Pages

Friday, July 29, 2011

இஸ்லாமை தழுவினார் பிரபல தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் பார்னெல்...



நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..ஆமீன்.

இந்த இளம் கிரிக்கெட் வீரர், சில ஆண்டுகளுக்கு முன்பு, தான் சார்ந்த உள்ளூர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அதற்கு காரணம், இரவு விடுதியில் அவர் நடந்துக்கொண்டவிதம். இன்றோ அவர் ஒரு துளி மதுவைக்கூட தொடுவதில்லை என்று அவரது அணி நண்பர்கள் ஆச்சர்யத்தோடு கூறுகின்றனர். 

இந்த மாற்றத்திற்கு காரணம், இஸ்லாம். 

இந்த இளைஞர் வேறு யாருமல்ல. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் பிரபல வீரரான வேன் பார்னெல் (Wayne Parnell) தான் அவர். 


ஒருவருக்குள் இஸ்லாம் கொண்டு வரும் மாற்றங்கள் அற்புதமானவை. அதற்கு இன்னொரு உதாரணம் சகோதரர் பார்னெல்.

இருபத்தி இரண்டு வயதாகும் பார்னெல், தான் இஸ்லாமை தழுவியதை நேற்று வெளிப்படையாக அறிவித்தார். 

கடந்த ஜனவரி மாதத்தின்போதே தான் இஸ்லாத்தை தழுவிவிட்டதாகவும், அதனை இதுநாள் வரை தனக்குள்ளாகவே வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

இஸ்லாம் குறித்து அதிக காலம் ஆராய்ந்ததாகவும், அதன் பிரதிபலிப்பே தன்னுடைய இந்த முடிவு என்று குறிப்பிடும் பார்னெல், தன்னுடைய பெயரை "வலீத்" என மாற்றிக்கொள்ள விருப்பம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வலீத் என்றால் "புதிதாக பிறந்தவன்" என்று பொருள். 

பார்னெல்லின் முடிவு தென் ஆப்பிரிக்க (மற்றும் உலகளாவிய) முஸ்லிம்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ள நிலையில், அவருடைய முடிவிற்கு சக தென்ஆப்பிரிக்க வீரர்களான ஹாசிம் அம்லாவோ அல்லது இம்ரான் தாஹீரோ காரணமல்ல என்று தென் ஆப்பிரிக்க அணியின் மேலாளரான முஹம்மது மூசாஜி குறிப்பிட்டுள்ளார். 

இதனை உறுதிப்படுத்தியுள்ள தென்ஆப்பிரிக்க வீரர்கள், பார்னெல்லின் மனமாற்றத்திற்கு ஹாசிம் அம்லா காரணமில்லாத அதே வேலையில், அம்லாவின் இஸ்லாம் மீதான பற்றைக்கண்டு தாங்கள் கவரப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

பயணத்தின்போது கூட தொழுகைகளை தவறாமல் நிறைவேற்றுவதும், மது பரிமாறப்படும் தங்களுடைய இரவு நேர கொண்டாட்டங்களில் கலந்துக்கொள்ளாமல் தவிர்ப்பதும், தென் ஆப்பிரிக்க அணியின் ஸ்பொன்சர்களான  Castle Lager (பீர் நிறுவனம்) கொடுக்கும் ஆடைகளை அணிந்துக்கொள்ள மறுப்பதும் தங்களை மிகவும் கவர்ந்துள்ளதாக தென்ஆப்பிரிக்க வீரர்கள் கூறுகின்றனர்.

அல்ஹம்துலில்லாஹ், ஒருவர் முழுமையான முஸ்லிமாக வாழ முயற்சிக்கும்போது அவரைச் சுற்றி அவர் ஏற்படுத்தும் மாற்றங்கள் அற்புதமானவை.

தன்னுடைய முதல் ரமலானை எதிர்நோக்கி இருப்பதாக குறிப்பிடும் பார்னெல், தன்னுடைய முடிவு இந்த சிறப்பான நேரத்தில் மரியாதையுடன் பார்க்கப்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார். 
    
