Pages

Monday, June 20, 2011

'என் மகள்களின் மூன்று கேள்விகள்'



நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

இஸ்லாமை ஏற்றபோது நான் பெற்ற மன அமைதி இன்னும் என்னை விட்டு விலகவில்லை. இன்ஷா அல்லாஹ், இனியும் விலகாது.
லாரன் பூத் (Lauren Booth) - அரசியல் விமர்சகர், ஊடகவியலாளர், பாலஸ்தீன மக்களுக்காக போராடியவர்/போராடிக்கொண்டிருப்பவர்.

இவற்றிற்கெல்லாம் மேலாக, பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் நெருங்கிய உறவினர் என்ற அடையாளம். சென்ற ஆண்டு இவரது பெயரை உலகின் மூளைமுடுக்கெல்லாம் கொண்டுபோய் சேர்த்தன ஊடகங்கள்.

அதற்கு காரணம், நம்மில் பெரும்பாலானோர் அறிந்ததுதான். ஆம், அவர் இஸ்லாமை தழுவிய அந்த நிகழ்வுதான் காரணம்.

தற்போதைய காலக்கட்டத்தில், இஸ்லாமை தழுவும் பலரும், குர்ஆனை முழுமையாக படித்து, பலவித ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர்தான் தழுவுகின்றனர்.

ஆனால் லாரன் பூத் அவர்களின் அனுபவம் வேறுவிதமானது. 

இவர் இஸ்லாமை தழுவுவதற்கு ஊன்றுகோலாய் இருந்தது முஸ்லிம்களின் வாழ்க்கைமுறைதான். பாலஸ்தீன முஸ்லிம்களின் அழகான வாழ்வை பார்த்து, தானும் முஸ்லிமாக வேண்டுமென்று ஆசைக்கொண்டவர் இவர். பின்னர்தான் குர்ஆனை படிக்க ஆரம்பித்திருக்கின்றார்.

இவருடைய இஸ்லாம் நோக்கிய பயணம் மற்றும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பிறகு இவருக்குள் ஏற்பட்ட மாற்றங்கள் போன்றவற்றை படம்பிடிக்க முயற்சிப்பதே இந்த பதிவு...இன்ஷா அல்லாஹ்.   

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் சகோதரி லாரன் பூத். பெற்றோரிடமிருந்து சரியான அரவணைப்பு இருந்ததில்லை. சிறு வயதில் இறைவனிடம் வேண்டிக்கொள்வாராம்,
Please God, என் அம்மாவையும், அப்பாவையும் நாளைக்காவது என்னிடம் அன்பாக இருக்க வை.
டீனேஜ் பருவத்தின்போது பிரார்த்திப்பதை நிறுத்திவிட்டார். தன்னுடைய இருபதுகளில் மதமே வேண்டாமென்ற முடிவுக்கு வந்துவிட்டார்,
வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவித்து கொண்டிருந்தேன். இனியும் எனக்கு மதங்கள் தேவையில்லை. Nietzsche சொன்னதை நம்பினேன். அவர் கூறினார், 'கடவுள் இறந்து விட்டார். நாம்தான் அவரை கொன்றோம்' என்று
சகோதரி லாரன் பயின்ற பள்ளியில் மொத்தம் மூன்றே மூன்று முஸ்லிம் மாணவிகளாம். அந்த மாணவிகளிடம் இரண்டு விசயங்களை கவனித்திருக்கின்றார்.
ஒன்று, அவர்கள் கணக்கிலும் அறிவியலிலும் சிறந்து விளங்கினார்கள். இரண்டாவது, அவர்கள் ஆண்களுடன் டேடிங் (Dating) போனதில்லை.  
9/11-க்கு பிறகு முஸ்லிம்கள் குறித்த எதிர்மறையான எண்ணங்கள் அவருக்குள் வளர ஆரம்பித்தன. முஸ்லிமல்லாதவர்களை கொல்வதே முஸ்லிம்களின் தலையாயப் பணி என்பதில் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தார். ஊடங்கங்கள் என்ன கூறினவோ அவற்றை அப்படியே நம்பினார்.

பிறகு, சில ஆண்டுகளில் பாலஸ்தீன பிரச்சனையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள ஆரம்பித்தார். 2005-ஆம் ஆண்டு, மஹ்மூத் அப்பாசை பேட்டி காண்பதற்காக முதல்முறையாக மேற்குகரைக்கு சென்றார்.
டெல் அவிவ்விற்கு விமானம் ஏறியபோதே மிகவும் பதற்றமடைந்தேன். அரேபியர்களை நினைத்து மிகவும் அஞ்சினேன். பேட்டி எடுக்கவிடாமல் என்னை திருப்பி அனுப்பிவிட மாட்டார்களா இஸ்ரேலியர்கள் என்று கூட தனிமையில் எண்ணிருக்கின்றேன்.   
சுமார் ஐந்து நாட்கள் மேற்குகரையில் தங்கியிருந்தார். இந்த ஐந்து நாட்களில் பாலஸ்தீனியர்கள் இவர் மீது காட்டிய அன்பில் இஸ்லாம் குறித்த அவரது தவறான எண்ணங்கள் பறந்தோட ஆரம்பித்தன.
என் வாழ்நாளில் அப்படியொரு உபசரிப்பை நான் கண்டதில்லை. எப்படி தங்கள் பார்வைக்கு அந்நியமான ஒரு பெண்ணை பார்த்தவுடன் ஏற்றுக்கொண்டார்கள்?. என்னிடம் பரிவோடு கூறினார்கள் 'இங்கே உங்கள் மீது தாக்குதல் நடக்குமானால் உங்களை பாதுகாக்க நாங்கள் இருக்கின்றோம்'. இஸ்லாம் குறித்த என்னுடைய அச்சம் விலக ஆரம்பித்தது. 
இஸ்லாம் குறித்த எதிர்மறையான எண்ணங்கள் விலக ஆரம்பித்ததே தவிர, இஸ்லாமை ஆராய வேண்டுமென்ற வட்டத்திற்குள் இன்னும் லாரன் பூத் வரவில்லை. மது, பார்ட்டிகள் என வழக்கம்போல வாழ்க்கை செல்ல ஆரம்பித்தது.

2008-ல் மறுபடியும் பாலஸ்தீன் பயணம். இந்த முறை பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுக்க சென்றார். காசாவை இஸ்ரேல் விடுவிக்க வேண்டுமென்ற கோரிக்கையோடு சென்றார். இந்த பயணத்தின்போது தனக்குள் மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தார்.

