர்களிடம் ஒப்படைத்தவர்கள் செசன்ய யூதர்கள். இன்றளவும் அந்த நிகழ்ச்சி செசன்னியர்களின் மனதில் பசுமையாக இருக்கிறது, தங்களின் அடுத்த தலைமுறைக்கும் மறக்காமல் இந்த நிகழ்ச்சியை சொல்லிக்கொடுக்கின்றனர்.

அதுபோல முதல் செசன்ய யுத்தத்தில் இவர்களுக்கு பெரிதும் உதவி புரிந்தவர்கள் செசன்ய கிருத்துவர்கள். செசன்னியர்களுடன் சேர்ந்து போரிலும் பங்கேற்றிருக்கிறார்கள். செசன்யாவில் மதக்கலவரம் ஏற்படுத்த ரஷ்ய உளவுத்துறை செய்த எந்த ஒரு முயற்சியும் பலனளிக்கவில்லை, அதற்கு காரணம் இவர்களது ஒற்றுமை.      

3. செசன்யா உருவானால், அது, ரஷ்யாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்பது இவர்களுடைய மூன்றாவது கருத்து. ரஷ்யா தங்களை பிரித்து விடுவதன் மூலம் அது தோல்வியடைந்ததாய் ஆகாது, அது ரஷ்யாவில் நிலையான அரசாங்கத்தை (Stability) உருவாக்க உதவும் என்பது செசன்னியர்களின் நிலை.  

சரி, இன்றைய சூழ்நிலைக்கு வருவோம், இனிமேலும் ரஷ்யா செசன்னியர்களுடன் போராடுவதை விரும்பவில்லை. இறைவன் நாடினாலன்றி அவர்களால் செசன்னியர்களை முழுமையாக வெற்றிக்கொள்ள முடியாது. நிலப்பகுதிகளில் வேண்டுமானால் அவர்கள் நினைத்ததை செய்யலாம், ஆனால் காகசஸ் மலைப்பகுதிகளிலோ அவர்களால் இன்று வரை வெற்றி பெறமுடியவில்லை. தற்போது அமைதி நிலவினாலும் எப்போது செசன்னியர்கள் மலைகளிலிருந்து படையோடு வருவார்கள் என்ற அச்சம் இருந்து கொண்டேதானிருக்கும் (ஏனென்றால் 1996 ஆம் ஆண்டு இப்படித்தான் நடந்தது). ரஷ்யா, இதையெல்லாம் நன்கு உணர்ந்தேயிருக்கிறது.

அதற்கு செசன்னியர்களை சமாதானப்படுத்துவது தான் ஒரே வழியென்று முயன்றுவருகிறது.

யார் தான் நினைத்திருப்பர், ரஷ்யா OIC இல் (Organisation of Islamic Conference) சேர விருப்பம் தெரிவிக்கும் என்று?

அதுமட்டுமல்லாமல், 2050-ஆம் ஆண்டு வாக்கில், ரஷ்யாவின் மக்கட்தொகையில் 50% முஸ்லிம்கள் இருப்பர் என கணக்கிடப்பட்டுள்ளது. அதுபோல இன்றைய ரஷ்யாவில் வயதானவர்களின் எண்ணிக்கை தான் அதிகம். ஆனால் செசன்யாவிலோ இளைஞர்கள் எண்ணிக்கை அதிகம் (Chechnya Birth rate is 26.4 per 1000 individual while in Russia it was 11.28 per individual, 2007 Report).

ஆக ரஷ்யா தன் எதிர்காலத்தை இந்த இளைஞர்களை வைத்து தான் பார்க்கிறது.

ரஷ்யாவின் இந்த அணுகுமுறைக்கு செசன்னியர்களின் பதில் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.           

நாம் மேலே பார்த்த்து போன்று, ரஷ்ய-செசன்ய பிரச்சனையின் முக்கிய சாராம்சம் இவைதான்.

என்று ரஷ்யா, செசன்யாவை முழுமையாக தன்னிடத்தில் இருந்து விலக அனுமதிக்கிறதோ அன்றுதான் இந்த பிரச்சனை முழுமையாய் முடியும்.

ஒருவேளை, ரஷ்யா எதிர்பார்ப்பதுபோல, செசன்னியர்கள் அவர்களுடன் சமாதானமாக போனாலும் அமைதி திரும்பலாம். ஆனால் செசன்னியர்கள் கடந்த காலத்தை மறப்பார்களா என்பதுதான் இப்போது ரஷ்யாவிற்கு இருக்கும் மாபெரும் சவால்....  

இறைவன் இந்த மக்களுக்கு அவர்கள் எதிர்ப்பார்க்கிற அமைதியையும், பாதுகாப்பையும் விரைவில் வழங்குவானாக...ஆமின்...

இறைவன் நம் எல்லோரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்..

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

My Sincere Thanks to:
1. Br.Roman Khalilov, Then Head of the political department of the chechen foreign ministry.
2. Br.Ferdouz Shabaz Adel, Then personal translator for Aslan Maskhadov.
3. NASA, for the satellite pic of Caucasas mountains.
4. BBC, for the War pictures taken from capital of Chechnya, Grozny.  
5. Global Crisis Website.

References:
1. The Constitution of the Russian Federation - constitutiondotru.
2. History of Chechen war - Ferdouz Shabaz Adel.
3. Independence and State of Chechnya - The Eurasian Politician, Issue 2.
4. A short Introduction to the Chechen problem - Alexandru Liono.
5. The Chechen Problem - Mark.S.Watson.
6. Time line of Key events in Chechnya - David Johnson and Borgna Brunner.
7. Chechnya - Lycos.
8. The Conflict between Russia and Chechnya - Conflict research Consortium.
9. Crisis in Chechnya - Anup Shah in Global Crisis.
10. Q&A: The Chechan Conflict - BBC dated 10th July 2006.
11. The rise and fall of Chechen independence Movement - David Storobin, Global Politician.
12. What does Russia see in Chechnya - Andrew Meier.
13. Council of Europe failing on Russia - Amnesty International and Human Rights watch.
14. Russian Muslims between Oil and Federalism - Elmira Akhmetova.
15. Caucasas, North Causasas, Chechnya - Wikipedia.
16. Meaning of Federation - Answersdotcom.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ     
            

Friday, March 19, 2010

முஸ்லிம்களுக்கு ஏன் இவ்வளவு பெருமை என்று வியந்தேன்...