தென் ஆப்பிரிக்கா குறித்து பேசும்போது அஹ்மத் தீதத் அவர்களும், அவர் தொடங்கி வைத்த இஸ்லாமிய அழைப்பு அமைப்பான IPCI-யும் நினைவுக்கு வருகின்றது (இது குறித்த இத்தளத்தின் கட்டுரையை காண <<இங்கே>> சுட்டவும்). தென் ஆப்பிரிக்காவில் ஒரு கட்டுக்கோப்பான இஸ்லாமிய சமூகத்தை இறைவனின் கிருபையால் உருவாக்கியவர் தீதத். அவர் தொடங்கிய IPCI இன்றளவும் மிகச் சிறப்பாக செயல்பட்டு பலரையும் இஸ்லாமின்பால் கவர்ந்து வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்...

சகோதரர் பார்னெல்லின் இந்த பயணத்தை இறைவன் எளிதாக்கி வைப்பானாக...ஆமீன். 

"தான் நாடியோரை அல்லாஹ் தன்பால் தேர்ந்தெடுத்து கொள்கிறான் - முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்" --- குர்ஆன் 42:13  

இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமீன்...

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்....

References:
1.Parnell announces conversion to Islam - 28th July 2011. Espncricinfo. link
2. Proteas paceman Wayne Parnell converts to Islam - 28th July 2011. Times of India. link
3. IPCI. link

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ 

Tuesday, July 12, 2011

சீனாவின் ஹுய் முஸ்லிம்கள் - யார் இவர்கள்?



நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

சீனாவில் இஸ்லாம் - ஓர் ஆய்வு (Part 2 of 2):

சீன முஸ்லிம்கள் குறித்த இத்தளத்தின் முந்தைய பதிவை (படிக்காதவர்கள் <<இங்கே>> சுட்டவும்) கண்ட சகோதரர் ஒருவர் தொலைப்பேசியில் அழைத்திருந்தார். சீன முஸ்லிம்களுடனான தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ள தொடங்கினார்.

1990-களில், ஹஜ் கடமையின்போது சீன சகோதரர்களை சந்தித்தாராம் இந்த சகோதரர். பலவித சவால்களுக்கு மத்தியிலும் தங்களுடைய இறைநம்பிக்கையை வலிமையாக பற்றிப்பிடித்திருக்கும் அந்த சீனர்களை கண்டு வியந்து அவர்களை கட்டியணைத்து முத்தமிட்டாராம்.  

சீன முஸ்லிம்களின் வரலாற்றை ஆய்வு செய்யும்போது நம்மில் பலரையும் பிரமிக்க வைக்கும் ஒரு விஷயம், பலவித இக்கட்டான சூழ்நிலைகளை தாண்டி தங்கள் மார்க்கத்தை அவர்கள் கடைப்பிடித்து வந்திருக்கும் அந்த அர்ப்பணிப்புதான். அல்ஹம்துலில்லாஹ்.

சீனாவின் உய்குர் முஸ்லிம்கள் குறித்து முதல் பாகத்தில் பார்த்தோம். இன்ஷா அல்லாஹ், இந்த பதிவில், சீனாவின் ஹுய் முஸ்லிம்கள் மற்றும் சீன முஸ்லிம்கள் குறித்த சில பொதுவான தகவல்களை பார்க்கவிருக்கின்றோம்.

நான் முன்னரே கூறியது போன்று, சீனாவின் பெரும்பான்மை இனமான ஹன் இனத்தவருக்கும் உய்குர் முஸ்லிம்களுக்கும் பல வித்தியாசங்கள் உண்டு. ஆனால், ஹன் இனத்தவருக்கும் ஹுய் இன முஸ்லிம்களுக்கும் அப்படிப்பட்ட பெரிய வேறுபாடுகள் கிடையாது. பார்ப்பதற்கு அப்படியே ஹன் இனத்தவரை ஒத்திருப்பார்கள் ஹுய் முஸ்லிம்கள். இரு இனத்தவரும் பேசுவது மாண்டரின் மொழிதான். இருப்பினும் இவர்கள் வெவ்வேறு இனத்தவர், காரணம் இஸ்லாம்.

ஆம், இந்த இரண்டு இனத்தவரையும் பிரிப்பது இஸ்லாம் என்ற வாழ்வியல் நெறி மட்டுமே.