சில நாட்கள் மட்டுமே பயணத்தை திட்டமிட்டிருந்த அவரது குழுவினருக்கு, இஸ்ரேல் மற்றும் எகிப்து ராணுவத்தின் கெடுபிடிகளால் ஒரு மாதம் வரை காசாவில் அடைந்திருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

தன் குழந்தைகளின் பிரிவால் பரிதவித்து போனார் லாரன். ஒருநாள், இந்த வேதனை தாங்க முடியாமல் அழுதுக்கொண்டிருக்க, அவருக்கு பக்கத்தில் வந்து உட்கார்ந்தார் ஒரு பாலஸ்தீனிய பெண்மணி.

"மன்னிக்கவும்" என்று கூறி தொடர்ந்த அவர் "உங்கள் குழந்தைகளை பிரிந்து எந்த அளவு துயரப்படுகின்றீர்கள் என்று எனக்கு புரிகின்றது" என்று கூறி லாரனை சமாதானப்படுத்த தொடங்கினார்.

பின்னர் தன்னுடைய கதையை லாரனிடம் சொல்ல ஆரம்பித்தார் அந்த பாலஸ்தீனிய பெண்மணி. அவர் மேற்குகரையைச் சார்ந்தவராம். தனிப்பட்ட காரணத்திற்காக ஒருநாள் பயணமாக காசாவிற்கு வரவேண்டிய நிர்பந்தம். அவரை அனுமதித்தனர் இஸ்ரேலியர்கள்.

ஆனால், திரும்ப மேற்குகரைக்கு செல்ல முயற்சித்தபோது, இவரது ஆவணங்களை கிழித்தெறிந்து, இவரை ஒரு வேனில் அடைத்து வைத்து கொடூரமாக நடந்துக் கொண்டார்கள் இஸ்ரேல் இராணுவத்தினர். அன்றிலிருந்து காசாவில் தவித்துக் கொண்டிருக்கின்றார் இந்த பெண்மணி.

இதனை கேட்ட லாரனுக்கு என்ன சொல்லுவதென்றே புரியவில்லை.
கடந்த நான்கு வருடங்களாக தன்னுடைய கணவரையும், இரண்டு குழந்தைகளையும் பார்க்கவில்லை இந்த சகோதரி. ஆனால், இங்கே என்னுடன் அமர்ந்து கொண்டு, என்னுடன் அழுதுக்கொண்டு, என்னை சமாதானப்படுத்த முயன்று கொண்டிருக்கின்றார். அடுத்தவர் உணர்வறிந்து செயல்படும் இது போன்ற பண்பை எப்படி விளக்குவது என்று ஆரம்பிக்க கூட எனக்கு தெரியவில்லை. 
பாலஸ்தீனியர்களின் அன்பும், அடுத்தவர் உணர்வுகளை புரிந்து கொள்ளும் மனப்பக்குவமும், இவ்வளவு கொடுமைகளுக்கு மத்தியிலும் தங்களது மார்க்கத்தின் மீதான அவர்களின் பற்றும் தன்னை மிகவும் பாதித்ததாக குறிப்பிடும் லாரன்,
இப்போது அரேபியர்களை மிகவும் விரும்ப ஆரம்பித்தேன். இருப்பினும் இன்னும் இஸ்லாத்தின் மேல் ஆர்வம் வரவில்லை. 
ரமலான் மாதம் வந்தது. அகதிகள் முகாமில் தங்கியிருந்த ஒரு குடும்பம் சகோதரி லாரனை இப்தாருக்கு அழைத்திருந்தார்கள்.

பதினாறு உறுப்பினர்களை கொண்ட அந்த குடும்பம் சகோதரி லாரனை இன்முகத்தோடு வரவேற்றார்கள். ஆனால் லாரனுக்கோ கடுங்கோபம். யார் மீது தெரியுமா?...முஸ்லிம்களின் கடவுள் மீது....ஏன்?
இவர்களுக்கே சிறிதளவுதான் உணவு கிடைக்கின்றது. இந்த சூழ்நிலையில் இவர்களை நோன்பு நோற்க சொல்வது நியாயமா? நிச்சயமாக இவர்களது கடவுள் இரக்கமற்றவர்தான்.  
ஆனால், அந்த குடும்பத்தினரோ பொறுமையுடன் விளக்கினார்கள். இவ்வுலகில் உள்ள எதையும்விட தாங்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நேசிப்பதாகவும், அதனால், இறைவனின் கட்டளைக்கு இணங்கி நோன்பு நோற்று அவனுக்கு நன்றி செலுத்துவதாகவும் கூறினர்.

அவ்வளவுதான்.....

அவர்களின் அன்பும், இஸ்லாம் சொல்லியப்படி வாழ்ந்துவரும் தன்மையும் லாரனுடைய உள்ளுணர்வுகளை கிளறிவிட அந்த வார்த்தைகள் அவரது வாயிலிருந்து வந்து விழுந்தன.
'இதுதான் இஸ்லாம் என்றால்', எனக்குள் சொல்லிக்கொண்டேன், "இது எனக்கு வேண்டும்". முழுமனதோடு என்னை இந்த மார்க்கத்தில் ஐக்கியப்படுத்திக் கொள்ள நான் தயார்.
இது போன்ற வார்த்தைகள் தன்னிடமிருந்து வருமென்று சில ஆண்டுகளுக்கு முன்புவரை கற்பனைக்கூட செய்திருக்கமாட்டார் லாரன்.

பாலஸ்தீன மக்களுடன் தொடர்பு ஏற்பட்ட அதே காலக்கட்டத்தில் மேற்குலகின் பொருள் சார்ந்த வாழ்க்கை மீது அதிருப்தி கொள்ள ஆரம்பித்தார் லாரன். போர்களில் மேற்குலகம் ஈடுபடுவதே, தம் மக்களின் உள்ளங்களில் உள்ள வெற்றிடத்தை திசைதிருப்பத்தான் என்ற எண்ணத்தை கொண்டிருந்தார்.


மேற்சொன்ன நிகழ்வுகளில் இருந்து தொடங்கிய அவரது இஸ்லாம் நோக்கிய பயணம் சென்ற ஆண்டு நிறைவடைந்தது. இஸ்லாமை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார் லாரன் பூத்.

இஸ்லாம் ஒருவருடைய வாழ்வில் கொண்டுவரும் மாற்றங்கள் அற்புதமானவை. அதற்கு சகோதரி லாரனும் விதிவிலக்கல்ல. தன்னுடைய தவறான பழக்கவழக்கங்களை விட்டொழித்துவிட்டார் சகோதரி லாரன் பூத்.

"எனக்கு புரியத்தொடங்கியது. இனி நான் இஸ்லாமிற்கு அந்நியமானவள் அல்ல. உலகளாவிய முஸ்லிம் சமூகத்தில் நானும் ஒரு பகுதி.

இஸ்லாமை ஏற்றுக்கொள்ள நான் தயாரா? என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என்ன சொல்வார்கள்? என்னுடைய பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ள நான் தயாரா? - இப்படி பல கேள்விகள் என்னுள் எழுந்தன.