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்..

இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக புதிதாய் ஏற்றுக்கொள்ளும் சகோதர/சகோதரிகள் சந்திக்கக்  கூடிய சவால்கள் சொல்லிமாளாதது.

சமீபத்தில், ஹங்கேரியைச் சேர்ந்த ஆயிஷா என்ற சகோதரி Reading Islam இணையதளத்திற்கு அனுப்பிய மின்னஞ்சல் அந்த தளத்தில் வெளியாகி இருந்தது. இஸ்லாத்தை இளவயதில் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் சந்திக்கக்கூடிய சவால்களை அழகாக வெளிப்படுத்தியது அந்த கடிதம். அந்த மின்னஞ்சல் உங்கள் பார்வைக்காக...
      
"என் பெயர் ஆயிஷா. ஹங்கேரியின் வடக்கு பகுதியைச் சேர்ந்தவள். நான் இஸ்லாத்தைப் பற்றி என் மேல்நிலை வகுப்பில் படித்திருக்கிறேன், ஏனென்றால் ஹங்கேரி சுமார் 150 ஆண்டுகள் துருக்கியின் ஆக்கிரமைப்பில் இருந்த நாடு.

பிறகு, பல்கலைகழகத்தில் மூலக்கூறு உயிரியல் (Molecular Biology) வகுப்பில் சேர்ந்த போது நிறைய வெளிநாட்டு முஸ்லிம் மாணவர்களை சந்தித்தேன்.

ஏன் முஸ்லிம்கள், தங்களை முஸ்லிம்கள் என்று கூறிக்கொள்வதில் இவ்வளவு பெருமை கொள்கின்றனர் என்பதை அறிய எப்போதுமே மிகுந்த ஆவல்.

நான் கத்தோலிக்க பின்னணியை கொண்டவள், நல்ல மதம்தான், ஆனால் எப்போதுமே என் மதத்தை பற்றி மனதில் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தேன், அதுமட்டுமல்லாமல் ஒரு சில விசயங்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உதாரணத்துக்கு, எப்படி கடவுளுக்கு மகன் இருக்க முடியும், அதுபோல திரித்துவ கொள்கையை (Trinity) என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஒருமுறை, என் நண்பர்களுடன் இரவு உணவு உட்கொண்டிருந்தபோது, பாங்கு ஆரம்பித்தது. ஒரு நண்பர் அதனை நிறுத்துமாறு கூறினார், நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். அது என்னை மிகவும் கவர்ந்தது, நிச்சயமாக அதில் ஏதோ ஒன்று என் இதயத்தை தொடுவதாக உணர்ந்தேன்.

பிறகு, கோடைக்காலத்தில், நான் ஏன் இணையத்தளத்திலிருந்து குரான் சம்பந்தபட்ட ஒரு பதிவை பதிவிறக்கம் (Download) செய்தேனோ தெரியவில்லை. அதனை நான் அரபியில் கேட்டுக்கொண்டே ஆங்கிலத்தில் படித்தேன். பிறகு, நான் இஸ்லாமை பற்றி நிறைய சிந்திக்க துவங்கிவிட்டேன், அதுமட்டுமல்லாமல் இஸ்லாம் தொடர்பான நிறைய நூல்களை படித்தேன்.

இரண்டு மாத தீவிர யோசனைக்கு பிறகு இறுதியாக இஸ்லாத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டேன். என் இரு நண்பர்கள் முன்பாக ஷஹாதா கூறினேன்...
"வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவன் தூதரென்றும் சாட்சியம் கூறுகிறேன்"  
நான் என் கலாச்சாரத்துக்கு எதிராகவும் என் குடும்பத்திற்கு எதிராகவும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன், குறிப்பாக என் தாயாருக்கு இதில் சுத்தமாக உடன்பாடு இல்லை.   

சகோதரி ஆயிஷா 

நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சில நாட்களில் ரமலான் மாதம் வந்தது. இஸ்லாத்தில் என்னுடைய புது வாழ்வை ரமலான் மாதத்தில் இருந்து தொடங்குவதென முடிவெடுத்தேன். அல்ஹம்துலில்லாஹ்...ரமலான் மாதத்தை வெற்றிகரமாக கடந்தேன். ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதியிலிருந்து தொழ ஆரம்பித்தேன். துவக்கத்தில் எனக்கு மிக கடினமாக இருந்தது, ஏனென்றால் என்னை சுற்றி இருந்த முஸ்லிம்கள் யாரும் இஸ்லாத்தை சரிவர பின்பற்றவில்லை, அதனால் நான் யாரிடமும் கேட்கவில்லை. 

எப்படி தானாக தொழுவது என்று இணையதளங்களில் இருந்து கற்றுக்கொண்டேன், ஏனென்றால், யாரும் எனக்கு எப்படி தொழ வேண்டும் என்றோ அல்லது உளு எப்படி செய்ய வேண்டும் என்றோ அல்லது இஸ்லாத்தின் சட்டத்திட்டங்களையோ சொல்லித்தரவில்லை.

ஒருமுறை என் நண்பர் ஒருவர் சொன்னது என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது. அவர் கூறினார், உன்னால் நிச்சயமாக இஸ்லாத்தை புரிந்து கொள்ள முடியாது, ஏனென்றால் நீ முஸ்லிமாக பிறக்கவில்லை என்று".

(இப்படி சொன்ன அந்த சகோதரருக்கு, இஸ்லாமை பற்றிய தெளிவான அறிவை இறைவன் அளிப்பானாக...ஆமின்)   

"நான் ரமலானில் நோன்பு நோற்க விருப்பப்படுகிறேன் என்று நான் அவரிடம் கூறியபோது, அவர் கூறினார், ரமலான் என்பது பசியோடு இருப்பது மட்டும் அல்ல என்று. இது நடந்தபோது நான் இஸ்லாத்திற்கு மிக புதியவள், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு ஒரு மாதம் தான் ஆகியிருந்தது. 

