அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு....
உங்கள் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.
முஸ்லிம் பதிவர்கள் மற்றும் பின்னூட்டமிடும் முஸ்லிம்களை மனதில் கொண்டு எழுதப்படும் பதிவு.
தமிழ் பதிவுலகில் பெரும்பாலான இஸ்லாமிய பதிவர்கள் அழகான முறையில் செயலாற்றி வருகின்றார்கள். இஸ்லாம் குறித்த தகவல்கள், சமூக பிரச்சனைகள், உலக நடப்புகள், தொழில்நுட்பம் என்று அருமையாக எழுதி வருகின்றார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
முஸ்லிம் பதிவர்களில் ஒரு பகுதியினர் நான் இங்கு சொல்லப்போகும் விஷயத்தை ஏற்கனவே செயல்படுத்தி தான் வருகின்றார்கள். அவர்கள் மென்மேலும் தொடர இறைவன் அருள் புரிவானாக...ஆமீன்.
மற்றொரு பகுதியினர், நான் இந்த பதிவில் சொல்ல விருப்பப்பட்டிருக்கும் மையக்கருத்து சரியானதாக இருந்தால் அதனை செயல்படுத்த ஆவணச் செய்யுங்கள், இன்ஷா அல்லாஹ். தவறாக இருந்தால் சுட்டி காட்டுங்கள், இறைவனுக்காக என்னை மன்னிக்கவும் செய்யுங்கள்.
பதிவிற்குள் செல்வோம்...
இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னர் அரேபியர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்தி (Greetings) கொள்ள முற்படும் போது "அனிம் சபாஹன்" என்றோ அல்லது "அனிமு சபாஹன்" என்றோ கூறுவார்கள். இந்த வார்த்தைகள் "அல்-நிமாஹ்" என்ற வார்த்தையிலிருந்து வந்தவை. இதற்கு கிட்டத்தட்ட "குட் மார்னிங்" என்பதாக அர்த்தம் கொள்ளலாம். "இந்த காலை பொழுது உங்களுக்கு நல்லதாக இருக்கட்டும்" என்பதாக அர்த்தம் வரும். காலை பொழுது நன்றாக இருந்தால் அந்த நாளின் மற்ற பொழுதுகளும் நன்றாக இருக்கும் என்பது தான் அந்த முகமனின் பின்னணி.
இறுதி தூதர் (ஸல்) வந்த பிறகு, அவர்களின் வாழ்க்கை மாபெரும் புரட்சிக்கு உட்படுத்தபட்ட போது அவர்களின் வாழ்த்தும் முறைகளும் மாற்றம் கண்டன. அவர்கள் முன்பு கூறிக்கொண்டிருந்ததற்கும் மேலான மிக அழகிய முகமனை இஸ்லாம் அவர்களுக்கு அறிமுகப்படுத்தியது. அது,
இறுதி தூதர் (ஸல்) வந்த பிறகு, அவர்களின் வாழ்க்கை மாபெரும் புரட்சிக்கு உட்படுத்தபட்ட போது அவர்களின் வாழ்த்தும் முறைகளும் மாற்றம் கண்டன. அவர்கள் முன்பு கூறிக்கொண்டிருந்ததற்கும் மேலான மிக அழகிய முகமனை இஸ்லாம் அவர்களுக்கு அறிமுகப்படுத்தியது. அது,
அஸ்ஸலாமு அலைக்கும் (May Peace be upon you)
என்னும் அற்புத முகமனாகும். "உங்கள் மீது அமைதி நிலவுவதாக" என்று பொருள்படும் இந்த முகமன் கேட்பவர் உள்ளங்களை கொள்ளை கொண்டது. அதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. மனிதகுலம் என்றென்றும் ஏங்குவது மன அமைதிக்காகத்தான். ஒருவர் நமது அமைதிக்காக பிரார்த்திக்கும் போது யார் தான் மகிழ்ச்சியடையாமல் இருப்பர்? அமைதி என்று பொருள்படும் ஸலாம் என்ற வார்த்தை அல்லாஹ்வின் திருநாமங்களில் ஒன்றாகும். அமைதியின் பிறப்பிடம் இறைவன் தானே?
அன்றிலிருந்து அந்த வார்த்தை இன்றியமையாத ஒன்றாக திகழ ஆரம்பித்தது. ஸலாம், அஸ்ஸலாமு அலைக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு என்று பல முறைகளில் சலாம் கூற ஆரம்பித்தனர் முஸ்லிம்கள்.
ஸலாம் கூறுவதின் முக்கியத்துவம் என்ன?
அல்லாஹ்வின் தூதரிடம் ஒருவர் கேட்டார், "இஸ்லாத்தில் சிறந்த விசயம் எது?". அதற்கு இறுதித் தூதர் (ஸல்), "அடுத்தவருக்கு உணவளிப்பதும், நீங்கள் அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் சலாம் கூறுவதுமே ஆகும்" என்று பதிலளித்தார்கள் --- Al-Bukhaari (12, 28 and 6236), Muslim (39), Ahmad (2/169), Abu Dawood (5494).