ஆனால் காலப்போக்கில் இவற்றிலிருந்து விடுபட்டுவிட்டேன். இஸ்லாமை ஏற்றுக்கொள்வது எளிதாகவே இருந்தது.

ஆம், இஸ்லாம் குறித்து நான் இன்னும் நிறைய படிக்க வேண்டும். பலரும் என்னிடம் கேட்கின்றார்கள் "நீங்கள் குர்ஆனை எவ்வளவு படித்திருக்கின்றீர்கள்?" என்று. நான் கூறுவேன், சுமார் நூறு பக்கங்கள் என்று.

இதனை கேட்பவர்களில் சிலர் என்னை ஏளனம் செய்வதற்கு முன்னர் அவர்களுக்கு நான் ஒன்று கூறிக்கொள்ள விரும்புகின்றேன். குர்ஆன் என்னும் புத்தகம் என் வாழ்நாளுக்குரியது. இதில் அவசரப்பட நான் விரும்பவில்லை. படித்தவரை ஆழ்ந்து படிக்க முயற்சித்திருக்கின்றேன். படித்தவற்றை நினைவில் நிறுத்த பாடுபடுகின்றேன். இது வாரப்பத்திரிகை அல்ல.

அரபி மொழி கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அதற்கு சற்று நேரம் ஆகுமென்று நினைக்கின்றேன். 

By the way, நான் ஷியா வழியை பின்பற்றுகின்றேனா? அல்லது சன்னி வழியை பின்பற்றுகின்றேனா? என்ற கேள்விக்கு என்னால் பதில் கூற முடியாது. என்னை பொருத்தவரை, ஒரே இறைவன்...ஒரே இஸ்லாம்தான். 

இஸ்லாமிய முறையில் உடையணிவதும் எளிதாகவே இருந்தது. இனி சிகையலங்காரத்திற்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை பாருங்கள்.

முகத்தை மூடும்விதமாக உடையணிவது எனக்கான ஒன்றாக தோன்றவில்லை. அப்படி உடையணியும் சகோதரிகளை நான் பெரிதும் மதிக்கின்றேன். ஆனால், இஸ்லாம் அதனை வலியுறுத்தவில்லை என்பது என்னுடைய புரிதல்.

என் மனமாற்றத்தை பூதாகரமாக்கின சில ஊடகங்கள். அவர்களுடைய கோபம் என் மீதானது அல்ல. அது இஸ்லாம் மீதானது. இவற்றை நான் பெரிதாக எடுத்து கொள்வதில்லை.

என் வாழ்க்கை முழுவதும் அரசியல் சார்ந்தே இருந்திருக்கின்றேன். பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுத்திருக்கின்றேன். இனியும் அப்படியே இருப்பேன்.

இஸ்லாமை ஏற்றுக்கொண்ட பிறகும் என் நட்பு வட்டாரம் வலிமையாகவே இருக்கின்றது. அந்தவிதத்தில் நான் அதிர்ஷ்டசாலிதான். என் முஸ்லிமல்லாத நண்பர்கள் ஆர்வமுடன் என்னிடம் கேட்பார்கள்.
  • இஸ்லாம் உன்னை மாற்றிவிடுமா?
  • நாங்கள் இன்னும் உன் நண்பர்களாக தொடரலாமா?
  • நாம் மது அருந்த வெளியே செல்லலாமா?

முதல் இரண்டு கேள்விகளுக்கு என்னுடைய பதில் 'ஆம்' என்பது. கடைசி கேள்விக்கான பதில், ஒரு பெரிய 'NO'. 

என் அம்மாவை பொருத்தவரை, என்னுடைய மகிழ்ச்சிதான் அவருக்கு முக்கியம். நான் இஸ்லாமை ஏற்றுக்கொண்டதை அவரிடம் கூறியபோது, 'அந்த மார்க்கத்திற்கா மாறினாய்?, நீ புத்தமதத்திற்கு மாறியிருப்பாய் என்றல்லவா நினைத்தேன்' என்று கூறினார். இப்போது புரிந்துக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றார். என்னுடைய மாற்றத்தை ஏற்றுக்கொண்டுவிட்டார்.

மதுவை விட்டொழித்தது புது உற்சாகத்தை தந்திருக்கின்றது. உண்மையை சொல்லவேண்டுமென்றால், நான் இஸ்லாமை தழுவியதிலிருந்து மதுவை நினைத்துக்கூட பார்க்கவில்லை. I simply don’t want to.

மறுமணம் குறித்து சிந்திக்கும் மனநிலையில் இப்போது நான் இல்லை. என்னுடைய முந்தைய திருமணமுறிவிலிருந்து தற்போது மீண்டுக்கொண்டிருக்கின்றேன். விவாகரத்து நடந்துக்கொண்டிருக்கின்றது.

நேரம் வரும்போது நிச்சயம் மறுமணம் குறித்து யோசிப்பேன். நான் ஏற்றுக்கொண்ட மார்க்கதிற்கேற்ப, என்னுடைய கணவர் நிச்சயம் முஸ்லிமாகத்தான் இருக்கவேண்டும்.

என்னிடம் பலரும் கேட்கின்றார்கள், 'உங்கள் மகள்களும் முஸ்லிமாவார்களா?' என்று.

எனக்கு தெரியவில்லை. அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும். ஒருவருடைய உள்ளத்தை நாம் மாற்ற முடியாது.

ஆனால், என்னுடைய மனமாற்றத்தை அவர்கள் எதிர்க்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், நான் இஸ்லாமை தேர்ந்தெடுத்ததை அவர்களிடம் சொன்னபோது அவர்கள் காட்டிய அணுகுமுறை என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

சமையலறையில் அமர்ந்துக் கொண்டு அவர்களை அழைத்தேன், 'Girls, உங்களிடம் ஒரு செய்தியை சொல்லவேண்டும்'.

சொல்ல ஆரம்பித்தேன். 'நான் இப்போது முஸ்லிம்'. 

இதனை கேட்டவுடன் ஒன்றாக கூடிக்கொண்டு அவர்களுக்குள்ளாக ஏதோ கிசுகிசுத்து கொண்டார்கள். சில நொடிகளுக்கு பிறகு, என் மகள்களில் மூத்தவளான அலெக்ஸ், 'நாங்கள் சில கேள்விகளை கேட்க விரும்புகின்றோம். இன்னும் சிறிது நேரத்தில் வருகின்றோம்'.  

ஒரு லிஸ்டை தயாரித்துக் கொண்டு திரும்பினார்கள். அலெக்ஸ் ஆரம்பித்தாள், 'இனியும் நீங்கள் மது அருந்துவீர்களா?'

என்னுடைய பதில்: 'இல்லை'. 

'இனியும் புகைபிடிப்பீர்களா?' 