அப்போது நான் மிகவும் பயந்துவிட்டேன்
  • என்னால் அரபியில் தொழ முடியாமலேயே  போய்விட்டால் என்ன செய்வது?
  • என்னால் சரியாக தொழ முடியாவிட்டால் என்ன செய்வது? 

அதுமட்டுமல்லாமல் என்னிடம் ஹிஜாபோ, தொழுகை விரிப்போ கூட இல்லை, உதவி செய்யவும் யாருவில்லை. மிகவும் பயந்துவிட்டேன்... 

ஆனால், நான் தொழ ஆரம்பித்தபோது, இறைவன் நிச்சயமாக இப்போது என்னைப் பார்த்து புன்னகைத்து கொண்டிருப்பான் என்றே நினைத்தேன். 

ஏனென்றால், சூராக்களையும் தொழும் முறைகளையும் ஒரு தாளில் எழுதிக்கொள்வேன், பின்னர் அந்த தாளை என் வலது கையில் வைத்துக்கொண்டு சத்தமாக படிப்பேன், பிறகு ருக்கூ செய்வேன், அப்படியே படிப்பேன்...இப்படியே தொடரும்... நிச்சயமாக நான் செய்வது வேடிக்கையாய் இருக்கிறதென்று எனக்கு தெரியும். 

பிறகு வெற்றிகரமாக சூராக்களை அரபியில் மனப்பாடம் செய்துக்கொண்டேன், அதன் பிறகு பிரச்சனை இல்லை.

பிறகு facebook வந்தேன், நிறைய நண்பர்களும், சகோதரிகளும் கிடைத்தார்கள். அந்த சகோதரிகளிடமிருந்து நிறைய அன்பையும் துணிவையும் பெற்றேன். பிறகு முஸ்லிம் ஒருவர் என்னை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். அவர்தான் எனக்கு ஹிஜாபும், தொழுகை விரிப்பும், ஒரு இஸ்லாமிய நூலையும் பெற்றுத் தந்தார்.

அதுமட்டுமல்லாமல், ஜோர்டானிலிருந்து என் முதல் அரபி குரானை தபால் மூலம் பெற்றேன், ஏனென்றால் இங்கு அதை வாங்கமுடியாது. இப்போது சுமார் ஒரு வருடமாக நான் ஹிஜாப் அணிகிறேன்.

என் தாயுடன் மிக கஷ்ட காலங்களை கடந்து வந்தேன். அவர் என்னிடம் கூறுவார், நீ தீவிரவாதி ஆகிவிடுவாய் என்று. எப்படி என் பழைய மதத்தை விட்டு விலகி வந்தேனோ, அதுபோல என் தாயாரையும், என் நாட்டையும் விட்டு விலகிவிட எண்ணினேன். அவர் எல்லா பன்றி இறைச்சிகளையும் குளிர் சாதன பெட்டியில் வைத்துவிடுவார், நான் அவற்றை உண்ண மறுப்பேன், பிறகு அது அவருக்கும் எனக்குமிடையே பெரும் வாக்குவாதமாக மாறிவிடும்..

அவரால் நான் தொழுவதையோ, ஹிஜாப் அணிந்திருப்பதையோ பொறுத்துக்கொள்ள முடியாது. அதனால் நான் மாடியில் என் அறையில் தொழுதுக் கொள்வேன். நான் ஹிஜாப் அணிந்திருக்கும்போது என்னை திரும்பிக்கூட பார்க்கமாட்டார், அப்போது கூறுவார் "நான் ஒரு கிருத்துவ மகளைத் தான் பெற்றெடுத்தேன், ஹிஜாப் அணிந்த முஸ்லிமை அல்ல" என்று...

ஆக, எங்களுக்குள் கடுமையான பிரச்சனைகள். ஆனால் நான் எப்பொழுதும் என் தாயாரிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதில்லை. அல்ஹம்துலில்லாஹ்.... இப்பொழுது என் தாயார் அமைதியாகிவிட்டார், நான் இஸ்லாத்தை தழுவியதையும் ஏற்றுக்கொண்டு விட்டார். அதற்காக நான் அல்லாஹ்விற்கு நன்றி சொல்கிறேன். இப்போதெல்லாம் நான் ஹிஜாபுடனே வெளியே செல்கிறேன், என் தாயாரும் ஒன்றும் சொல்லுவது இல்லை.

என் தந்தையுடன் நான் என் வாழ்நாளில் பேசியதே இல்லை, அவரும் என்னைப் பார்க்க விரும்பியதில்லை. ஆனால் இப்போதோ, இஸ்லாமினால், நான் அவரிடம் நெருங்க ஆரம்பித்திருக்கிறேன், அதனால் இப்போதெல்லாம் அவர் எங்களை அடிக்கடி வந்து பார்க்கிறார்.

ஆம், என் வாழ்க்கை ஒரு மிகப்பெரிய சோதனை, ஆனால் அதற்காக நான் இறைவனுக்கு நன்றி சொல்லுகிறேன், அதுமட்டுமல்லாமல் எனக்கு பொறுமையும் நம்பிக்கையும் இருக்கிறது. கியாமத் நாளில் நான் அவர்களுக்கு நன்றி உடையவளாய் இருப்பேன்.

நான் மென்மேலும் என்னை தூய்மைப்படுத்திக்கொள்ளவும், என் மார்க்கத்தை பற்றி அறிந்து கொள்ளவும் முயற்சி செய்கிறேன்.

அல்லாஹ் என் மீது என்ன விதித்திருக்கிறானோ அதுதான் நடக்கும். அதனால் இறைவன் எனக்கு அளித்த இந்த வாழ்வை அழகான முறையில் வாழவே விரும்புகிறேன்.