ஆம், இஸ்லாத்தில் மிக முக்கிய விசயங்களில் ஒன்று அடுத்தவருக்கு சலாம் கூறுவது, இறைவனின் சாந்தி அவர் மீது நிலவ வேண்டுமென மனதார துஆ செய்வது. மேலே பார்த்த ஹதீஸை உற்று நோக்கினால் அழகான ஒரு விஷயத்தை உணரலாம். அதாவது, ஒருவருடைய வயிற்று பசியை போக்குவதும், அவருடைய மன அமைதிக்கு பிரார்த்திப்பதும் ஒரு முஸ்லிமின் கடமையென மிக அழகாக கூறியிருக்கின்றார்கள் நாயகம் (ஸல்) அவர்கள்.
ஏன் ஸலாம் கூற வேண்டும்?
சகோதரத்துவத்தையும், அன்பையும் வளர்க்கும் ஒரு உன்னத வழி என்பதால்...
பின்வரும் ஹதீசை கவனியுங்கள்.
நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபு ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியது, "நீங்கள் நம்பிக்கை கொள்ளாதவரை சுவர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரையொருவர் விரும்பாதவரை நம்பிக்கை கொள்ள முடியாது. நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தக்கூடிய வழியை நான் சொல்லவா? உங்களுக்குள்ளாக ஸலாத்தை பரப்புங்கள்" --- Muslim (54), Ahmad (2/391), and al-Tirmidhi (2513)
சுபானல்லாஹ்...என்னவொரு அழகான வார்த்தைகள் !!!...நம்மிடையே அன்பை வளர்க்கும் ஒரு இடைமுகமாக ஸலாம் கூறுவது இருப்பதாக இறுதி தூதர் (ஸல்) கூறியிருக்கின்றார்கள்.
ஸலாம் கூறுவதால் என்ன பயன்?
முஸ்லிம்களாகிய நமக்கு நன்கு தெரிந்த ஒன்று தான். ஒருவர் ஈமான் கொண்டு நல்ல அமல்களை செய்தால் அவர் சுவர்க்கவாதி ஆகின்றார். அந்த நல்ல அமல்களில் ஒன்று அடுத்தவருக்கு ஸலாம் கூறுவது. நல்ல அமல்களுக்கு கூலி உண்டல்லவா? ஸலாம் கூறுவதால் நன்மைகள் எவ்வளவு?
ஒரு மனிதர் நாயகம் (ஸல்) அவர்களை கடந்து செல்லும் போது "அஸ்ஸலாமு அலைக்கும்" என்றார். அவருக்கு பதில் ஸலாம் கூறிவிட்டு இறுதி தூதர் (ஸல்) அவர்கள் "பத்து நன்மைகள்" என்று கூறினார்கள். மற்றொருவர் நாயகம் (ஸல்) அவர்களை கடக்கும்போது "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹமத்தல்லாஹ்" என்று கூறினார். அவருக்கு பதில் ஸலாம் கூறிவிட்டு நாயகம் (ஸல்) அவர்கள் "இருபது நன்மைகள்" என்று கூறினார்கள். அப்போது மற்றொருவர் முஹம்மது (ஸல்) கடந்தார். அவர் "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதல்லாஹி வபர காத்துஹு " என்றார். அதற்கு பதில் ஸலாம் கூறிவிட்டு இறுதி தூதர் அவர்கள் "முப்பது நன்மைகள்" என்றார்கள் --- Al-Bukhaari in al-Adab al-Mufrad (586)
ஒவ்வொரு முறை ஸலாம் கூறும்போதும் ஏகப்பட்ட நன்மைகள் நம் கணக்கில் ஏறிக்கொண்டே இருக்கின்றன...அல்ஹம்துலில்லாஹ்.
இப்போது, பின்னூட்டமிடும் முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் பதிவர்களுக்கு...
ஸலாம் கூறுவதின் முக்கியத்துவத்தை விரிவாக மேலே பார்த்தோம். இவ்வளவு அழகான ஒரு முகமனை நம்மில் பலரும் நம் பதிவுகளின் ஆரம்பத்தில், பின்னூட்டங்களில் அடுத்தவருக்கு சொல்லாமல் கிடைக்கும் நன்மையை இழக்கின்றோம்.
"உங்கள் மீது சாந்தி உண்டாவதாக" என்ற இந்த முகமன் எவ்வளவு அழகானது, மகிழ்ச்சி தரக்கூடியது என்பதை நாம் நன்கு அறிந்தே இருக்கின்றோம். முஸ்லிமல்லாதவரை நோக்கி இதனை கூறினால் அவர் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டுமல்லவா? (முஸ்லிமல்லாத தன் தந்தையை நோக்கி "உம் மீது ஸலாம் உண்டாவதாக" என்று இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறியதாக குர்ஆனின் 19:47 வசனம் கூறுகின்றது). இஸ்லாம் கூறும் இந்த அற்புத விஷயத்தை நமக்குள் வைத்து கொண்டால் போதுமா? முஸ்லிமல்லாத நம் சகோதர சகோதரிகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாமா?
முஸ்லிம்கள் நமக்குள்ளாக சகோதரத்துவத்தை வலுவாக வளர்க்கும் ஸலாத்தை ஒவ்வொருமுறையும் நாம் நம் சகோதரர்களுக்கு பின்னூட்டமிடும் போதும் சொன்னால் அழகாக இருக்குமல்லவா? நம்முடைய நன்மைகளும், நமக்குள்ளான அன்பும் கூடுமல்லவா?
மற்றொரு அருமையான விசயத்தையும் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன். ஸலாம் கூறுவதற்கே இஸ்லாத்தில் இவ்வளவு முக்கியத்துவமென்றால் ஸலாத்திற்கு பதில் கூறுவதை பற்றி கேட்கவே வேண்டாம். அது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகின்றது. "ஒருவர் உங்களுக்கு ஸலாம் கூறினால், அதனை விட சிறப்பான ஒன்றையோ அல்லது அதனையோ திரும்ப கூறுங்கள்" என்ற பொருளில் வரும் இறைவசனமும், நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றும் அதனை உறுதிப்படுத்துகின்றன. ஆக, நாம் மற்றொரு சகோதரருக்கு ஸலாம் கூறினால் அவர் நிச்சயமாக நமக்கு திரும்ப ஸலாம் கூறவேண்டும். நாம் ஸலாம் கூறியது போலவும் ஆகிற்று, அவரையும் பதில் ஸலாம் சொல்ல தூண்டியாகிவிட்டது. நமக்கும் நன்மை, அவருக்கும் நன்மை....சுபானல்லாஹ்.
இதையெல்லாம் விட மேலாக...
சகோதரர்கள் சிலர் எனக்கு அனுப்பும் மெயில்களை கண்டு நான் உணர்ச்சிவசப்பட்டிருக்கின்றேன், தாவாஹ் செய்ய அவர்கள் எவ்வளவு ஆர்வப்படுகின்றார்கள் என்பதை எண்ணி பூரிப்படைந்திருக்கின்றேன். அல்ஹம்துலில்லாஹ்.
ஆம், அடுத்தவருக்கு ஸலாம் கூறும் இந்த சிறு விஷயம் கூட ஒரு அழைப்பு பணிதான். நம்மிடையே தாவாஹ் செய்ய விரும்பாத சகோதர/சகோதரிகள் இருப்பனரா? நிச்சயமாக இருக்க மாட்டோமல்லவா? இஸ்லாத்தில் நாம் அறிந்த விஷயம் சிறியதாக இருந்தாலும் அது நமக்கு தெளிவாக தெரிந்திருந்தால் அதனை அடுத்தவருக்கு சொல்ல வேண்டியது நம் கடமையல்லவா?
பின்னூட்டங்களில், பதிவுகளின் துவக்கத்தில் ஸலாம் கூறுவோம்...சகோதரத்துவத்தை வலுப்படுத்துவோம்...நன்மைகளை அள்ளுவோம்...இன்ஷா அல்லாஹ்.
பின்னூட்டங்களில், பதிவுகளின் துவக்கத்தில் ஸலாம் கூறுவோம்...சகோதரத்துவத்தை வலுப்படுத்துவோம்...நன்மைகளை அள்ளுவோம்...இன்ஷா அல்லாஹ்.
நீங்கள் நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள், பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவன் கடுமையாக தண்டிப்பவன் --- (சூறா மாயிதா,02)
இந்த பதிவில் கூறப்பட்டுள்ள மையக்கருத்து சரியெனபட்டால் செயல்படுத்த ஆவண செய்யுங்கள், இன்ஷா அல்லாஹ். ஏக இறைவன் நம்முடைய முயற்சிகளை இலேசாக்கி நம்முடைய நற்காரியங்களுக்கு தகுந்த கூலி வழங்குவானாக, ஆமீன்.
தவறாக இருக்கும் பட்சத்தில் தயவுக்கூர்ந்து சுட்டி காட்டுங்கள். தவறாக ஏதும் கூறியிருப்பின் இறைவனுக்காக என்னை மன்னியுங்கள்...
தவறாக இருக்கும் பட்சத்தில் தயவுக்கூர்ந்து சுட்டி காட்டுங்கள். தவறாக ஏதும் கூறியிருப்பின் இறைவனுக்காக என்னை மன்னியுங்கள்...
இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைக்க செய்வானாக...ஆமீன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...
My sincere thanks to:
1. Islam-qa.com for Hadith references.
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