புகைபிடிப்பது ஹராம் இல்லை (??). எனினும் அது உடம்புக்கு நல்லதல்ல. அதனால் என்னுடைய பதில், 'இல்லை'.   

அவர்களுடைய கடைசிக் கேள்வி என்னை பின்னுக்கு தள்ளியது. 

'தற்போது முஸ்லிமாகிவிட்டதாக கூறுகின்றீர்கள், இனியும் உடலின் மறைவான பாகங்கள் வெளியே தெரியுமாறு மேலாடை அணிவீர்களா?'

என்ன???????

இப்போதுதான் புரிய ஆரம்பித்தது. நான் உடையணியும்விதம் அவர்களை எந்த அளவிற்கு சங்கடத்தில் ஆழ்த்திருக்கின்றது என்று.  

'இப்போது நான் முஸ்லிம்' , தொடர்ந்தேன், 'இனியும் அப்படி உடையணிய மாட்டேன்'. 

'நாங்கள் இஸ்லாமை விரும்புகின்றோம்' என்று கூறி ஆரவாரம் செய்துவிட்டு விளையாட சென்றுவிட்டார்கள். 

நானும் சொல்லிக்கொண்டேன், 'நானும் இஸ்லாமை விரும்புகின்றேன்'."

சகோதரி லாரன் போன்றவர்களை தொடர்ந்து நம் சமூகத்திற்கு கொடுத்து, இஸ்லாம் குறித்த தவறான எண்ணங்களை களைய அல்லாஹ் போதுமானவன்.

டோனி பிளேர், தான் குர்ஆனை தினமும் படித்து வருவதாகவும், தான் இறைநம்பிக்கையில் நீடிக்க குர்ஆன் உதவுவதாகவும் கூறியுள்ளார். அவர் கூடிய விரைவில் நேர்வழி பெற இறைவன் உதவுவானாக...ஆமீன்.  

Please Note:
இந்த பதிவில் உள்ள மொழிபெயர்ப்பு முழுமையானதல்ல. முழுமையாக படிக்க கீழே உள்ள சுட்டிகளை பயன்படுத்தவும்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

Sr. Lauren Brown's Official Website:
1. http://www.laurenbooth.co.uk. link

References:
1. Lauren Booth explains why she feel in love with Islam - news.com.au. link
2. Lauren Booth’s Spiritual Journey to Islam - The American Muslim. link

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ. 

Monday, June 13, 2011

உலக நாத்திகர் மாநாட்டில் முஸ்லிம்கள் விவாதம்...



நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

-----------------------------------------------------
"Well I managed to watch the whole thing right up to the end, when RD himself is accosted outside the hall.

I have a different opinion from the commenters so far. I found the Islamic guys to be quite sophisticated in their argumentation techniques and VERY articulate. They were not idiots at all (delusional religious maniacs yes, stupid, no). To tackle them effectively you would have to be quite well educated in a range of areas and as articulate as they are (luckily PZ and the other participants in this farcical video were).

I was quite impressed with their efforts relatively speaking - I think they are in a different league from the Muslim people I know, even quite educated ones. - Comment No.10. 

*******
இந்த வீடியோவை கடைசிவரை பார்த்தேன், அதாவது அரங்கத்திற்கு வெளியே டாகின்ஸ் பேசியது வரை. 

இதுவரை இங்கு பின்னூட்டமிட்டவர்களின் கருத்துக்களில் இருந்து நான் வேறுபடுகின்றேன். தங்களுடைய வாத உத்திகளில் கைத்தேர்ந்தவர்களாகவும், சொல்ல வேண்டிய கருத்தை மிகத்தெளிவாக எடுத்துரைப்பவர்களாகவும் இருக்கின்றனர் இந்த முஸ்லிம்கள். நிச்சயமாக இவர்கள் மூடர்கள் இல்லை (மத மயக்கத்தில் இருப்பவர்களா..ஆம், ஆனால் மூடர்கள் கிடையாது). 

இவர்களை போன்றவர்களை வெற்றிகரமாக சமாளிக்க நீங்கள் பல துறைகளில் உங்களை பயிற்றுவித்து கொண்டும், அவர்களைப்போல தெளிவாக கருத்துக்களை வெளிப்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும் (அதிர்ஷ்டவசமாக, இந்த பொருளற்ற வீடியோவில் வாதித்த மயர்ஸ் மற்றும் ஏனையோர் அப்படி இருந்தனர்). 

உண்மையை சொல்ல வேண்டுமென்றால், தங்களது முயற்சிகளால், என்னை வெகுவாக கவர்ந்து விட்டனர் இந்த முஸ்லிம்கள். நான் அறிந்த நன்கு படித்த முஸ்லிம்களை விடவும் இவர்கள் வேறுபட்டு நிற்கின்றனர் - (Extract from the original quote of) Comment No. 10"
------------------------------------------------------

இப்படி சொன்னவர் ஒரு பல்கலைகழக விரிவுரையாளர். 

இன்றைய நாத்திகர்களின் தலைவர்களில் ஒருவராக கருதப்படும் ரிச்சர்ட் டாகின்ஸ் அவர்களது தளத்தில் இந்த விரிவுரையாளர் இட்ட பின்னூட்டத்தை தான் நீங்கள் மேலே பார்க்கின்றீர்கள். 

எதற்காக இப்படி சொன்னார்? அவர் குறிப்பிடும் வீடியோ எதைப்பற்றியது? அவர் குறிப்பிடும் அந்த முஸ்லிம்கள் யார்?

இந்த கேள்விகளுக்கு விடைக்காண கடந்த இரண்டாம் தேதிக்கு நாம் செல்ல வேண்டும். 

இந்த தேதியில், பிரிட்டனின் புகழ் பெற்ற இஸ்லாமிய அமைப்பான "IERA" (Islamic Education and Research Academy, இஸ்லாமிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம்) ஒரு சுவாரசியமான பத்திரிக்கை அறிவிப்பை தன்னுடைய தளத்தில் வெளியிட்டிருந்தது. (IERA பற்றிய இத்தளத்தின் பதிவை காண <<இங்கே>> சுட்டவும்) 

அதாவது, ஜூன் 3 - 5  காலக்கட்டத்தில், அயர்லாந்தின் டப்ளின் (Dublin) நகரில் நடைபெறும் சர்வதேச நாத்திகர் மாநாட்டில் (International Atheist Conference) தாங்கள் கலந்து கொள்ள போவதாகவும், அந்த மாநாடு நடைபெறும் அரங்கத்திற்கு வெளியே ஸ்டால் அமைத்து, பிரபல நாத்திகர்களுடன் தாங்கள் நடத்திய விவாத வீடியோக்களை விநியோகம் செய்யப்போவதாகவும் அறிவித்திருந்தது இந்த அமைப்பு. 