நான் இப்போது டெப்ரசென்னில் (Debrecen, the second largest city in Hungary) மற்றவர்களுக்கு உதவிக் கொண்டிருக்கிறேன். சமீபத்தில் நான் ஒரு பணி திட்டத்தை துவங்கியுள்ளேன், அது, மக்களிடமிருந்து, ஏற்கனவே பயன்படுத்திய உடைகளை சேகரித்து இங்குள்ள அகதிகள் முகாமில் இருக்கும் மக்களுக்கு கொடுப்பதாகும். யுத்தங்களினால் வீடில்லாத நிறைய முஸ்லீம்களும் இங்கு இருக்கின்றனர். அதனால், உடைகளை சேகரித்து அங்கு சென்று அவர்களுக்கு கொடுத்தோம். அங்கு உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாகிஸ்தானி ரொட்டிகள் தயாரித்து கொடுத்தேன், என்னுடைய இந்த செயல் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது, அதனை பார்க்கும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாய் இருந்தது.

முன்பெல்லாம் எனக்கு தொந்தரவு தரும் வகையில் யாராவது பேசினால் மிகவும் கோபப்படுவேன், ஆனால் இப்போதோ, நான் போகுமிடமெல்லாம் மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாய் இருக்க விரும்புகிறேன்.

அதுமட்டுமல்லாமல், இஸ்லாத்தை ஏற்க விரும்புகிறவர்களுக்கும்,புதிதாய் ஏற்றவர்களுக்கும் வழிகாட்ட முயற்சிக்கிறேன். ஒருநாள் இங்கு, புதிதாய் இஸ்லாத்தை தழுவிய இரண்டு ஹங்கேரிய சகோதரிகளை சந்தித்தேன். அவர்களுக்கு இஸ்லாமிய புத்தகங்களையும், என்னுடைய தொழுகை விரிப்புகளையும், குரானையும் கொடுத்தேன். அல்ஹம்துலில்லாஹ், நாங்கள் மூவரும் சேர்ந்தே தொழுதோம், அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி.

முஸ்லிம்களாகிய நாங்கள் அருமையானவர்கள், நட்பானவர்கள், நல் இதயத்தை உடையவர்கள் என்ற பிம்பத்தை விட்டுச் செல்லவே முயற்சிக்கிறேன்.

நான் இஸ்லாத்தை தழுவி ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. நான் இப்போது, குரானை ஓதுவதற்காக அரபி கற்றுக் கொண்டிருக்கிறேன். தற்போது குரானை ஹங்கேரி மொழியில் படிக்கிறேன், தொழுகைகளை தவறாமல் நிறைவேற்றுகிறேன், குரானையும் சுன்னாவையும் சரியாக பின்பற்ற முயற்சிக்கிறேன், இஸ்லாத்தை மெம்மேலும் புரிந்து கொள்ள நிறைய நூல்களை படிக்கிறேன்......

அஸ்ஸலாமு அலைக்கும்.....

ஆயிஷா"


சுப்ஹானல்லாஹ்...

நிச்சயமாக இறைவன் தான் நாடுவோரை நேர்வழியில் செலுத்துகிறான்...  

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

My Sincere thanks to:
1. Reading Islam website - readingislam.com

Reference:
1. I wondered why Muslims are so proud - by Sister.Aysha, readingislam.com

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Tuesday, March 16, 2010

அஹ்மத் தீதத்



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்

அஹ்மத் தீதத் அவர்கள், 

  • ஒரு முஸ்லிம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான உதாரணம்
  • ஒரு முஸ்லிமின் மன உறுதிக்கு எடுத்துக்காட்டு
  • எண்ணற்றவர்களை தாவாஹ்  பணிக்கு அழைத்து வந்தவர்
  • எண்ணற்றவர்களை இஸ்லாத்தின்பால் அழைத்து வந்தவர் 
  • கிருத்துவ மிசனரிகளை எப்படி எதிர்க்கொள்வது என்று கற்றுத் தந்தவர்களில் ஒருவர்.
  • தென் ஆப்பிரிக்காவில் ஒரு வலிமையான, நேர்த்தியான இஸ்லாமிய சமூகத்தை உருவாக்கியவர்களில் ஒருவர்.

அஹ்மத் தீதத் (Ahmed Deedat, 1918-2005) அவர்கள் இந்தியாவில் பிறந்தவர், தென் ஆப்ரிக்காவில் வளர்ந்தவர். IPCI (Islamic Propagation Centre International, Durban, South Africa) யை நிறுவியவர். 

1980-1996 இடையேயான காலக்கட்டம் இவரது தாவாஹ் பணியில் முக்கியமானது. இந்த காலக்கட்டத்தில் தான் தீதத் அவர்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து பல பிரபல கிருத்துவ மிசனரிகளுடன் பல்வேறு தலைப்புகளில் விவாதம் மேற்கொண்டு அவர்களை திணறடித்தார். ஒவ்வொரு விவாதமும் நம் அறிவுக்கு உணவு, ஒவ்வொரு கேள்வியும் கூர்மை.          

இன்றளவும் இவரது நூல்கள் மற்றும் விவாத வீடியோக்கள் உலகளாவிய முஸ்லிம்களுக்கு கிருத்துவ மிசனரிகளை எதிர்க்கொள்ள உதவுகிறது. இன்றளவும் இவரது நூல்களை படித்து பைபிளை பற்றி அறிந்துகொண்டு, இஸ்லாமை படிக்கத் துவங்கியவர்கள் பலர்.


இன்றளவும் இஸ்லாத்திற்கு வரும் கிருத்துவர்களில் பலர், தாங்கள் அஹ்மத் தீதத் அவர்களின் நூல்களை/வீடியோக்களை படித்ததாலேயே/பார்த்ததாலேயே பைபிளின் மற்றொரு பக்கத்தை பற்றி அறிந்து கொண்டோம் என்றும், இஸ்லாத்தை பற்றி அறிந்து கொள்ள ஆர்வப்பட்டோம் என்றும்  கூறுவதை பார்க்கலாம்.          

இங்கு அவரது சில விவாதங்களில் இருந்து சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்...இன்ஷா அல்லாஹ்...    