கேட்பதற்கு ஆச்சர்யமாக இருந்தாலும் நிகழ்வுகளை இப்படித்தான் விளக்குகின்றன ஊடகங்கள். 

சீனாவில் இஸ்லாம் நுழைந்த வரலாறு:

நான் இந்த பதிவுகளை எழுதத் தொடங்கியபோது, சீனாவில் சுமார் 2-10 கோடி முஸ்லிம்கள் வாழ்கின்றனர் என்ற செய்தி மிகுந்த ஆச்சர்யத்தை கொடுத்தது. இதனை நான் நிச்சயம் எதிர்ப்பார்த்திருக்கவில்லை.

சீன முஸ்லிகளின் மக்கட்தொகையை காட்டிலும் எனக்கு வியப்பைத் தந்த மற்றொரு விசயம், அரேபிய முஸ்லிம்களின் வரலாறு எவ்வளவு பழமையானதோ (கிட்டத்தட்ட) அதே அளவு பழமையானது சீன முஸ்லிம்களின் வரலாறு என்ற செய்தி.

ஹுய் முஸ்லிம்களின் வரலாற்றை பின்தொடர்ந்து சென்றோமானால் அது நாயகம் (ஸல்) அவர்களது காலத்திற்கு (/அருகில்) செல்கின்றது.

651-ஆம் ஆண்டு, இஸ்லாமிய அரசின் மூன்றாவது கலிபாவான உஸ்மான் (ரலி) அவர்கள், தன்னுடைய தூதுக்குழுவை சீன பேரரசரான யுங் வீய்யிடம் (Yung-Wei) அனுப்பியதாக வரலாற்று தகவல்கள் கூறுகின்றன.

இந்த தூதுக்குழுவை தலைமையேற்றி நடத்திச்சென்றது நாயகம் (ஸல்) அவர்களின் உறவினரான சாத் இப்ன் அபி வக்கஸ் (ரலி) அவர்கள். இந்த தூதுக்குழு சீன ஆட்சியாளரை சந்தித்து இஸ்லாமை தழுவுமாறு அழைப்பு விடுத்தது.

இந்த அழைப்பை நிராகரித்துவிட்டாலும், இஸ்லாம் மீதான தன்னுடைய மரியாதையை வெளிப்படுத்தும்விதமாக ஒரு பள்ளிவாசலை நிர்மாணிக்க உத்தரவிட்டார் யுங் வீய். இது 'நினைவுச்சின்ன' பள்ளிவாசல் (Memorial or Huaisheng Mosque) என்றழைக்கப்படுகின்றது. சுமார் பதினான்கு நூற்றாண்டுகளாக இன்றுவரை நீடித்து தன்னுடைய பெருமையை பறைச்சாற்றி கொண்டிருக்கின்றது இந்த பள்ளி.  

 
சீனாவிலுள்ள வரலாற்று ஆவணங்கள் மேற்கூறிய செய்தியை தெரிவித்தாலும், அரேபிய ஆவணங்கள் வேறுவிதமான செய்தியை சொல்கின்றன. அதாவது, நாயகம் (ஸல்) அவர்களது காலத்தின்போதே, நபித்தோழர்கள் மூலமாக இஸ்லாம் சீனாவிற்கு சென்றிருக்கின்றது என்ற செய்திதான் அது. இதனை சில மேற்கத்திய ஆய்வாளர்கள் தங்கள் நூல்களில் குறிப்பிட்டும் உள்ளனர்.

மற்றொரு தகவலும் இருக்கின்றது. சீனர்களுடனான அரேபியர்களின் தொழில்முறை உறவானது இறுதித்தூதர் வருவதற்கு முன்பிருந்தே வலிமையாக இருந்துள்ளது. பஸ்ரா நகரிலிருந்து அரேபியர்கள் மற்றும் பெர்ஷியர்கள் வணிகம் செய்ய சீனாவிற்கு சென்றுள்ளனர். இப்படிச் சென்றவர்களில் சிலர் சீனாவிலேயே நிரந்தரமாக தங்கியும் விட்டனர். பின்னர் இஸ்லாம் பரவியபோது, தங்களது உறவினர்கள் மூலமாக சீனாவில் இருந்த அரேபியர்கள்/பெர்ஷியர்கள் இதனை அறிந்துக்கொண்டு இஸ்லாத்தை தழுவியிருக்கலாம் என்பது அந்த மற்றொரு தகவல்.