அதுமட்டுமல்லாமல், தாங்கள் இறைநம்பிக்கை கொள்வதற்கு என்ன காரணங்கள் என்பதை விளக்கும்படியாக, இந்த மாநாட்டிற்கென பிரத்யோகமாக தயாரிக்கப்பட்ட சிறுநூல்களை (Booklets) விநியோகிக்க போவதாகவும், மேலும், கருத்தரங்கில் கலந்து கொள்ளவரும் டாகின்ஸ், மயர்ஸ் முதலானவர்களுடன் நாத்திகம் குறித்து கலந்துரையாட முயற்சி மேற்கொள்ள போவதாகவும் கூறியிருந்தது IERA. 

இந்த அறிக்கை, டாகின்ஸ்கின் தளம் தொடங்கி பல நாத்திகர்களது தளத்தில் சூடான விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த செய்தி உங்களில் சிலருக்கு ஆச்சர்யத்தை கொடுத்திருக்கலாம். ஆனால் IERAவை பொருத்தவரை, அவர்களது இம்மாத செயல்திட்டத்தில் இது ஒரு பகுதி, அவ்வளவே.

விவாதத்திற்கென தனி பிரிவையே கொண்டுள்ளது இந்த அமைப்பு. சமூகத்தில் நன்கு அடையாளம் காணப்பட்ட நாத்திகர்களுடன் இவர்கள் நடத்திய விவாதங்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளன.

குறிப்பாக, சென்ற ஆண்டு, இதே காலகட்டத்தில், அமெரிக்க நாத்திகர்கள் சங்கத்தின் தலைவரான எட் பக்னர் (Dr.Ed Buckner) அவர்களுடன் "இஸ்லாமா? நாத்திகமா?" என்ற தலைப்பில் நடத்திய விவாதம் கவனிக்கத்தக்கது (இந்த விவாதத்தின் சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது)

ஆக, நாத்திகர்களுடனான உரையாடல் என்பது இயல்பாகவே இவர்களுக்கு உற்சாகத்தை தரக்கூடிய ஒன்று. அந்த உற்சாகம் தான் இந்த மாநாடு குறித்த அறிவிப்பிலும் பிரதிபலித்தது.

மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஹம்ஸா அண்ட்ரியஸ் ஜார்ஜிஸ் (இவரைப் பற்றிய இத்தளத்தின் கட்டுரையை காண <<இங்கே>> சுட்டவும்) மற்றும் அட்னன் ரஷித் ஆகியோர் ஆவர்.


தெளிவான செயல்திட்டங்களுடன் மாநாட்டிற்குள் நுழைந்தனர்.

தங்களுடைய எண்ணங்களை பிரதிபலிக்கும் சிறுநூல்களை, விவாத காணொளிகளை விநியோகித்தனர். மாநாட்டிற்கு வந்தவர்களுடன் நாத்திகம் மற்றும் இஸ்லாம் குறித்து உரையாடினர்.

அவர்கள் எதற்காக அங்கு சென்றார்களோ அந்த சந்தர்ப்பத்தை வெகு விரைவிலேயே இறைவன் ஏற்படுத்தி கொடுத்தான்.

ஆம், நாத்திகர்களால் பெரிதும் மதிக்கப்படும் பரிணாமவியலாளர்களான PZ மயர்ஸ் (PZ Myers) மற்றும் ரிச்சர்ட் டாகின்ஸ் ஆகியோருடன் பேசும் வாய்ப்பு ஏற்பட்டது. இதில் டாக்கின்ஸ்சுடன் சில நிமிடங்களே பேச நேரிட்டாலும், யர்ஸ்சுடன் சுமார் 25 நிமிடங்கள் கலந்துரையாடக்கூடிய வாய்ப்பை பெற்றனர்.

இந்த மினி விவாதத்தை கண்ட விரிவுரையாளரின் பின்னூட்டத்தை தான் நீங்கள் மேலே படித்தீர்கள்.

ஆம்...முஸ்லிம்களின் அணுகுமுறை பல நாத்திகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

(இந்த வீடியோவின் முன்பகுதியை நாத்திகர்கள் தங்களது தளத்தில் முதலில் வெளியிடவில்லை. அதனை எடிட் செய்து பாரபட்சமாக நடந்து கொண்டனர் என்ற குற்றச்சாட்டை முஸ்லிம்கள் முன்வைத்திருந்தனர். ஆனால் இந்த குற்றச்சாட்டு அறியாமையால் ஏற்பட்ட ஒன்று. காரணம், முஸ்லிம்கள் தான் இந்த விவாதத்தை முதலில் படமெடுக்க தொடங்கினர். சிறிது நேரம் சென்ற பிறகுதான் நாத்திகர்கள் கலந்து கொள்ள ஆரம்பித்தனர். ஆகையால், முதல் சில நிமிடங்களை அவர்கள் தவறவிட்டு விட்டனர். அவர்கள் எவற்றை எடுத்தார்களோ அதனை தங்கள் தளங்களில் முதலில் வெளியிட்டு விட்டனர். இது தான் நடந்தது. ஆகையால், நாத்திகர்கள் எடிட் செய்து விட்டனர் என்ற குற்றச்சாட்டு நிராகரிக்கப்பட வேண்டியது.)

சரி, இப்போது அந்த விவாதத்திலிருந்து (மேலோட்டமாக) சில தகவல்கள்...

பொதுவான விசயங்களைப்பற்றி முதலில் கேள்விகளை கேட்டு, தன்னுடைய விளக்கத்தை கொடுத்து, பினனர் மயர்ஸ்சை குர்ஆனை நோக்கி மிக அழகாக கொண்டு வந்தார் ஹம்ஸா. குர்ஆன் கூறக்கூடிய விஷயங்கள் மனிதர்களின் எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவை என்பதை விளக்கினார்.

ஆனால், யர்ஸ் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஹம்ஸா தொடர்ந்தார். குர்ஆன், மலைகளை பற்றி கூறும் விஷயங்கள் இன்றைய அறிவியலோடு எப்படி ஒத்துப்போகின்றது என்பதை பிரபல விஞ்ஞானிகளின் கூற்றோடு நிரூபிக்க முயன்றார்.

மயர்ஸ் இது பற்றி பேசாமல் குர்ஆன் கூறும் சிசு வளரியல் (Embryology) பற்றி பேச தொடங்கினார் (இந்த துறையை சார்ந்தவர் மயர்ஸ்)

இந்த நேரத்தில் அட்னன் ரஷீதும் வாதத்தில் இணைந்து கொண்டார். உலக பிரசித்தி பெற்ற சிசு வளரியல் நிபுணரான டாக்டர் கீத்மூர் அவர்கள், குரானின் சிசு வளரியல் குறித்த கருத்துக்களை ஆமோதித்திருக்கின்றார் என்ற வாதத்தை முஸ்லிம்கள் முன்வைக்க, அதனை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார் யர்ஸ். மேலும் கீத்மூர் அவர்களின் கருத்தை ஏதோ ஒரு வார்த்தையில் யர்ஸ் விமர்சிக்க அந்த வார்த்தை எடிட் செய்யப்பட்டு பீப் ஒலி கொடுக்கப்பட்டது.