1. Ahmed Deedat and Tele-Evangelist Jimmy Swaggard, at University of Louisiana USA, November 1986.
Debate Title: Is the Bible God's Word?

அமெரிக்காவின் லூசியானா பல்கலைகழகத்தில் ஜிம்மி ஸ்வாகர்ட் (Jimmy Swagard) அவர்களுடன் அஹ்மத் தீதத் அவர்கள் கலந்து கொண்ட விவாதம் சுவாரசியமானது. ஜிம்மி ஸ்வாகர்ட், அன்றைய காலத்தில் அமெரிக்காவில் மிகப்  பிரபலமானவர். தொலைக்காட்சியில் தோன்றி கிருத்துவத்தை போதித்து வந்தவர் (Tele Evangelist).  

விவாதத்தின் நடுவே ஜிம்மி ஸ்வாகார்ட் அவர்கள் பின்வருமாறு கூறினார்,

"நான் இந்த விவாதம் ஆரம்பிக்கும் முன் அஹ்மத் தீதத் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன், அப்போது அவரிடம் கூறினேன், மிஸ்டர் தீதத் உங்கள் மதம் நிறைய பெண்களை மணமுடிக்க உங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது என்று, அப்போது தீதத் அவர்கள் குறுக்கிட்டு நான்கு வரை மட்டுமே என்றார். 


நான் கூறினேன், பாருங்கள் தீதத் உங்கள் மதம் நான்கு பெண் வரை மணமுடிக்க உங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது, ஆனால் எங்கள் மதம் எனக்கு ஒரு பெண்ணை(?) மட்டுமே மணமுடிக்க அனுமதி அளிக்கிறது, அதனால் நான் முதல் தடவையே சிறந்த பெண்ணை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்" 

இதை அவர் சொல்லி முடித்தவுடன் அரங்கத்தில் பலத்த கைதட்டல்கள். ஜிம்மி ஸ்வாகர்ட், வசீகரமாக பேசக்கூடியவர், அதனாலேயே அவருக்கு ரசிகர் கூட்டம் அதிகமிருந்தது. 

இந்த விவாதம் நடந்த முடிந்த சில மாதத்தில் ஜிம்மி ஸ்வாகர்ட் ஒரு விபச்சார வழக்கில் சிக்கினார். வாரம் ஒருமுறை விலைமாதரிடம் சென்று வந்திருக்கிறார் அவர். அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கிய சம்பவம் அது. ஒரே நாளில் அவரது செல்வாக்கு சரிந்து விட்டது. 

இந்த சம்பவத்தை பிறிதொரு விவாதத்தில் குறிப்பிட்ட தீதத் அவர்கள் 

"அன்று ஜிம்மி ஸ்வாகர்ட் என்னிடம்.....(இங்கு மேலே ஸ்வாகர்ட் பேசியதை போட்டுக்கொள்ளவும்)....என்று கூறினார். இப்போதுதான் தெரிகிறது, அவர் முதல் தடவையே தேர்ந்தெடுத்த பெண் அவருக்கு சிறந்தவளாக இல்லையென்று" 

இப்படி சொன்னதுதான் தாமதம். அரங்கம் முழுவதும் சிரிப்பொலி ... 

ஜிம்மி ஸ்வாகர்ட் அவர்களுடனான அதே விவாதத்தில் மற்றுமொரு சுவையான சம்பவம். அஹ்மத் தீதத் அவர்கள் ஒரு வலிமையான வாதத்தை முன்வைத்தார். அது, பைபிளின் சில பகுதிகள் ஆபாசம் நிறைந்ததாக இருக்கிறது என்றும், அந்த பகுதிகளை ஒரு ஆண் தன் மனைவி முன்போ, சகோதரி முன்போ, மகள் முன்போ படிக்க முடியாது என்றும்

"இதோ என்னிடம் பைபிளின் அந்த பகுதிகள் (Ezekiel 23) இருக்கிறன, ஜிம்மி ஸ்வாகர்ட் இந்த மக்கள் கூட்டத்தின் முன் அதனை படித்து காட்டட்டும். நிச்சயமாக அவரால் முடியாது. யாராலும் முடியாது. ஏனென்றால் அவை அந்த அளவிற்கு மோசமானவை. அப்படி ஸ்வாகர்ட் படித்துவிட்டால் நூறு டாலர்கள் அவருக்கு" 

என்று தன்னிடம் இருந்த அந்த பகுதிகளின் நகல்களை ஸ்வாகர்ட் முன் நீட்டினார். ஸ்வாகர்ட், தீதத் அவர்களின் சவாலுக்கு விவாதத்தில் பதிலளிக்கவில்லை.

பின்னர் கேள்வி நேரத்தில் ஒரு நபர் அதே கேள்வியை முன்வைக்க, ஸ்வாகர்ட் அவர்களுக்கு தர்மசங்கடமாய் போயிற்று. சிறிது நேரம் அமைதி காத்தவர், பின்னர் எழுந்து வந்து அந்த பகுதிகளை படிக்க தயாரானார். ஆனால் அஹ்மத் தீதத் அவர்கள் கொடுத்த நகலை படிக்கவில்லை, சிறிது நேரம் அஹ்மத் தீதத் அவர்கள் கொடுத்த நகலை உற்று நோக்கியவர், பின்னர் என்ன நினைத்தாரோ தன்னுடைய பைபிளில் இருந்து படிக்க ஆரம்பித்தார்.

இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும், தீதத் அவர்கள் கொடுத்தது சமீபத்தைய பைபிள் பதிப்பிலிருந்து (New International Version) எடுத்தது. அதனுடைய ஆங்கிலம் எளிமையாக இருக்கும், யாருக்கும் சட்டென புரிந்துவிடும்.

ஆனால் ஸ்வாகர்ட் அவர்கள் படித்ததோ பழைய ஆங்கிலம் கொண்ட கிங் ஜேம்ஸ் பதிப்பு (King James Version) அதனுடைய ஆங்கிலம் சட்டென புரியாது. தீதத் அவர்களும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, எதையாவது படிக்கட்டும், உண்மை மக்களுக்கு (சிறிதளவாவது) தெரிந்தால் போதும் என்று இருந்து விட்டார் போலும்.