மொத்தத்தில், சீனாவில் இஸ்லாம் நுழைந்த மிகச்சரியான காலக்கட்டம் குறித்து வெவ்வேறான தகவல்கள் இருந்தாலும், அனைத்து ஆய்வாளர்களும் ஆமோதிக்கும் ஒரு தகவல், ஏழாம் நூற்றாண்டிலேயே இஸ்லாம் சீனாவிற்குள் நுழைந்துவிட்டது என்பதுதான்.    

யார் இந்த ஹுய் முஸ்லிம்கள்?

அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் சீனாவுடனான வணிகத் தொடர்புகள், அரசியல்ரீதியான தொடர்புகள் வலுப்பட, அதிக அளவிலான முஸ்லிம்கள் சீனாவிற்கு வந்தனர். வந்தவர்களில் குறிப்பிடத்தக்க தொகையினர் சீனர்களை மணந்துக் கொண்டு சீனாவிலேயே குடியேரியும் விட்டனர்.

இப்படி குடியேறியவர்களின் சந்ததியினர்தான் இன்று ஹுய் முஸ்லிம்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

ஹுய் என்றால் என்ன அர்த்தம்?

சீனாவிற்கு வந்த அக்கால முஸ்லிம்களை சீனர்கள் 'ஹுய்ஹுய்' (HuiHui) என்றழைத்தனர். இந்த வார்த்தைக்கு 'வெளிநாட்டினர்' என்று அர்த்தம். பிறகு இந்த வார்த்தையே ஒரு குறிப்பிட்ட இனத்தின் பெயராக நிலைத்துவிட்டது.

ஹுய் முஸ்லிம்கள் குறித்த சில சுவாரசிய தகவல்கள்:

ஹுய் இனத்தவரின் இன்றைய பெயர்களின் முதல் எழுத்துக்களை உற்றுநோக்கினால் சில சுவாரசிய தகவல்களை புரிந்துக் கொள்ளலாம். 'ஹ' என்ற முதற்பெயர் 'ஹசன்' என்ற பெயரிலிருந்து வந்தது. அதுபோல, 'ஹு' என்ற முதற்பெயர் 'ஹுசைன்' என்பதிலிருந்து வந்தது. இப்படியாக இவர்களின் பெயர்களை ஆராய்ந்தால் அது இவர்களுடைய மூதாதையர்களிடம் போய் நிற்கும்.

கடைசியாக எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்குப்படி (2000 census), ஹுய் இன முஸ்லிம்களின் மக்கட்தொகை சுமார் ஒரு கோடி. சீன அரசால் பிரிக்கப்பட்டுள்ள முஸ்லிம் இனங்களிலேயே அதிக மக்கட்தொகையை கொண்ட இனம் ஹுய் தான். இவர்களுக்கு பிறகு உய்குர் இன முஸ்லிம்கள் வருகின்றனர்.

சீனா முழுக்க ஹுய் இன மக்கள் பரவியிருந்தாலும், ஐந்தில் ஒரு பகுதியினர் நின்க்சியா-ஹுய் தன்னாட்சி பகுதியில் (Ningxia Hui autonomous region) வாழ்கின்றனர்.


2006-ஆம் ஆண்டு நிலவரப்படி, நின்க்சியா பகுதியில் மட்டும் சுமார் 3000 பள்ளிவாசல்கள் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், இஸ்லாமிய பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் உள்ளன.

அரபி மொழி மீதான ஆர்வம் அதிகரித்தவண்ணம் இருக்கின்றது. 2005-ஆம் ஆண்டு, நின்க்சியா பல்கலைகழகம், அரபி மொழிக்கென தனி துறையை தொடங்கி இருக்கின்றது. மேலும் பல கல்வி நிறுவனங்கள் அரபி கற்றுக்கொடுக்க தொடங்கியிருக்கின்றன.