குர்ஆன் கூறும் சிசு வளரியல் குறித்த தகவல்கள் அன்றைய கால மனிதர்களால் யூகிக்கக்கூடிய ஒன்றுதான் என்றும், அரிஸ்டாட்டிலிடமிருந்து முஹம்மது (ஸல்) அவர்கள் இந்த தகவல்களை நகல் எடுத்து விட்டார் என்றும் குற்றம் சாட்டினார் யர்ஸ்.

அதற்கு ஹம்ஸா கேட்டார் "சிசு வளரியலுக்கு ஒத்துவராத பல விசயங்களை அரிஸ்டாட்டில் சொல்லியிருக்கின்றார். காப்பி அடித்திருந்தால் அனைத்தையும் தானே அடித்திருக்கவேண்டும்? அது எப்படி முஹம்மது (ஸல்) அவர்கள் சரியான ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்துவிட்டு, தவறானவற்றை விலக்கியிருக்கின்றார்?'

யர்ஸ் ஒப்புக்கொள்ளவில்லை. குர்ஆனில் கூறப்பட்டுள்ள சிசு வளரியல் குறித்த கருத்துக்கள், அன்றைய கால மனிதர்களால் யூகிக்க கூடிய ஒன்றுதான் என்பதில் உறுதியோடு இருந்தார். முஹம்மது (ஸல்) அவர்கள், அன்றைய கால அறிஞர்களுடன் கலந்துரையாடி இந்த தகவல்களை பெற்றிருக்கவேண்டும் என்று சொல்ல, அதற்கு ஹம்ஸா "அப்படி இருந்தால் அதற்கு ஆதாரம் காட்ட முடியுமா?" என்று கேட்க, யர்ஸ் சிறிது நேரம் யோசிக்க ஆரம்பித்தார்.

பின்னர், "இது ஒரு நியாயமான யூகம்" என்று தன்னுடைய கருத்தை மாற்றிக்கொண்டார் மயர்ஸ் .

மற்றொரு சுவாரசிய நிகழ்வும் நடந்தது.

"இதே போன்ற கருத்துக்களை தான் மத நம்பிக்கையாளர்கள் திரும்ப திரும்ப கூறிக்கொண்டே இருக்கின்றீர்கள்" என்று யர்ஸ் கூற, திரும்ப அடித்தார் பாருங்கள் ஹம்ஸா.

"Professor Myers, உங்களுக்கு எப்படியிருக்கும்? நாத்திகர்கள் காலங்காலமாக இதே வாதங்களைதான் வைத்து கொண்டிருக்கின்றார்கள் என்று நான் சொன்னால் நீங்கள் எப்படி உணர்வீர்கள்? இப்படிதான் நாத்திகர்கள் பேசிக்கொண்டிருப்பார்கள் என நானும் சொல்லலாமா?" என்று கேட்க, சற்று யோசனைக்கு பிறகு புன்முறுவலோடு யர்ஸ் சொன்னார் "Go Ahead".

சிறிது நேரம் சென்று அறோன்ரா (AronRA) என்ற நாத்திகர் யர்ஸ்சுடன் சேர்ந்து கொண்டார்.

அவர் சொன்னார், "உங்கள் குர்ஆன் பரிணாமத்தை ஏற்றுக்கொள்ளவில்லை"

அதற்கு ரஷீத் சொன்னார், "பரிணாமத்தை பற்றி குர்ஆன் பேசவில்லை"

மறுபடியும் அறோன்ரா  "உங்கள் குரான் மாபெரும் வெள்ளத்தை பற்றி பேசுகின்றது" (கிருத்துவம் சொல்லக்கூடிய நூஹ் (அலை) அவர்களது வரலாறு அப்படியே குர்ஆனில் இருக்கும் என்று நினைத்திருப்பார் போல. குரான் சொல்லக்கூடிய வெள்ளம் கிருத்துவத்தில் உள்ளது போல அல்ல)

அதற்கு ரஷீத், "இதுவும் குர்ஆனில் இல்லை"

மறுபடியும், மலைகளை பற்றியும், அதன் செயலாற்றங்கள் குறித்தும் கேள்விகளை எழுப்பினர் முஸ்லிம்கள். எப்படி ஒரு பழங்கால புத்தகம் இவ்வளவு துல்லியமாக இந்த விசயத்தை கூறியிருக்க முடியும் என்று கேள்வி கேட்க, அதற்கு அறோன்ரா "நீங்கள் சொல்வது சிறு பகுதி மட்டுமே. மலைகள் விசயத்தில் இன்னும் பல செய்திகள் உள்ளன" என்று கூறினார். மொத்தத்தில், குரானின் மலைகள் பற்றிய தகவல்களை அவர்கள் மறுக்கவில்லை.

பின்னர் பேசப்பட்டதெல்லாம் நாம் அடிக்கடி கேள்விப்படும் வாதம்தான். அதாவது உணர்வுப்பூர்வமான வாதங்கள்

கடவுளை மறுக்க, இவர்களைப் போன்றவர்கள் கூட, அறிவியல் ஆதாரங்களை கொடுக்காமல், உணர்வுப்பூர்வமான வாதங்களை தான் வைக்கின்றனர். ம்ம்ம்...

உணர்வுரீதியாக கடவுளை மறுப்பது பற்றி பேசும்போது குர்ஆனின் பின்வரும் வசனம் நினைவுக்கு வருகின்றது, 

இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி "நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்" என்று கூறியபோது, அவர்கள் "நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி ரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னை துதித்து, உன் பரிசுத்தத்தைப் போற்றியவர்களாக இருக்கின்றோம்" என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன்" நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்" எனக் கூறினான். --- Qur'an 2:30

கடைசியாக யர்ஸ்சிடம், "உங்கள் போக்குவரத்துக்கான செலவை நாங்களே ஏற்றுக்கொண்டு, எங்களுடன் ஒரு முழுமையான இதுபோன்ற உரையாடலுக்கு வரச்சொல்லி அழைத்தால் தாங்கள் வருவீர்களா?" என்று ஹம்ஸா கேட்க, அதற்கு "பார்க்கலாம்" என்று கூறினார் யர்ஸ்.

அதேநேரம், தன்னுடைய நிகழ்ச்சிக்கு (The Magic Sandwich Show) முஸ்லிம்களை அழைப்பதாக கூறினார் அறோன்ரா.