இங்கு மற்றொன்றையும் கவனிக்க வேண்டும். எப்போதும் ஒரு வித வசீகரத்துடன் நிறுத்தி நிதானமாய் பைபிளை வாசிக்கும் ஸ்வாகர்ட் அவர்கள், அந்த பகுதியை வேகமாய் படித்தார், ஒருவித பதற்றத்திலேயே அந்த நேரத்தை கையாண்டார். படித்து முடித்தவுடன் நூறு டாலர்களை பெற்றுக்கொண்டு அதை அந்த அரங்கத்திற்கு வாடகை கட்ட தன்னாலான தொகை என்று கொடுத்துவிட்டார்.



அஹ்மத் தீதத் அவர்களுக்கும் மகிழ்ச்சி. பின்ன இருக்காதா என்ன, இது தானே அவர் எதிர்பார்த்தது... கிருத்துவ மக்கள் அதிக அளவில் குழுமி இருந்த அரங்கத்தில் அவர்களது ஆளை வைத்தே தன் காரியத்தை சாதித்து கொண்டாரே...                              


2. Ahmed Deedat and Pastor Stanley Sjoberg, at Stockholm Sweden, Oct 1991.
Debate Title: Is the Bible the true word of God? 

ஸ்வீடன் தலைநகரான ஸ்டாக்ஹோமில் (Stockholm), பாஸ்டர் ஸ்டான்லி சொபர்க் (Paster Stanley Sjoberg) அவர்களுடன் தீதத் அவர்கள் அடுத்தடுத்து இரண்டு நாட்களில் இரண்டு விவாதங்களில் கலந்து கொண்டார். விவாதங்களில் தீதத் அவர்கள் பாஸ்டரை மிகுந்த தர்ம சங்கடத்தில் ஆழ்த்தினார், அல்லது ஒருவழி பண்ணிவிட்டார் என்றே கூறலாம். பாஸ்டர் அவர்கள் தீதத் அவர்களின் வாதத்தால் மிகுந்த உணர்ச்சிவச  பட்டுவிட்டார்.

சர்ச்சில் நடந்த முதல் விவாதத்தில், ஆரம்பத்திலேயே தீதத் அவர்கள் பாஸ்டரிடம் பல பைபிள்களை காட்டி (Catholic Bible, Scofield Bible, Revised standard version (RSV) bible 1952 version, RSV bible 1971 version)

"தாங்கள் இதில் எது உண்மையான கடவுளின் வார்த்தை என்று சொல்லுகிறீர்களோ அதனை வைத்தே நான் விவாதத்தை தொடங்க விரும்புகிறேன்" என்று கூற,

பாஸ்டர் அவர்களோ இதற்கு தன் நேரத்தில் பதில் கூறுவதாக சொன்னார். ஆனால் அவருடைய நேரத்தில் பதில் கூறவே இல்லை. தீதத் அவர்கள் அந்த கேள்வியை கேட்டதற்கு காரணம், அவர் காட்டிய அனைத்து பைபிள்களும் ஒன்றோடு ஒன்று முரண்பட்டவை.

பின்பு, தீதத் அவர்கள் அவருடைய நேரத்தில்,

"பாஸ்டர் அவர்களை இப்போதே ஒரு சோதனைக்கு அழைக்கிறேன். இதோ என்னிடம் இரண்டு பைபிள்கள் உள்ளன, இரண்டும் RSV பைபிள்கள்தான். ஒன்று 1952 ஆம் ஆண்டு பதிப்பு, மற்றொன்று 1971 ஆம் ஆண்டு பதிப்பு. பாருங்கள் இரண்டையும்....இரண்டும் ஒன்றாக இருப்பது போல் தானே இருக்கிறது...ஆனால் இரண்டும் ஒன்றல்ல...



பாஸ்டர் அவர்களிடம் நான் இதில் ஒரு பைபிளை கொடுக்கிறேன்...

பாஸ்டர், நீங்கள் அந்த பைபிளில் Book of Isiah 37 யை பாருங்கள். என்னிடம் உள்ள மற்றொன்றிலிருந்து நான் படிக்கிறேன். நான் படிப்பது உங்களிடத்தில் உள்ள பைபிளில் அப்படியே இருக்கிறதா என்று பார்த்து சொல்லுங்கள் "



என்று ஆரம்பிக்க விவாதம் படு சுவாரசிய கட்டத்தை எட்டியது...

தீதத் அவர்கள் ஒரு RSV பதிப்பில் இருந்து படிக்க ஆரம்பிக்க, பாஸ்டர் ஸ்டான்லியும் அவரிடம் உள்ள பைபிளில் அதனை சரிப்பார்த்துக்கொண்டே வந்தார். எல்லாம் ஒரே மாதிரி தான் இருந்தன.

"எல்லாம் ஒரே மாதிரிதானே இருக்கின்றன?...நீங்கள் படிக்கின்ற Book of Isiah 37 அப்படியே தானே இருக்கிறது" என்று பாஸ்டர் கூற...

அஹ்மத் தீதத் அவர்கள் போட்டார் பாருங்கள் ஒரு போடு....

"ஆனால் மிஸ்டர் பாஸ்டர், நான் இவ்வளவு நேரம் தாங்கள் நினைத்து கொண்டிருப்பது போல் Book of Isiah 37 யை படிக்கவில்லை, நான் படித்து கொண்டிருந்தது Book of Kings "



என்று சொல்லி பாஸ்டரிடம் அதை காட்டினாரே  பார்க்கணும் , பாஸ்டர் அவர்கள் என்ன சொல்லுவது என்று தடுமாற, அரங்கமோ கைதட்டல்களால் அதிர்ந்தது.  
                         