2006-ஆம் ஆண்டு நிலவரப்படி, நின்க்சியா பகுதியில், சுமார் 3000 மாணவர்கள் இமாம்களாக பணியாற்றுவதற்கு பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

இனி, சீன முஸ்லிம்கள் குறித்த சில பொதுவான தகவல்களை பார்ப்போம். 

சீன வரலாற்றை கூர்ந்து கவனிக்கும் எவரும் ஒருசேர ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம், சீன முஸ்லிம்கள் தங்கள் நாட்டிற்கு செய்த அளப்பரிய பங்களிப்புகள்.

கடல்வழி ஆராய்ச்சி, அரசியல், ராணுவம், கலை என்று பல துறைகளில் சீனாவின் முன்னேற்றத்திற்கு பங்காற்றியுள்ளனர் முஸ்லிம்கள்.

கொலம்பஸ்சுக்கு முன்னரே அமெரிக்காவை கண்டுபிடித்தவர் என்று போற்றப்படும் ஷெங் ஹி முதற்கொண்டு இன்றைய சீனாவின் விவசாயத்துறை துணை அமைச்சரான ஹுய் லியாங்யு வரை சீனாவின் முன்னேற்றத்திற்கு பங்களித்த முஸ்லிம்கள் பலர். நாம் மேலே பார்த்த ஷெங் ஹி மற்றும் அவரது குழுவினர்தான் மலேசியாவில் இஸ்லாமை பரப்பியவர்கள் என்ற வரலாற்று தகவல் இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

க்விங் (Qing Dynasty, 1644-1912) அரசப் பரம்பரை ஆட்சியை தவிர்த்து, சீனாவை ஆண்ட மற்ற பரம்பரைகளுடன் இணக்கமான உறவையே முஸ்லிம்கள் கொண்டிருந்தனர். பின்னர் 1912-ஆம் ஆண்டு சீன குடியரசு பிறந்தபோது, அரசுடனான முஸ்லிம்களின் உறவு மேம்பட தொடங்கியது.

மாவோவின் பண்பாட்டுப் புரட்சி:

மாவோ தலைமையில் நடந்த பண்பாட்டுப் புரட்சியின்போது (1966-1976), முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து மதத்தினரும் கடுமையான அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். பள்ளிவாசல்கள் சேதப்படுத்தப்பட்டன, பூட்டப்பட்டன.

மாவோவின் மரணத்திற்கு பிறகு நிலைமை சீரடையத் தொடங்கியது. பள்ளிவாசல்கள் முஸ்லிம்களிடத்தில் திரும்ப ஒப்படைக்கப்பட்டன. அவை சீர் செய்யப்பட அரசாங்கம் உதவி செய்தது.

நீண்ட காலத்திற்கு பிறகு தங்களுடைய மார்க்கத்தை வெளிப்படையாக பின்பற்ற வெளியே வந்த முஸ்லிம்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், புரட்சிக்கு முன்பிருந்ததை காட்டிலும் தற்போது முஸ்லிம்கள் அதிக அளவில் பெருகி இருந்தனர். அதுமட்டுமல்லாமல், இறைநம்பிக்கையில் சிறந்தவர்களாவும் இருந்தனர். இறைவனின் கிருபையை எண்ணி அகமகிழ்ந்தனர் முஸ்லிம்கள்.

அன்று தொடங்கிய மகிழ்ச்சி இன்று வரை நீடிக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ். இஸ்லாமை சரிவர பின்பற்றும் சீன முஸ்லிம்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஏசியா டைம்ஸ் இணையதளம் கூறுகின்றது. மார்க்க கல்வி கற்போரும், ஹிஜாப் அணியும் பெண்களின் எண்ணிக்கையும் பெருமளவில் உயர்ந்துவிட்டதாக அது மேலும் கூறுகின்றது.


சீன அரசின் அணுகுமுறை:

சீன அரசாங்கத்தை பொருத்தவரை முஸ்லிம்கள் விசயத்தில் (சின்ஜிஅங் பகுதியை தவிர்த்து) சிறிது அனுசரித்து போகவே விரும்புகின்றது. காரணம், முஸ்லிம் நாடுகளுடன் அது கொண்டுள்ள உறவு. சீன பொருட்களை நுகரும் நாடுகளின் வரிசையில் முன்னணியில் உள்ளன மத்திய கிழக்கு நாடுகள். இந்த உறவை எக்காரணத்தை கொண்டும் துண்டித்துக் கொள்ள விரும்பவில்லை சீனா. அரபி மொழி கற்பதை சீன அரசு ஊக்குவிப்பதும் இந்த காரணத்திற்காக தான்.