"அங்கு எனக்கு sandwich கிடைக்குமா? அது ஹலால் உணவுதானே" என்று ஹம்ஸா கேட்க அனைவரும் சிரித்துக்கொண்டே விடைபெற்றனர்

பின்னர் டாகின்ஸ்சுடன் சிறிது நேரம் உரையாடினார் ஹம்ஸா. எடுத்த எடுப்பிலேயே டாகின்ஸ் கேட்ட முதல் கேள்வி "நீங்கள் பரிணாமத்தை நம்புகின்றீர்களா?"

அதற்கு ஹம்ஸா சொன்ன பதிலை நான் மிகவும் ரசித்தேன். மிக அழகாக கூறினார், "என்னை கேட்கின்றீர்களா? நான் அந்த முடிவை எடுப்பதற்கான போதிய ஆதாரங்கள் இன்னும் இல்லை"

Wowwwww....

இந்த பதிலை கேட்ட டாகின்ஸ், "இது ஒரு அறிவார்ந்த பதில். நான் உங்களுக்கு ஆதாரங்கள் குறித்து விளக்குகின்றேன்" என்று ஆரம்பிக்க, அதற்கு மேல் நடந்த டாகின்ஸ்-ஹம்ஸா ஆகியோரது உரையாடலையும், நான் மேலே சொன்ன யர்ஸ்-அறோன்ரா-ஹம்ஸா-ரஷீத் ஆகியோரது விவாதத்தையும் காண கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.




இந்த வீடியோ குறித்து பதிவெழுதியிருக்கின்றனர் டாகின்ஸ்சும், யர்சும். அதில் இஸ்லாம் குறித்த அவர்களது அறியாமை தெள்ளத்தெளிவாக பளிச்சிடுகின்றது.

இவர்களது அறியாமையை உலகறியச்செய்யும் விதமாக அதிரடியான ஒரு வீடியோவை மூன்று நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருக்கின்றது IERA. அந்த வீடியோவை கீழே பார்க்கலாம்.




சுப்ஹானல்லாஹ்...எவ்வளவு பொறுமையாக, தெளிவாக விளக்குகின்றார் அட்னன் ரஷீத்.

இந்த மாநாட்டின்போது பல்வேறு சங்கடங்களை சந்தித்தபோதும் (கண்ணியமற்ற வார்த்தையை ஹம்ஸாவை நோக்கி பயன்படுத்தி தன்னை யாரென்று காட்டிக்கொடுத்திருக்கின்றார் டாகின்ஸ்), அவற்றையெல்லாம் இறைவனுக்காக பொறுத்து கொண்டு, இஸ்லாமை கொண்டு செல்வதில் மட்டுமே தங்களின் கவனத்தை செலுத்திய இந்த அற்புத உள்ளங்களுக்கு, இவ்வுலகிலும் மறுமையிலும் மிகச்சிறந்த கூலியை இறைவன் வழங்குவானாக...ஆமீன்.

இறுதியாக:

இந்த மாநாடு குறித்து மிக அருமையாக பின்வருவதை கூறினார் ரஷீத்,

இந்த மாநாட்டிலிருந்து வெளியே வந்த போது என்னுடைய இறைநம்பிக்கை மேலும் வலுவாகியிருப்பதை உணர்ந்தேன். 

இறைவா, எங்களை என்றென்றும் நேர்வழியில் செலுத்துவாயாக...ஆமீன்.

Please Note:
கடந்த காலங்களிலும் சரி, தற்போதும் சரி, விவாதத்திற்கு வருமாறு டாகின்ஸ்சை அழைத்தாகிவிட்டது.

எனக்கு புரியாத விஷயம் இதுதான். நாத்திகத்தை மேலும் கொண்டு செல்ல வேண்டுமென்றுதானே மாநாடு நடத்தினார்கள்? அவர்கள் எதனை ஆணித்தரமாக நம்புகின்றார்களோ அதனைப்பற்றி விவாதிக்கதானே அழைக்கின்றோம்? கலந்து கொள்வதில் என்ன தயக்கம்? சமூகத்தில் நன்கு அறியப்பட்ட மற்ற சில நாத்திகர்கள் கலந்து கொள்ளும்போது டாகின்ஸ்சுக்கு மட்டும் என்ன பிரச்சனை?

அவருக்கே வெளிச்சம்.

இறைவா, நீ நாடுவோரில் டாகின்ஸ்சையும் சேர்த்து கொள்வாயாக...ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

IERA's Official Website:
1. http://www.iera.org.uk. link

Brother Hamza's official website and blog:
1. http://www.hamzatzortzis.com. link
2. hamzatzortzis.blogspot.com. link

Br.Hamza's debate with Ed Bucker:
1. Islam or Atheism? You decide - youtube. link

References:
1. IERA DAWAH TEAM RESPONDS TO INTERNATIONAL ATHEISM - IERA website. link
2. IERA engages with PZ Myers, AronRa & Richard Dawkins at the World Atheist Convention - Youtube. link
3. Adnan Rashid Responds to Richard Dawkins, AronRa & PZ Myers - Youtube. link 
4. Islamic bore talks over PZ Myers - Richard Dawkins Website. link
5. The full Muslim monty - PZ Myers blog. link 

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Wednesday, June 1, 2011

ஆஸ்திரேலிய பேருந்துகளில் இஸ்லாமிய விளம்பரங்கள்...





நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

ஆஸ்திரேலியாவில், இதுவரை இல்லாத அளவிலான இஸ்லாமிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை, தாங்கள் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது சிட்னியை தலைமையிடமாக கொண்ட "மை பீஸ் (My Peace)" என்ற அமைப்பு. 

இத்திட்டத்தின் முதல் கட்டமாக, சிட்னி நகரின் பரபரப்பு மிக்க சாலைகளில் மிகப்பெரிய அளவிலான விளம்பரப்பலகைகளை நிறுவியுள்ளது இந்த அமைப்பு. கடந்த மே 26 ஆம் தேதி நிறுவப்பட்ட இந்த விளம்பரங்கள் இன்னும் நான்கு வார காலத்திற்கு அந்த பகுதிகளில் நீடிக்கும். 

இது குறித்த செய்தி ஆஸ்திரேலியாவின் பாரம்பரியமிக்க நாளிதழான "சிட்னி மார்னிங் ஹெரால்ட்"டில் வெளிவந்தவுடன் கூடவே பரபரப்பும் தொற்றிக்கொள்ள ஆரம்பித்து விட்டது. இந்த விளம்பர பலகைகள் பற்றி கருத்து தெரிவிக்கும் இந்த பத்திரிகை "கிருத்துவ நம்பிக்கையின் அடிப்படையிலேயே கை வைப்பதாக உள்ளன இந்த விளம்பரங்கள்" என்று குறிப்பிட்டுள்ளது. 

அப்படி என்ன இருக்கின்றது அந்த விளம்பர பலகையில்? 

பின்வருவது தான் அந்த விளம்பர பலகைகளில் உள்ள வாசகம், 
Jesus: A Prophet of Islam - இயேசு : ஓர் இஸ்லாமிய இறைத்தூதர்
மேற்கண்ட வாசகத்திற்கு பக்கத்தில் இந்த அமைப்பின் தொலைப்பேசி எண்கள் மற்றும் வலைத்தள முகவரி கொடுக்கப்பட்டு "குர்ஆன் மற்றும் இஸ்லாமிய நூல்களை" இலவசமாக பெற தொடர்பு கொள்ளவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.             



இந்த விளம்பரங்கள் குறித்து விளக்கமளிக்கும் இத்திட்ட அமைப்பாளர் தியா முஹம்மத் (Diaa Mohamed), முஸ்லிம்களையும் கிருத்துவர்களையும் ஒரு பொதுவான பார்வையின் கீழ் கொண்டுவரவும், முஸ்லிம்கள் ஏசுவை நம்புகின்றவர்கள் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவுமே இந்த விளம்பரங்கள் என்று கூறியுள்ளார். 

வரும் நாட்களில் மேலும் சில வாசகங்களை கொண்ட விளம்பர பலகைகள் நிறுவப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அந்த வாசகங்கள்,  

  • Holy Qur'an: The Final Testament - புனித குர்ஆன் : கடைசி ஏற்பாடு.    
  • Muhammed (s): A Mercy to Mankind - முஹம்மது (ஸல்): மனிதகுலத்தின் கருணை. 
  • Islam: Got Questions? Get Answers - இஸ்லாம்: கேள்விகளா? பதிலை பெற்று கொள்ளுங்கள். 

இந்த விளம்பரத்திற்கு எதிர்ப்புகள் எழ தொடங்கியுள்ளன. இரு நாட்களுக்கு முன்பு ஒரு விளம்பரப்பலகை சேதப்படுத்தப்பட்டுள்ளது. 

தாங்கள் இதற்காக பின்வாங்க போவதில்லை என்றும், அந்த விளம்பரங்கள் மூலம் தங்களுக்கு வந்த அழைப்புகளில் பெரும்பாலானவை பாசிடிவ்வாகவே இருந்ததாகவும், சுமார் பத்து சதவித அழைப்புகள் மட்டுமே தங்களை தாக்கக்கூடிய எண்ண அலைகளில் இருந்ததாவும் தியா முஹம்மத் தெரிவித்துள்ளார். 

மேலும், சேதப்படுத்தப்பட்ட அந்த பலகை விரைவிலேயே சரி செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். 

இந்நிறுவனத்தின் முதல் செயற்திட்டம் எதிர்ப்புகளை சந்திக்க ஆரம்பித்துள்ள நிலையில் இவர்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேலும் பரபரப்பை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகின்றது. 

அதாவது, நான்கு வார காலத்திற்கு, சிட்னியின் முக்கிய வழித்தடங்களில் ஓடும் சுமார் நாற்பது பேருந்துகள் தங்களது இஸ்லாமிய விளம்பரங்களை தாங்கி செல்லும் என்று அறிவித்துள்ளது இந்த அமைப்பு.

பேருந்துகளின் பின்புறத்திலும், பக்கவாட்டிலும் இருக்கும் இந்த விளம்பரங்கள், "இஸ்லாம் குறித்த கேள்விகளா? தொடர்பு கொள்ளுங்கள் இந்த எண்களில்" என்று இருக்குமாம். இது குறித்த மாதிரியை தன் தளத்தில் வெளியிட்டுள்ளது "My Peace".      



நீங்கள் மேலே பார்த்தது மட்டுமின்றி, தங்களின் அடுத்தக்கட்ட திட்டமாக, தொலைக்காட்சிகள் வழியாகவும் தங்களது இஸ்லாமிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள போவதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. 

இந்நிறுவனத்தின் வலைத்தளம் பல்வேறு தகவல்களை கொண்டதாக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது (தள முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது). தங்களது செயற்பாடுகளாக இவர்கள் கூறியுள்ளது, 

  • இஸ்லாம் குறித்த தவறான புரிந்துணர்வுகளை கையாள்வது, 
  • சக ஆஸ்திரேலியர்களுக்கு இஸ்லாம் பற்றி எடுத்து சொல்வது, 
  • இஸ்லாம் குறித்த எவ்விதமான கேள்வியையும் முஸ்லிமல்லாதவர்கள் கேட்க முன்வருமாறு அழைப்பது,   
  • குர்ஆன் மற்றும் இதர இஸ்லாமிய நூல்களை இலவசமாக அளிப்பது, 
  • பள்ளிவாசல்களுக்கு முஸ்லிமல்லாதவர்களை அழைத்து செல்வது, 
  • எந்தவொரு தலைப்பிலும் சொற்பொழிவாற்ற தயாரான நிலையில் அறிஞர்களை வைத்திருப்பது,

மேலே குறிப்பிட்டுள்ளவை மட்டுமின்றி புதிய முஸ்லிம்களுக்கு தேவையான உதவிகளை செய்வதில் மிக மும்முரமாக செயல்படுகின்றனர் இந்த இயக்கத்தினர். அல்ஹம்துலில்லாஹ். பெண்களுக்கான பகுதியும் மிக அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. 

உலகளவில் பல இஸ்லாமிய இயக்கங்களை கண்டு நான் வியந்துண்டு. தங்கள் மார்க்கத்தின் மீதான ஆழ்ந்த பற்று, எவ்வித கேள்விக்கும் தங்களிடம் பதில் உண்டு என்ற அசராத நம்பிக்கை, அதனை வெளிப்படுத்தும் விதமான விவாதங்கள், நேர்த்தியான முறையில் வடிவமைப்பட்ட செயற்திட்டங்கள் என்று இந்த இயக்கங்கள் என்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. அந்த வரிசையில் இப்போது "My Peace"சும் சேர்ந்துள்ளது. மாஷாஅல்லாஹ்...

குறிப்பு: 

நாம் மேலே பார்த்தது போன்ற செயல்திட்டத்தை "Gain peace" என்ற அமைப்பு கடந்த சில வருடங்களாக அமெரிக்காவில் செயல்படுத்தி வருவது இங்கே நினைவுகூறத்தக்கது

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன். 

MY PEACE official website:
1. mypeace.com.au. link

Gain Peace official website:
1.gainpeace.com. link

References:
1. Press release - mypeace.com.au. link 
2. He's not the son of God, just the support act - Sydney Morning Herald, dated 28th May, 2011. link
3. Billboard loses prophet margin - Sydney Morning Herald, dated 30th May, 2011. link


உங்கள் சகோதரன், 
ஆஷிக் அஹமத் அ