அதே விவாதத்தின் கேள்வி நேரத்தில், ஒரு சகோதரர் பாஸ்டர் ஸ்டான்லியிடம், பைபிளில், ஏசுவிடம் உண்மையான நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு கிருத்துவன் விஷம் குடித்தாலும் அவனுக்கு ஒன்றும் ஆகாது என்று இருப்பதாகவும் (Mark 16:18), தான் கையோடு விஷம் கொண்டு வந்திருப்பதாகவும், அதை பாஸ்டர் ஸ்டான்லி குடித்து ஏசுவின் மீதான தன் நம்பிக்கையை நிரூபித்து காட்டவேண்டும் என்று விஷம்(?) நிறைந்த ஒரு பாட்டிலை பாஸ்டர் முன் நீட்டினார்.  



அதை வாங்கிய ஸ்டான்லி அவர்கள்,  ஒரு டம்ளரில் அந்த திரவத்தை ஊற்றி,



"இதை ஊற்றும்போது உடம்பு சிறிது நடுங்குகிறது. ஆனால் நான் இதை குடிக்கப்போவதில்லை. இது நிச்சயமாக சாத்தானின் செயல், இந்த கேள்வியை கேட்ட மனிதரின் ரூபத்தில் நான் சாத்தானை காண்கிறேன். அதனால் நான் சாத்தானுக்கு கட்டுப்பட போவதில்லை"

என்று கூறி அந்த திரவத்தை குடிக்க மறுத்து விட்டார். இந்த சவாலின் போது மிகுந்த பதற்றத்துடன் காணப்பட்டார் அவர். பார்வையாளர்கள் என்ன நினைத்திருப்பார்கள் என்று நாம் எண்ணி பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.    


3. Ahmed Deedat and Dr.Anis Shorrosh, at Royal Albert Hall London, December 1985.
Debate Title: Is Jesus God?

பாலஸ்தீனத்தில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்ற கிருத்துவ மிசனரியான அனீஸ் ஷரோஷ் (Anis Shorrosh) அவர்கள் ஒருமுறை அஹ்மத் தீதத் அவர்களை விவாதத்திற்கு அழைத்தார். லண்டனின் பிரசித்தி பெற்ற ராயல் ஆல்பர்ட் ஹாலில் நடந்த இந்த விவாதம் பிரபலமானது.

ராயல் ஆல்பர்ட் ஹால் மிகப்  பெரியது. இருந்தும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. சுமார் ஆயிரம் முதல் இரண்டாயிரம் பேர் வரை இடம் கிடைக்காததால் திரும்பி சென்றதாக விவாதம் துவங்கும் முன் அறிவிக்கப்பட்டது.

விவாதத்தின் தலைப்பு இதுதான் "ஏசு கிறிஸ்து கடவுளா?"

விவாதத்தின் நடுவில் அஹ்மத் தீதத் அவர்கள் மக்கள் கூட்டத்தை பார்த்து கேட்டார்,

"ஏசு, பைபிளில், நான் தான் கடவுள் என்னை வணங்குங்கள் என்று எப்போதாவது கூறி இருக்கிறாரா? அல்லது நானும் இறைவனும் ஒன்றுதான் என்றாவது கூறி இருக்கிறாரா?, இதற்கு இந்த கூட்டத்தில் உள்ள கிருத்துவர் யாராவது பைபிளில் இருந்து ஆதாரம் காட்ட முடியுமா" என்று கேட்க

கூட்டத்தில் இருந்து ஒரு குரல் "ஆம் இருக்கிறது, John 14 சொல்லுகிறது, I and My father are one"



இதை கேட்டவுடன் தீதத் அவர்களின் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு கிருத்துவ போதகர் "சரியாக சொல்லப்போனால் அது John 14:6" என்று கூற,

தீதத் அவர்கள் தன் பைபிள் அறிவை இங்கு காட்டினார் பாருங்கள்....

"நீங்கள் இருவருமே தவறு. அது John 14:6 அல்ல, அது John 10:30"

என்று கூறியது தான் தாமதம், பலத்த கைதட்டல்கள். பிறகு அந்த வசனத்திற்கு அற்புதமாக விளக்கமளித்தார். அவர் யாராவது இந்த கேள்வியை கேட்க வேண்டும் என்று தான் சவால் விட்டிருக்கிறார்.

அந்த விவாதம் முழுவதும் அனீஸ் ஷரோஷ் அவர்களால் தீதத் அவர்களின் எந்த ஒரு கேள்விக்கும் சரிவர பதிலளிக்க முடியவில்லை.


4. Ahmed Deedat and Reverend Eric Bock, at Copenhagen Denmark, November 1991.
Debate Title: Is Jesus God?

டென்மார்க்கின் தலைநகரான கோபென்ஹேகனில் (Copenhagen), அஹ்மத் தீதத் அவர்களுக்கும் ரெவரண்ட் எரிக் போக் (Reverend Eric Bock) அவர்களுக்கும் இடையே விவாதம் நடைப்பெற்றது.

ஆனால் எரிக் அவர்கள் ஏசு கடவுள் என்பதை தன்னால் நிரூபிக்க முடியாது என்று கண்ணியமாக சொல்லிவிட்டார். தீதத் அவர்களும் எரிக் அவர்களது நேர்மையை பாராட்டுவதாகவும், எரிக் ஒரு உண்மையான கிருத்துவர் என்றும் புகழாரம் சூட்டினார்.

கேள்வி நேரத்தில் ஒரு வயதானவர் எரிக் அவர்களிடம்,பைபிளின் எந்த இடத்திலாவது, ஏசு, தான் கடவுளின் மகன் என்று கூறி இருக்கிறாரா என்று கேட்க, அதற்கு எரிக் அவர்கள் தன்னால் இந்த கேள்விக்கு பதிலளிக்க இயலவில்லை என்றும், இதற்கு பதிலளிக்க பார்வையாளர் கூட்டத்தில் இருந்த தன் நண்பரான ஒரு பாஸ்டரை உதவிக்கு அழைப்பதாகவும் கூறினார்.



அந்த பாஸ்டரும் பைபிளில் எந்த ஒரு இடத்திலும் ஏசு அப்படி கூறவில்லை என்று ஒப்புக்கொண்டார். பின்னர் எரிக் அவர்களும் பாஸ்டரும் சேர்ந்தே கேள்விகளுக்கு பதிலளித்தனர்.    

அஹ்மத் தீதத் அவர்களின் கேள்விகள் கூர்மையானவை, அவரால் நன்கு ஆராயப்பட்டவை. அதனால் அவரது எந்த ஒரு கேள்விக்கும் பதிலளிப்பது என்பது கிருத்துவ மிசனரிகளுக்கு எளிதானதல்ல. நான் இதுவரை கண்ட அவரது விவாதங்களில் கிருத்துவ மிசனரிகள் அவரது கேள்விகளுக்கு திருப்திகரமாக பதிலளித்ததாக எனக்கு நினைவில்லை.

அஹ்மத் தீதத் அவர்களின் கடைசி ஒன்பது ஆண்டுகள் சோதனையானவை. 1996 ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்க பட்டார்.கண்களையும் தலையையும் தவிர வேறெதையும் அசைக்க முடியாத நிலை. பேசக்கூட முடியாது. இறைவனின் அவருக்கான கடைசி கட்ட சோதனை.

இங்குதான் அவர் தன் மன உறுதியை நமக்கு பாடமாக அளித்தார். அந்த ஒரு மன உறுதியை இறைவன் நமக்கும் அளிப்பானாக...ஆமின்.

ஆம்... அந்த ஒரு நிலையிலும் தன் தாவாஹ் பணியை தொடர்ந்தார். ரியாத்தில் கண்கள் மூலம் கருத்தை தெரிவிக்கும் கலையை கற்றார். அதன் மூலம் எண்ணற்றவர்களை தாவாஹ் பணியை மேற்க்கொள்ள உற்சாகப்படுத்தினார். அவரது துணைவியார்தான்  அவரை கவனித்துக்கொண்டார். தீதத் அவர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அந்த காலங்களில் எந்த ஒரு வலியையோ வேதனையையோ உணரவில்லை என்று அவரது துணைவியார் தெரிவித்திருக்கிறார்கள்.எப்போதும் போல் உற்சாகமாகவே இருந்திருக்கிறார். அல்ஹம்துலில்லாஹ்....

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த எண்ணிய கிருத்துவ மிசனரிகள் தீதத் அவர்களை கிருத்துவத்திற்கு மாற்ற எடுத்த எந்த ஒரு முயற்சியும் பலனளிக்க வில்லை. ஒருமுறை ரெவரண்ட் நைடூ (Reverend Naidoo) அவர்கள் தீதத் அவர்களது வீட்டிற்கு சென்று, தன்னை பைபிளில் இருந்து ஒரு வாசகத்தை படிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், ஏசுவின் நாமத்தால் தான் அவரை குணமாக்குவதாகவும் கூறினார். ஆனால் தீதத் அவர்களோ, அவரிடம் (கண்கள் மூலமாக தகவலை தெரிவிக்கும் யுக்தியை கொண்டு) பைபிளின் ஒரு பகுதியை மேற்க்கோள் காட்டி, அதனை விளக்க முடியுமா? என்று கேட்க நைடூ அவர்கள் தீதத் அவர்களின் ஈமானைப் பார்த்து அதிர்ந்து விட்டார். பதிலேதும் சொல்லாமல் திரும்பி விட்டார்.

இப்படியாக படுக்கையிலும் அதே உற்சாகத்தை காட்டினார். இன்றளவும் அவர் துவங்கிய IPCI, தீதத் அவர்கள் விட்டுச் சென்ற பணியை சிறப்புற செய்து வருகிறது. சுப்ஹானல்லாஹ்...

அஹ்மத் தீதத் அவர்களை பற்றி பேசக்கூடிய பலரும் அவர் பின்னல் இருந்த இரு முக்கிய நல்லடியார்களை மறந்து விடுகிறார்கள். அவர்கள், அஹ்மத் தீதத் அவர்களின் இன்பத்திலும் துன்பத்திலும் கூடவே இருந்தவர்கள். தீதத் அவர்களின் நெருங்கிய தோழர்களான குலாம் உசேன் வாங்கர் மற்றும் தாகிர் ரசூல் தான் அவர்கள்.

இறைவன் நமக்கு என்ன சோதனை அளித்தாலும், அஹ்மத் தீதத் அவர்களுக்கும், அவரது தோழர்களுக்கும் கொடுத்தது போன்ற மன உறுதியையும் சேர்த்தே கொடுப்பானாக...ஆமின்..

அஹ்மத் தீதத் போன்று கிருத்துவ மிசனரிகளை வெற்றிகரமாக எதிர்க்கொண்டவர்களில் என்னைக் கவர்ந்த மற்றொருவர், கனடாவைச் சேர்ந்த டாக்டர். ஜமால் பதாவி (Dr.Jamal Badawi) அவர்கள். இன்ஷா அல்லாஹ், இறைவன் நல்ல உடல்நலத்தை கொடுத்தால் அவரைப்பற்றி மற்றுமொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்...      

இறைவன் நம் எல்லோருக்கும் என்றென்றும் இஸ்லாத்தில் நிலைத்திருக்க கூடிய பாக்கியத்தை தந்தருள்வானாக..ஆமின்...

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

Official Website of IPCI:
1. Ahmed-deedatdotcodotza

Ahmed Deedat's Debate Videos and Other Lecture Videos can be Downloaded at: 
1.Truthway.tv

My Sincere thanks to:
1. IPCI, Durban, South Africa.
2. Truth Way Broadcasters.

References: 
1. Ahmed Deedat's debate with Tele Evagelist Jimmy Swaggard on the topic "Is the Bible the word of God?" at University of Louisiana, November 1986.
2. Ahmed Deedat's debate with Pastor Stanley Sjoberg on the topic "Is the Bible true word of God?" at stockholm Sweden, Oct, 1991.
3. Ahmed Deedat's debate with Dr.Anis Shorrosh on the topic "Is Jesus God?" at Royal Albert Hall London, December 1985.
4. Ahmed Deedat's debate with Pastor Eric Bock on the topic "Is Jesus God?" at Copenhagen Denmark, November 1991.
5. Ahmed Deedat - Wikipedia.
  
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.