(நாட்டிற்கு முன்பாக தங்களது மார்க்கத்தை பிரதானப்படுத்த கூடாது. பதினெட்டு வயதுக்குட்பட்டோருக்கு மதக் கட்டளைகளை பிறப்பிக்க கூடாது. இமாம்களாக பணியாற்ற விரும்புபவர்கள் அரசாங்க அனுமதி பெறவேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றி முஸ்லிம்கள் தங்களது மார்க்கத்தை கடைப்பிடிக்கலாம்).

முஸ்லிம்களுடனான சீன அரசின் நல்லுறவுக்கு ஒரு உதாரணத்தை சொல்லலாம். 1993-ஆம் ஆண்டு, தங்களை புண்படுத்தும்விதமாக ஒரு புத்தகம் இருக்கின்றது என்று முஸ்லிம்கள் போராட்டம் நடத்த, அந்த புத்தகத்தின் பிரதிகள் அனைத்தையும் அழிக்க உத்தரவிட்டது சீன அரசு. அதுமட்டுல்லாமல், அந்த நூலை பிரசுரித்த நிறுவத்தின் தலைமை நிர்வாகிகளை வேலை நீக்கம் செய்யச் சொல்லியும் உத்தரவிட்டது.

சீன அரசின் ஒருக் குழந்தை திட்டம் சிறுபான்மையின முஸ்லிம்களுக்கு பொருந்தாது.

எட்டு வெவ்வேறு அறிஞர்களின் குர்ஆன் (அர்த்தங்களின்) மொழிபெயர்ப்புகள் மாண்டரின் மொழியில் உள்ளன.

ஹஜ் பயணம் மேற்கொள்ளும் முஸ்லிம்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. 2007-ஆம் ஆண்டு, ஹஜ் யாத்திரை செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை முதல் முறையாக பத்தாயிரத்தை தொட்டது. சென்ற ஆண்டு இதுவே 13,100-ஆக உயர்ந்தது.

சீனாவில் 30,000-த்துக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் இருக்கின்றன (பீஜிங் நகரில் 72 பள்ளிவாசல்கள் இருக்கின்றன. சுமார் மூன்று லட்சம் முஸ்லிம்கள் வசிக்கின்றனர்). 40,000-க்கும் மேற்பட்ட அரசாங்க அனுமதிப் பெற்ற இமாம்கள் இருக்கின்றனர். இந்த எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்து வருகின்றது.

பெண்களால் நடத்தப்படும் பள்ளிவாசல்கள்: 

தங்களின் தனித்தன்மையாக சீன முஸ்லிம்கள் கருதும் மற்றொரு விஷயம், பெண்களால் பெண்களுக்காக நடத்தப்படும் பள்ளிவாசல்கள்.

தொழ வைப்பதிலிருந்து, இந்த பள்ளிவாசல்களை நிர்வகிப்பதுவரை அனைத்தையும் பெண்களே கவனித்துக் கொள்கின்றனர்.

சீனாவின் Kaifeng நகரில் மட்டும் இதுப்போன்ற சுமார் பதினாறு பள்ளிவாசல்கள் இருக்கின்றன. நின்க்சியா பகுதியில் மட்டும் சுமார் இருநூறு பெண் இமாம்கள் உள்ளனர். 

பெண்களுக்கான பள்ளிவாசல்கள் என்பது இன்று நேற்று ஏற்பட்ட ஒன்றல்ல. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே இம்மாதிரியான பள்ளிவாசல்கள் சீனாவில் இருக்கின்றன. பெண்களுக்கான பல்நோக்குகூடங்களாக திகழ்கின்றன இந்த பள்ளிவாசல்கள். 

நீங்கள் மேலே பார்த்த தகவல்கள் உங்களில் சிலருக்கு மிகுந்த ஆச்சர்யத்தை தந்திருக்கலாம். சீன முஸ்லிம்கள் பற்றிய பல அற்புத தகவல்கள் சீன அரசின் கட்டுப்பாடுகளால் உலகளாவிய முஸ்லிம்களின் கவனத்திற்கு வராமலேயே சென்று விடுகின்றன.

சுமார் 1400 ஆண்டுகளாக, (முஸ்லிம்கள் என்னும்) தங்களுடைய அடையாளத்தை சுமந்து வந்திருப்பதென்பது நிச்சயமாக சாதாரண விசயமல்ல. தனிமைப்படுத்தப்பட்ட ஒரு சமுதாயம், தான் சார்ந்த நாட்டின் கலாச்சாரத்தில் மூழ்கி தன்னை தொலைத்துவிடாமல் இருந்தது நிச்சயம் வியப்பளிக்கும் தகவல்...

சீன முஸ்லிம்கள் குறித்த இந்த பதிவுகளில் நான் பகிர்ந்துக் கொள்ள முயற்சித்திருப்பது மிகச் சிறிய பகுதி மட்டுமே. சீன முஸ்லிம்கள் என்னும் நம் மார்க்க சகோதரர்கள் நம்மிடமிருந்து தனிமைப்பட்டு நின்றாலும், தங்களின் ஈமானை தக்க வைத்துக் கொண்டதில் நமக்கெல்லாம் ஒரு மிகச் சிறந்த முன்னுதாரணமாக திகழ்கின்றனர் என்றால் அது மிகையல்ல...அல்ஹம்துலில்லாஹ்.

இளைஞர்கள் அதிகளவில் வீரியத்துடன் செயல்பட்டு கொண்டிருக்கும் சீன முஸ்லிம் சமூகத்தை பார்க்கும்போது, அவர்களின் எதிர்காலம் பிரகாசமான ஒன்றாகவே தோன்றுகின்றது. இன்ஷா அல்லாஹ்.

இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமீன்.

References:
1. Muslims in China keep their faith -  Chow How Ban, 13th Jan 2011, The Star. link
2. China's 'lost' Muslims go back to the future - Hamish McDonald, 26th Feb 2005, The Age. link
3. From Mulberry to Silk – The Journey of Islam in China - Musaddique Thange, Whyislam.org. link
4. Islam in China - BBC. link
5. Islam in China Revisited - Razib Khan, 28th May 2010. islaminchina.info. link
6. Islam in China: FAQ - islaminchina.wordpress.com. link
7. Islam History in China - China Discoverer. link
8. Hui Muslims in China - Shanghaiist. link
9. Hui People - My china tours. link
10. Islam with Chinese characteristics - Pallavi Aiyer, 6th Sep 2006, Asia Times. link
11. Islam in China (650 - 1980 CE) - Yusuf Abdul Rahman, Islam Awareness. link
12. Islam grows in Red China - Dietmar Muehlboeck, Mail Archive. link
13. Islam in China - cinaoggi.it. link
14. History of Islam in China - Chinese School. link
15. The Land of the Pure and True - Muslims in China Feature: Ethar El-Katatney, Issue 73 October 2010, Emel. Link
16. (Reprinted with permission from Aramco World Magazine, July-August 1985) Muslims in China - Columbia University, East Asian Curriculum Project.link
17. History of Islam in China and the distribution of the Islamic Faith in China - Asia Travel. link
18. Female Imams Blaze Trail Amid China's Muslims - LOUISA LIM, 21st July 2010, NPR. link 
19. All-Female Mosques in China - Reem, 21st Sep 2010, Inside Islam: Dialogues and Debates. link
20. The Silk Road - Ancient China for Kids. link
21. Women imams of China - Bruno Philip, 26th Aug 2005, The Guardian. link
22. Chronology for Hui Muslims in China - Minorities at Risk Project, UNHCR. link
23. Oldest Mosque in China - Built during Tang Dynasty: China History forum. link
24. Islam in china - Wikipedia. link
25. Hui people - Wikipedia. link
26. Hui Liangyu - Wikipedia. link
27. Go: Another facet to China - ANNIE FREEDA CRUEZ, 9th Sep 2010, New Straights times. link

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ.