Sunday, January 29, 2012

~600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால்...




நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

**********
பதிவிற்குள் நுழையும் முன் ஒருவர் புரிந்துக்கொள்ள வேண்டிய வார்த்தைகள்: 

1. உயிரினப்படிமங்கள் (Fossils) - விலங்குகள் மற்றும் தாவரங்களின் இயற்கையாக பாதுகாக்கப்பட்ட மிச்சங்கள்/ஆதாரங்கள்.    

2. தொல்லுயிரியலாளர் (Paleontologist) - உயிரினப்படிம ஆய்வுகளில் தனித்துவம் பெற்றவர்.
**********

ரு உயிரினம் படிப்படியாக காலப்போக்கில் இன்னொரு உயிரினமாக மாறுகின்றது (gradualism) என்ற கோட்பாட்டை டார்வின் முன்வைத்தார். அதாவது, '1' என்ற உயிரினம் '2' என்ற உயிரினமாக மாறுகின்றது என்றால் அது 1.1, 1.2, 1.3, 1.4 etc போன்ற நிலைகளுக்கு காலப்போக்கில் மாறி பின்னர் தான் '2' என்ற உயிரினமாக மாறும். 

மற்றுமொரு எளிய உதாரணம் மூலம் மேலே கூறிய கருத்தை பார்ப்போம். ஒரு எலி, புலியாக மாறுகின்றது என்று வைத்துக்கொள்வோம். முதலில் அந்த எலி கொஞ்ச கொஞ்சமாக மாற ஆரம்பிக்கும். காலப்போக்கில் 'பாதி எலி பாதி புலி' போன்ற உயிரினமாக மாறும். பின்னர் கடைசியாக புலியாக மாறிவிடும். 

இப்போது டார்வினின் கோட்பாட்டில் உள்ள பிரச்சனை என்னவென்றால், உயிரினப்படிமங்கள் மூலமாக நமக்கு கிடைக்கும் தகவலின்படி, வரலாற்றில் எலி இருந்திருக்கின்றது, அதுபோலவே புலியும் இருந்திருக்கின்றது. ஆனால், இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட உயிரினங்கள் (அதாவது 'பாதி எலி பாதி புலி'  மற்றும் 1.1, 1.2 போன்ற உயிரினங்கள்) உயிரினப்படிமங்களில் காணப்படவில்லை. 

இதுவரை நமக்கு கோடிக்கணக்கான படிமங்கள் கிடைத்து, வரலாற்றில் உயிரினங்கள் எப்படி இருந்திருக்கின்றன என்ற தெளிவை கொடுத்து கொண்டிருக்கின்றன. ஆனால் இவற்றில் ஒன்று கூட ஒரு உயிரினம் மற்றொன்றாக மாறிய ஆதாரத்தை தரவில்லை. 

டார்வினும் தன் கோட்பாட்டில் உள்ள இந்த பிரச்னையை நன்கு உணர்ந்து இருந்தார். எதிர்காலத்தில் உயிரினப்படிமங்கள் அதிக அளவில் கிடைக்கும் போது, தன் கருத்து நிரூபிக்கப்படும் என்று நினைத்தார் அவர். ஆனால், அன்று அவருக்கு கிடைக்காத ஆதாரம், இன்று வரை அவரது ஆதரவாளர்களுக்கும் கிடைக்கவில்லை. கிடைத்ததாக நினைத்த சில ஆதாரங்களும் பிற்காலத்தில் பித்தலாட்டம், ஆதாரமில்லை என்று கூறி நிராகரிக்கப்பட்டு விட்டன. (இதுக்குறித்த இத்தளத்தின் விரிவான பதிவுகளை காண <<இங்கே>> சுட்டவும்.

இடியக்கரா காலம்:

பரிணாம கோட்பாட்டிற்கு மற்றுமொரு பிரச்சனையாக இருப்பது கேம்ப்ரியன் கால (Cambrian) உயிரினப்படிமங்கள். கேம்ப்ரியன் காலம் என்பது சுமார் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டம். இந்த காலக்கட்டத்தில் தான் உயிரினங்கள் முதல் முதலாக உயிரினப்படிமங்களில் காணப்படுகின்றன. 

இதில் நம்மை வியப்பில் ஆழ்த்தும் விசயம் என்னவென்றால், பலதரப்பட்ட இந்த விலங்குகள், முதன் முதலாக காணப்படும் போதே சிக்கலான உடலமைப்புடன், முழுமையாக தோன்றியிருக்கின்றன. 

இது என்ன பெரிய ஆச்சர்யம், இந்த கேம்ப்ரியன் காலக்கட்டத்திற்கு முந்தைய காலக்கட்டத்திற்கு போய் பார்த்தால், இந்த விலங்குகளின் முன்னோர்கள் மற்றும் இவை படிப்படியாக மாறியதற்கு ஆதாரம் கிடைத்து விடப்போகின்றது என்று உங்களில் சிலர் கூறலாம். 

அங்கு தான் விசயமே இருக்கின்றது. கேம்ப்ரியன் காலக்கட்டத்திற்கு முந்தைய காலக்கட்டம் இடியக்கரா காலம் (Ediacara) என்று அழைக்கப்படுகின்றது. இது சுமார் 600 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டம். இந்த காலகட்டத்திற்கு சென்று பார்த்தால் விலங்குகளின் சுவடே அங்கு இல்லை. A complete blank...blank...blank. 

இது பரிணாமவியலாளர்களுக்கு மிகுந்த வியப்பையே இன்று வரை தந்துக் கொண்டிருக்கின்றது. அவர்களின் கோட்பாடு உண்மையென்றால், கேம்ப்ரியன் காலத்தில் திடீரென தோன்றியிருக்கும் உயிரினங்களின் முன்னோர்கள், பரிணமித்து கொண்டிருக்கும் நிலையில் இடியக்கரா காலக்கட்டத்தில் காணப்பட்டிருக்க வேண்டும். ஆனால் உண்மையோ அப்படியே நேரெதிராக இருக்கின்றது.

உலகில் முதன் முதலாக காணப்படும் விலங்குகள் பரிணாமம் என்ற ஒன்றை கடந்து வரவே இல்லை.

"Ever since Darwin there has been a disturbing void, both paleontological and psychological, at the base of the Phanerozoic eon. If his theory of gradualistic evolution be true, then surely the pre-Phanerozoic oceans must have swarmed with living animals—despite their conspicuous absence from the early fossil record" - N. J. Butterfield, Terminal Developments in Ediacaran Embryology, Science Magazine, 23 December 2011, Vol. 334, no. 6063, pp. 1655-1656, DOI: 10.1126/science.1216125.
தொல்லுயிரியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் ஒரு குழப்பமான வெற்றிடம் டார்வினின் காலந்தொட்டே இருந்து வருகின்றது. படிப்படியாக உயிரினங்கள் மாறியிருக்க வேண்டும் என்ற அவருடைய கோட்பாடு உண்மையென்றால், கேம்ப்ரியன் காலத்திற்கு முன்பான காலக்கட்டம் விலங்குகளால் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஆரம்ப கால உயிரினப்படிமங்களில் அவை தென்படவே இல்லை - (extract from the original quote of) N. J. Butterfield, Terminal Developments in Ediacaran Embryology, Science Magazine, 23 December 2011, Vol. 334, no. 6063, pp. 1655-1656, DOI: 10.1126/science.1216125 (simplified for the easy understanding).

இது பரிணாம கோட்பாட்டிற்கு மற்றுமொரு மிகப்பெரிய பின்னடைவாக இன்று வரை இருந்துக்கொண்டிருக்கின்றது. இடியக்கரா காலக்கட்டத்தில் விலங்குகள் காணப்படவில்லை என்றாலும் ஒரு ஆறுதலான(?) விசயம் பரிணாமவியலாளர்களுக்கு 1998-ஆம் ஆண்டு கிடைத்தது. தென் சீனாவில் கண்டெடுக்கப்பட்ட இடியக்கரா காலத்திய படிமங்கள், விலங்குகளின் கருக்களை (animal embryos) கொண்டிருந்ததாக நம்பப்பட்டது.

"...the 1998 report of fossilized animal embryos in the early Ediacaran Doushantuo Formation of South China was met with almost palpable relief" - N. J. Butterfield, Terminal Developments in Ediacaran Embryology, Science Magazine, 23 December 2011, Vol. 334, no. 6063, pp. 1655-1656, DOI: 10.1126/science.1216125 (tailored not to confuse).
1998-ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட இடியக்கரா காலத்திய விலங்குகளின் கருக்கள் கிட்டத்தட்ட மனரீதியான ஆறுதலை (பரிணாமவியலாளர்களுக்கு) தந்தன - (extract from the original quote of) N. J. Butterfield, Terminal Developments in Ediacaran Embryology, Science Magazine, 23 December 2011, Vol. 334, no. 6063, pp. 1655-1656, DOI: 10.1126/science.1216125.

ஒரு நிமிஷம்...

விலங்குகளின் கருக்கள் எல்லாம் படிமங்களில் தென்படும்போது, பரிணமித்து கொண்டிருக்கும் விலங்குகள் மட்டும் எப்படி கிடைக்காமல் போகும்? மிக எளிதாகவே நமக்கு தோன்றும் இத்தகைய கேள்விகள் பரிணாமவியலாளர்களுக்கு தோன்றாமல் இருக்க வாய்ப்பில்லை. இதுவாவது கிடைத்ததே என்று ஆறுதல் அடைவதெல்லாம் தங்கள் நம்பிக்கையை தக்கவைத்துக்கொள்ள இவர்கள் நடத்தும் மனரீதியான போராட்டமே ஒழிய வேறொன்றுமில்லை. 

அந்த ஆறுதலும் தற்போது வழக்கம் போல உடைந்து சுக்குநூறாகி இருக்கின்றது. 

சமீபத்தில் (23rd dec 2011) 'Science' ஆய்விதழில் வெளியான ஆய்வு முடிவுகள் பரிணாமவியலாளர்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சியை தந்திருக்கின்றன. அதாவது, 'ஆரம்ப கால விலங்குகளின் கருக்கள்' என்று அவர்கள் எண்ணிக்கொண்டிருந்த இடியக்கரா காலத்திய படிமங்கள், விலங்குகளின் கருக்களோ அல்லது விலங்குகளோ கிடையாது என்று தற்போது தெரிய வந்திருக்கின்றது.

"..X-ray microscopy revealed that the fossils had features that multicellular embryos do not, and this led the researchers to the conclusion that the fossils were neither animals nor embryos.." - Chinese Fossils Shed Light On Evolutionary Origin of Animals from Single-Cell Ancestors, Science daily, 22nd dec 2011 (tailored to fit the explanation)
பலசெல் உயிரின கருக்களின் தன்மைகளுடன் இந்த படிமங்கள் ஒத்துபோகவில்லை என்பது எக்ஸ்ரே நுண் நோக்கியியல் யுக்தி மூலம் தெரியவந்துள்ளது. ஆகையால் இந்த படிமங்கள் விலங்குகளோ அல்லது கருக்களோ இல்லை என்ற முடிவிற்கு ஆய்வாளர்கள் வந்துள்ளனர் - (extract from the original quote of) Chinese Fossils Shed Light On Evolutionary Origin of Animals from Single-Cell Ancestors, Science daily, 22nd dec 2011.  

இப்போது, ஆரம்ப கால உயிரினங்கள் குறித்த குழப்பங்கள் மறுபடியும் பழைய நிலைக்கே திரும்பிவிட்டன. இருந்த சிறிய ஆறுதல்(?) மற்றும் யூகமும் காலி.

  • கேம்ப்ரியன் கால விலங்குகள் எப்படி திடீரென தோன்றின?
  • முதல் முறை காணப்படும் போதே சிக்கலான மற்றும் முழுமையான உடலமைப்பை பெற்றிருக்கின்றனவே, அது எப்படி?
  • அதற்கு முந்தைய காலக்கட்டத்தில் இவை பரிணாமம் அடைந்துக்கொண்டிருந்த ஒரு சுவடும் இல்லையே, ஏன்? 

பரிணாமவியலாளர்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் மில்லியன் டாலர் கேள்விகளான இவை தொடர்கின்றன. 

இந்த ஆய்வை நடத்திய ஆய்வாளர்கள் தங்களது ஆய்வு முடிவுகள் குறித்து என்ன நினைக்கின்றார்கள்?

"We were very surprised by our results -- we've been convinced for so long that these fossils represented the embryos of the earliest animals -- much of what has been written about the fossils for the last ten years is flat wrong. Our colleagues are not going to like the result" - Chinese Fossils Shed Light On Evolutionary Origin of Animals from Single-Cell Ancestors, Science daily, 22nd dec 2011.   

எங்கள் ஆய்வின் முடிவுகள் மிகுந்த ஆச்சர்யத்தை தருகின்றன. இந்த படிமங்களை 'ஆரம்ப கால விலங்குகளின் கருக்கள்' என்று மிக நீண்ட காலமாக நாங்கள் நம்பியிருந்தோம். கடந்த பத்து ஆண்டுகளாக இந்த படிமங்களை பற்றி எழுதியவை முற்றிலுமாக தவறு என்று தற்போது தெரிய வருகின்றது. எங்கள் சக ஆய்வாளர்கள் இந்த முடிவுகளை விரும்பப்போவதில்லை - (extract from the original quote of) Chinese Fossils Shed Light On Evolutionary Origin of Animals from Single-Cell Ancestors, Science daily, 22nd dec 2011.   

ஆம், நிச்சயமாக உங்கள் நண்பர்கள் இந்த முடிவுகளை விரும்பப்போவதில்லை. ஆனால், இது என்ன இன்று நேற்றா நடக்கின்றது?  அடிப்படை இல்லாத யூகத்தை வைப்பதும், அது தவறென்று தெரிந்த பிறகு வியப்பு, அதிர்ச்சி போன்ற வார்த்தைகளை உபயோகப்படுத்துவதும் பரிணாமவியலாளர்களுக்கு புதிதா என்ன?

எல்லா அதிர்ச்சிகளுக்கும் தயாராக இருந்தால், அதிர்ச்சி வரும் போது அதிர்ச்சியடைய வேண்டிய தேவை இருக்காது பாருங்கள். 

அதுசரி, இவை விலங்கோ அல்லது விலங்குகளின் கருக்களோ கிடையாது. வேறு என்ன தான் இவை?

அதிநுண்ணுயிரியாக (Encysting Protists) காட்சி தருகின்றனவாம் இவை*. இவற்றின் பிரதி எடுக்கும் தன்மை விலங்குகளில் இருப்பது போல இருப்பதால் இதுவும் பரிமாணத்திற்கு ஆதாரம் தானாம்.

அப்படியா? ரொம்ப சந்தோஷம் :) அடுத்த கேம் ஸ்டார்ட்...என்ஜாய் 

இறைவா, மூட நம்பிக்கையாளர்களிடம் இருந்து மக்களை காப்பாற்றுவாயாக...ஆமீன். 

இறைவனே எல்லாம் அறிந்தவன்..

*மொழிபெயர்க்க கடினமாக இருந்த சொற்றொடர். தவறாக மொழி பெயர்த்திருக்கின்றேன் என்று கருதுபவர்கள் சரியான தமிழாக்கத்தை பின்னூட்டத்தில் தரவும்.

Tamil translation of technical terms helped by:
1. dictionary.tamilcube.com.

References:
1. Chinese Fossils Shed Light On Evolutionary Origin of Animals from Single-Cell Ancestors - Science Daily, 22 dec 2011. link
2. Fossilized Nuclei and Germination Structures Identify Ediacaran “Animal Embryos” as Encysting Protists - Science, 23 December 2011, Vol. 334, no. 6063 pp. 1696-1699, DOI: 10.1126/science.1209537. link
3. Terminal Developments in Ediacaran Embryology - Science, 23 December 2011, Vol. 334, no. 6063, pp. 1655-1656, DOI: 10.1126/science.1216125. link
4. Geologic Time Scale: The Phanerozoic Eon - About.com. link
5. Macroscopic algae from the Ediacaran Doushantuo Formation in Northeast Guizhou, South China - Mendeley. link
6. Ediacara biota - wikipedia. link
7. Protist - Biology online. link

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ






Monday, January 23, 2012

'9/11 - என்ன மாதிரியான மதம் இது?'



நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்..

                                                        "9/11 தாக்குதலின் போது, மனக்குழப்பத்தில் இருந்த பலரையும் போல, ஜோஹன்னாஹ் சகரிச் தன்னைத்தானே கேட்டுக்கொண்டார், 'இம்மாதிரியான செயலை செய்ய இவர்களை ஊக்குவிக்கிறதென்றால் என்ன மாதிரியான மதம் இது?'

இந்த சகோதரி, இஸ்லாத்தை தவிர மற்ற மதங்களை படித்திருக்கின்றார். இஸ்லாம் குறித்த தன்னுடைய எண்ணங்களை உறுதிப்படுத்திக்கொள்ள ஒரு குர்ஆன் பிரதியை வாங்கி வந்து படிக்க ஆரம்பித்தார். 

ஏழு வசனங்கள் கொண்ட  முதல் அத்தியாயம், அன்புடைய இறைவனிடம் இருந்து வழிகாட்டுதலை பெறுவதை பற்றி இருந்தது. சில வாரங்களில் குர்ஆன் முழுவதையும் படித்துவிட்டார் சகரிச். 9/11 அரங்கேறி சுமார் பத்து வாரங்களுக்கு பிறகு, 'நான் இப்போது உணர ஆரம்பித்தேன்' என்று கூறும் இவர், 'நான் ஒரு முடிவை தற்போது எடுக்க வேண்டும்' 

இஸ்லாம் குறித்து மிகத் தீவிரமாக ஆராய ஆரம்பித்தார் சகரிச். இசை பயிற்றுவித்து கொண்டிருந்த இவர், சில மாதங்களில், பாஸ்டனில் உள்ள இஸ்லாமிய கழகத்தில் ஷஹாதா(1) எனப்படும் இஸ்லாமிய உறுதிமொழியை கூறி முஸ்லிமாகிவிட்டார். 

சகரிச் நினைவு கூறுகின்றார், 'ஆச்சர்யமாக இருக்கின்றது. ஒரு நடுத்தர வயது பெண்மணி, யாரையும் சார்ந்து வாழாதவள், அப்போது அதிகம் விமர்சிக்கப்பட்ட மார்க்கத்தை நோக்கி திரும்பியிருக்கின்றேன்'. 

ஆம். தீவிரவாதத்தோடும், வன்முறையோடும் தொடர்புப்படுத்தப்பட்ட ஒரு மார்க்கத்தை நோக்கி, அதுவும் 9/11-க்கு பிறகு, அமெரிக்கர்கள் திரும்பியது ஆச்சர்யமான ஒன்றே. ஜோஹன்னாஹ் சகரிச் போல, ஒரு ஆர்வத்தால் இஸ்லாமை படிக்க ஆரம்பித்து பின்னர் அதனை தழுவியது ஒரு சிலரல்ல. அப்படியாக நிறைய பேர் இருக்கின்றனர். 

வல்லுனர்களின் தகவலின்படி, 9/11-க்கு பிறகு முஸ்லிமானவர்களில் பெண்களே பெரும்பான்மையினர்.  இனரீதியாக, ஹிஸ்பானிக்ஸ் (ஸ்பானிஷ் மொழி பேசுபவர்கள்) மற்றும் ஆப்பிரிக்க அமெரிக்க மக்களே அதிகமாக இஸ்லாத்தை தழுவுகின்றனர். 

ஒவ்வொரு வருடமும், அமெரிக்காவில், எத்தனை பேர் இஸ்லாமை நோக்கி வருகின்றனர் என்பது குறித்த தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை என்றாலும், சுமார் 20,000 பேர் வரை அது இருக்கலாம் என்று மதிப்பீடு செய்திருக்கின்றனர். 

சிலருடைய இஸ்லாமிய தழுவல்கள் தலைப்பு செய்தியாக மாறி விடுகின்றன.  தாலிபான்களால் சிறைவைக்கப்பட்டு வெளியான பின்னர் இஸ்லாத்தை தழுவிய சகோதரி யுவான் ரிட்லி, பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் உறவினரான சகோதரி லாரன் பூத், சென்ற வருடம் இஸ்லாத்தை தழுவிய rap இசை பாடகரான சகோதரர் லூன் போன்றவர்களை இதற்கு உதாரணமாக கூறலாம். 

தென் கரோலினாவை சேர்ந்த ஏஞ்சலா கொலின்ஸ், எகிப்து முதல் சிரியா வரை பல நாடுகளுக்கு பயணப்பட்டவர். அந்த நாடுகளில் உள்ள மக்களின் அன்பாலும், பெருந்தன்மையாலும் கவரப்பட்டவர். 9/11-க்கு பிறகு, முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலை நிலவிய போது, அதனை எதிர்க்கொள்ள முடிவு செய்தார்.

'என் நாடு இவர்களை தீவிரவாதிகளாகவும், பெண்களை அடிமைப்படுத்துபவர்களாகவும் தனிமைப்படுத்துவதை கண்டேன். இம்மாதிரியான உண்மைக்கு புறம்பான ஒன்றை நான் கற்பனை செய்ததில்லை. இவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டுமென்று முடிவு செய்தேன். அப்போது, இஸ்லாம் குறித்த தெளிவான அறிவு இல்லாமல் இவர்களுக்காக வாதிட முடியாது என்பதை உணர்ந்தேன்'   

இஸ்லாமை தழுவிய மற்றவர்களை போலவே, திருத்துவம் உள்ளிட்ட சில கிருத்துவ நம்பிக்கைகள் தனக்கு என்றுமே சரியென பட்டதில்லை என்று கூறுகின்றார் ஏஞ்சலா

இஸ்லாமை படிக்க ஆரம்பித்த இவர், 9/11 நடந்து சில மாதங்களுக்கு பிறகு இஸ்லாமை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார். 'இறைவன் என்றால் யார் என்பது குறித்த இஸ்லாமின் விளக்கம் மிக அழகானது. என் மனதில் இருந்த எண்ணங்களுடன் அது ஒத்துப்போனது' என்று கூறுகின்றார் ஏஞ்சலா. 

சிகாகோவை சேர்ந்த சகோதரி கெல்லி காப்மேனும் இதே போன்றதொரு அனுபவத்தை கூறுகின்றார். ஒபாமாவிற்காக தேர்தலில் பிரச்சாரம் செய்த இவரை, இவரது உறவினர்கள் கண்டித்தனர். அதற்கு காரணம், ஒபாமாவை முஸ்லிம் என்று அவர்கள் தவறாக நினைத்துவிட்டனர். இது, இஸ்லாம் குறித்து அறிந்துக்கொள்ள சகோதரி கெல்லியை தூண்டியது. 

சுமார் ஒரு வருட ஆய்வுக்கு பிறகு, எந்த விதமான தவறையும் இஸ்லாத்தில் அவர் காணவில்லை. அமைதிக்கு எதிராக இஸ்லாம் இருக்கின்றது என்று ஒரு பொதுக்கூட்டத்தில் ஒருவர் பேச, அதனை நேருக்கு நேராக எதிர்க்கொண்டார் கெல்லி. இந்த சமயத்தில் தான் இஸ்லாமை தன் வாழ்வியல் நெறியாக கெல்லி ஏற்றுக்கொண்டார். 

இஸ்லாமை ஏற்பவர்களின் எண்ணிக்கை மெதுவாக, அதேநேரம் உறுதியாக உயர்ந்து வருகின்றது. இதனை எதிர்கொள்ள பள்ளிவாசல்கள் பல்வேறு ஏற்பாடுகளை செய்கின்றன. தொழுகைகள், பிரார்த்தனைகள், அடிப்படை நம்பிக்கைகள், ஒழுக்கம் என்று இவை குறித்த வகுப்புகள் இங்கு புதியவர்களுக்காக நடத்தப்படுகின்றன. 

வெல்மிங்டனில் உள்ள இஸ்லாமிய மையத்தின் புதிய முஸ்லிம்களுக்கான வகுப்புகளை உருவாக்கும் பொறுப்பை ஏற்றுள்ள வக்கார் ஷரீப், தன்னுடைய பள்ளிவாசலில் ஒவ்வொரு மாதமும் 4-5 பேர் இஸ்லாத்தை தழுவுவதாக கூறுகின்றார். 

உற்சாகத்துடன் இருந்தாலும், தங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் எதிர்வினையை எண்ணி வருத்தப்படுகின்றனர் சில புதிய முஸ்லிம்கள். மன உளைச்சலுக்கும், தாக்குதலுக்கும் தாங்கள் ஆளாக்கப்படலாம் என்றும் அவர்கள் எண்ணுகின்றனர். 

'இஸ்லாம் மீதான தவறான எண்ணம் சற்றே களையும் வரை, இதுப்போன்ற சூழ்நிலையை நாங்கள் எதிர்க்கொண்டுதான் ஆக வேண்டுமென்று நினைக்கின்றேன்' என்று கூறுகின்றார் கெல்லி. இவருடைய பெற்றோர்கள் தங்கள் மகளின் முடிவை ஏற்றுக்கொண்டாலும், கெல்லியின் மாமா தன் மகளை இவரை பார்க்கக்கூடாதென்று தடை விதித்துவிட்டார். 'எதற்காக இவர்கள் எங்களை பார்த்து அச்சப்பட வேண்டும்?'

த்ரிஷா ஸ்கோயர்ஸ் முஸ்லிமாகி இன்னும் ஒரு மாதம் கூட முடிவடையவில்லை.  தன்னுடைய முடிவை தன் நண்பர்கள் சிலரிடம் கூறிய த்ரிஷாவிற்கு கிடைத்ததோ கலவையான எதிர்வினைகளே.

வேலைக்கு போகும் போது ஹிஜாப்(2) அணிவதில்லை த்ரிஷா. தன் மேலாளர் இதுக்குறித்து என்ன சொல்லுவார் என்ற தெளிவின்மையே இதற்கு காரணம். 

எனினும், மற்ற புதிய முஸ்லிம்களோ, இதுப்பற்றியெல்லாம் கவலைப்படுவதாக தெரியவில்லை. 

'என்னை இந்த சமூகம் ஏற்றுக்கொள்ளுமா என்பது பற்றியெல்லாம் நான் கவலைப்படுவதில்லை' என்று கூறும் ஏஞ்சலினா, தன்னை போலவே இஸ்லாத்தை தழுவிய தன் கணவருடன் தற்போது பிரேசிலில் வசித்து வருகின்றார், 'இறைவனை நான் கண்டுக்கொண்டேன். அது எனக்கு போதுமானது'"   

சில மாதங்களுக்கு முன்பாக (24/08/2011) "Huffington Post" இணையத்தில் வெளியான கட்டுரை தான் நீங்கள் மேலே படித்தது. 

இஸ்லாம் மீது எதிர்மறையான கருத்துக்களை கொண்டவர்களுக்கான என்னுடைய வேண்டுகோள் மிக எளிமையானது. உங்களைப்போல நிறைய பேர் இங்கு உண்டு. அவர்களில் பலர் குர்ஆனை திறந்த மனதோடு படித்த பிறகு தங்கள் மனதை மாற்றிக்கொண்டதும் உண்டு. சில நாட்களிலேயே முழுமையாக படித்து முடித்து விடக்கூடிய குர்ஆனை நீங்கள் ஏன் முன்முடிவின்றி படித்துப்பார்க்க முன்வரக்கூடாது? 

குர்ஆன் அர்த்தங்களின் தமிழ் மொழிபெயர்ப்பை ஆன்லைனில் முழுமையாக படிக்க ஆர்வமுள்ளவர்கள் <<இங்கே>> சுட்டவும். அல்லது pdf வடிவில் பெற விரும்புபவர்கள் எனக்கு ஒரு மெயில் அனுப்பவும் (aashiq.ahamed.14@gmail.com).     

சமீபத்தில் நான் கண்ட காணொளிகளில் என்னை மிகவும் பாதித்த ஒன்றை இங்கே உங்களுடன் பகிர்ந்துக்கொண்டு விடைபெறுகின்றேன். இந்த பனிரெண்டு வயது சிறுவனுக்கும், அவனை அற்புதமாக வளர்த்திருக்க கூடிய அவனது பெற்றோருக்கும் மிகச்சிறந்த நற்கூலியை இறைவன் தந்தருள்வானாக...ஆமீன்.


சகோதரர் முஹம்மது ஆஷிக் இன்று வெளியிட்டுள்ள அதிரடியான பதிவையும் பார்த்துவிடுங்கள்... <<போலி நாத்திகம் எனும் நடுநிலை முக்காடு>>

இறைவன் நம்மை நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.  

வார்த்தைகளுக்கான விளக்கங்கள்:
1. ஷஹாதா - இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (இவர்கள் மீது அமைதி நிலவுவதாக) அவர்கள் இறைவனின் தூதர் என்றும் கூறப்படும் உறுதிமொழி.  
2ஹிஜாப் - பல்வேறு அர்த்தங்களை கொண்டது. இங்கே, முகம் கைமணிகட்டு தவிர்த்து உடலின் மற்ற பாகங்கள் மறையுமாறு உடையணியும் முறையை குறிப்பிடுகின்றது. 

குறிப்பு:
1. இந்த பதிவு வார்த்தைக்கு வார்த்தையான மொழிபெயர்ப்பு அல்ல. அது போல, மொழிபெயர்க்க கடினமாக இருந்த சில வரிகள் தவிர்க்கப்பட்டுள்ளன. இதனை அதன் மூல மொழியில் முழுமையாக படிக்க விரும்புபவர்கள் கீழே உள்ள லின்க்கை சுட்டவும். 

Reference:
1. Conversion To Islam One Result Of Post-9/11 Curiosity - Huffington Post, dated 24th August 2011. link

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ 






Wednesday, January 18, 2012

புதிய அறிவியல் பொற்காலம்?



நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

அறிவியல் ஆர்வலர்களுக்கு இந்த பதிவு எவ்விதத்திலாவது உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளிக்குமானால் அந்த புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக...

                        சுமார் 350 ஆண்டுகள் பழமையானதும், பிரிட்டன் அரசுக்கு அறிவியல் ஆலோசனை வழங்கும் நிறுவனமும், அறிவியலாளர்களால் பெரிதும் மதிக்கப்படும் அமைப்புமான "The Royal Society", இஸ்லாமிய உலகில் நடைபெறும் அறிவியல் முன்னேற்றங்கள், கண்டுபிடிப்புகள், மற்றும் சவால்கள் குறித்த ஆய்வறிக்கையை, "புதிய பொற்காலம்? (A new golden age?)" என்ற தலைப்பில் வெளியிட்டது. இந்த பதிவின் பல தகவல்கள் அந்த ஆவணத்தை தழுவியே எழுதப்படுகின்றன. 

இராயல் கழகத்தின் அந்த நீண்ட ஆய்வறிக்கையை முழுமையாக படிக்க விரும்புபவர்கள், பதிவின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ள லின்க்கில் இருந்து அதனை பதிவிறக்கம் செய்துக்கொள்ளவும்.    


அறிவியலில் இஸ்லாமிய அறிஞர்களின் பங்களிப்பு மட்டும் இல்லையென்றால் இன்றைய ஐரோப்பா அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் முதன்மையாக விளங்கியிருக்க முடியுமா என்பது எனக்கு தெளிவாகவில்லை --- Mathematician Keith Devlin, Executive Director, center for the study of language and Information at Stanley University.
"நவீன அறிவியலின் இருதயத்தில் இருக்கக்கூடிய சொற்களான அல்ஜீப்ரா (Algebra), அல்கோரிதம் (Algorithm), அல்கலி (Alkali) எல்லாம் அரபியில் இருந்து வந்தவைதான், இவைகள் அவர்களது கலாச்சாரம் எந்த அளவு சிறந்திருந்தது என்பதை உணர்த்துகின்றன. அல்ஜீப்ரா இல்லாமல் நவீன கணிதமோ இயற்பியலோ இல்லை, அல்கோரிதம் இல்லாமல் கணிப்பொறிகள் இல்லை மற்றும் அல்கலி இல்லாமல் வேதியியல் இல்லை" --- BBC    

ஆம். ஏழாம் நூற்றாண்டு தொடங்கி பதினாறாம் நூற்றாண்டு வரையிலான இஸ்லாமிய அறிவியல் பொற்காலமானது, வியத்தகு முன்னேற்றங்களையும் கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தியிருந்தது. கணிதம், இயற்பியல், வேதியியல், மருத்துவம், வானவியல், அறிவியல் அணுகுமுறை என்று பல்வேறு துறைகளிலும் தன் தனித்துவத்தை பதித்து அவை இன்றளவும் நிலைத்திருக்கும் அளவு தன் பாதிப்பை விட்டு சென்றிருக்கின்றது. (இதுக்குறித்த இத்தளத்தின் பதிவுகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்).

ஐரோப்பா தன் இருண்ட காலத்திலிருந்து மீண்ட போது, அங்கு நடைபெற்ற அறிவியல் புரட்சிக்கு உறுதுணையாக இருந்த முஸ்லிம்களின் அறிவியல் பங்களிப்பு, கடந்த மூன்று நூற்றாண்டுகளாக பின்னடைவை சந்தித்திருப்பது உண்மை. இதற்கு சிலுவை யுத்தம், காலனி ஆதிக்கம், வறுமை, முஸ்லிம்களின் தவறுகள் என்று பல்வேறு காரணங்களை கூறலாம்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட சரிவை ஆராய்ந்து, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் மீண்டும் தங்களின் பழைய நிலையை அடைய எம்மாதிரியான முயற்சிகளை இஸ்லாமிய உலகம் மேற்கொண்டுள்ளது? மீண்டும் மற்றுமொரு அறிவியல் பொற்காலத்தை கொண்டுவர இந்த நாடுகள் எம்மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன?

இந்த கேள்விகளுக்கு படிப்பவர் புருவங்கள் உயருமாறு விடை தருகின்றது இராயல் கழகத்தின் ஆய்வறிக்கை. அதேநேரம், இஸ்லாமிய உலகம் சந்திக்கும் சவால்கள், அதிலிருந்து எப்படி மீள வேண்டும் என்பது குறித்த வழிமுறைகளையும் அலசுகின்றது இந்த அறிக்கை.

அது சரி, இஸ்லாமிய உலகம் என்று எதனை குறிப்பிடுகின்றது இந்த ஆய்வு?

ஐ.நா-வுக்கு அடுத்த பெரிய அமைப்பான OIC-யில் (Organization of Islamic Co-operation) உறுப்பினராக உள்ள 57 நாடுகளையே இஸ்லாமிய உலகம் என்று குறிப்பிடுகின்றது இராயல் கழகத்தின் அறிக்கை.

இனி அந்த ஆய்வறிக்கையில் (மற்றும் வேறு சில மூலங்களில்) இருந்து சில தகவல்கள்.

அறிவியல் முன்னேற்றத்தில் இஸ்லாமின் பங்கு:

ஒரு மார்க்கம் அறிவியலுக்கு தடையாக இல்லாமல் உறுதுணையாக இருக்க முடியும் என்பதற்கு இஸ்லாமிய அறிவியல் பொற்காலம் ஒரு உதாரணம் என்று கூறும் இராயல் கழகம், OIC உறுப்பு நாடுகளில் நடக்கும் அறிவியல் கருத்தரங்குகள் தொழுகை/பிரார்த்தனைகளுடனேயே ஆரம்பிக்கின்றன, தொழுகை/பிரார்த்தனைகளுடனேயே முடிகின்றன என்று குறிப்பிடுகின்றது. அறிவியல் முன்னேற்றத்தில் சிறந்து விளங்கும் இந்நாடுகள் இறைநம்பிக்கையிலும் சிறந்து விளங்குவதாக அது மேலும் தெரிவிக்கின்றது.

பெண்கள்:

இஸ்லாமிய உலகின் மக்கட்தொகையில் பெரும்பாலானவர்கள் பெண்களே (~51%).

முஸ்லிம் பெண்கள் என்றாலே அவர்கள் அணியும் உடைக்கு தான் ஐரோப்பிய பார்வையாளர்கள் முக்கியத்துவம் கொடுப்பதாகவும், ஆனால், இஸ்லாமிய உலகின் பெண்களின் நிலையானது இந்த தலைப்புச்செய்திகள் சித்தரிப்பதை காட்டிலும் வித்தியாசமானது என்று குறிப்பிடுகின்றது இராயல் கழகம். இதற்கு காரணங்கள் இல்லாமலில்லை.

இஸ்லாமிய உலகின் 13 நாடுகளின் பெண் அறிவியல் பட்டதாரிகளின் சராசரி, அமெரிக்க சராசரியை (41%) விட மிக அதிகம்.    அல்ஜீரியாவின் அறிவியல் பட்டதாரிகளில் 71% பேர் பெண்கள். அதுபோல பஹ்ரைனில் 73%-மும், பாலஸ்தீனில் 49%-மும் பெண்கள்.

ஈரானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களில் 70% பேர் பெண்கள். சவூதி அரேபியாவின் மாணவர்களில் 58% பேர் பெண்கள்.

கல்வியில் மகத்தான முன்னேற்றம் அடைந்துவரும் நிலையில், அறிவியல் சார்ந்த பணிகளில் பெண்களின் நிலை என்ன என்பது குறித்த தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை. ஆய்வுகள் நடத்தப்பட்ட இஸ்லாமிய உலகின் 24 நாடுகளில், எட்டில் மட்டுமே பெண் ஆய்வாளர்களின் எண்ணிக்கை உலக சராசரியை விட அதிகமாக இருக்கின்றது. அதுபோல, சவூதி அரேபியாவின் பணியிடங்களில் 16% மட்டுமே பெண்கள்.

இதுப்போன்ற நிகழ்வுகளை எதிர்க்கொள்ளவும், பெண் ஆய்வாளர்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் "இஸ்லாமிய பெண் விஞ்ஞானிகளின் கூட்டமைப்பு (Islamic network of women scientists)" நிறுவப்பட்டுள்ளது. ஈரானில் நடைப்பெற்ற முதலாவது இஸ்லாமிய பெண் ஆய்வாளர்களின் கருத்தரங்கில் (27th January 2010), 37 நாடுகளில் இருந்து பெண் விஞ்ஞானிகள் கலந்துக்கொண்டனர்.

ஈரான் மற்றும் துருக்கி:

அறிவியல் வளர்ச்சியில் சிறந்து விளங்கும் நாடுகளாக மத்திய கிழக்கு நாடுகள் இருக்கின்றன (குறிப்பாக துருக்கி மற்றும் ஈரான்). இந்த நாடுகளின் வளர்ச்சி விகிதம், உலக சராசரியை விட நான்கு மடங்கு அதிகமாகும்.

அறிவியல் வளர்ச்சியில், உலகின் வேறெந்த நாட்டை விடவும் ஈரான் மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றது. உலக சராசரியை விட பதினொரு மடங்கு அதிகமாக அது பயனித்துக் கொண்டிருக்கின்றது. கடந்த இருபது ஆண்டுகளில் மட்டும், ஈரான், அறிவியலின் பல்வேறு துறைகளில் சுமார் 54,000 ஆய்வு கட்டுரைகளை சமர்பித்துள்ளது/வெளியிட்டுள்ளது.

தனித்துவமான பல்வேறு கண்டுபிடிப்புகளை ஈரான் நிகழ்த்தியிருக்கின்றது. அணு அறிவியல், வான் வெளி அறிவியல் (Aerospace), மருத்துவம், விவசாயம், நேனோ தொழில்நுட்பம் (Nanotechnology), ஸ்டெம் செல் ஆய்வு போன்றவற்றில் ஈரானின் அபாரமான வளர்ச்சி பிரம்பிக்க வைக்கின்றது.

உலக சராசரியை விட 5.5 மடங்கு அதிகமாக அறிவியல் வளர்ச்சியை பெற்றுள்ள துருக்கியை பொருத்தவரை, 1990-2007 இடையேயான காலக்கட்டத்தில், அறிவியல் ஆய்வுகளுக்கான முதலீடு மட்டும் சுமார் 566% அதிகரித்துள்ளது. இது டென்மார்க், நார்வே மற்றும் பின்லாந்து போன்ற நாடுகளின் முதலீட்டை விட அதிகம். இதே காலக்கட்டத்தில், துருக்கியில் உள்ள ஆய்வாளர்களின் எண்ணிக்கை சுமார் 43% அதிகரித்துள்ளது.

துருக்கியில் இருந்து வெளிவரும் ஆய்வு கட்டுரைகளின் எண்ணிக்கை, கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது சுமார் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. 2008-ஆம் ஆண்டு நிலவரப்படி, ஆய்வு கட்டுரைகள் பிரசுரிப்பதில் எட்டாவது "மிகவும் முன்னேறிய" நாடு என்ற அந்தஸ்த்தை துருக்கி பெற்றது.

அறிவியல் வளர்ச்சியில் முன்னணியில் இருந்தாலும், பரிணாம கோட்பாடு குறித்த துருக்கியின் நிலைப்பாடு தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. 2009-ஆம் ஆண்டு, டார்வினின் 200-வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட இருந்த ஆய்விதழை, துருக்கியின் அறிவியல் ஆய்வு கவுன்சில் ரத்து செய்து பெரிய சர்ச்சையை உண்டாக்கிய செய்தி இங்கு கவனிக்கத்தக்கது.

சவூதி அரேபியா:

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பாலைவனமாக காட்சியளித்த துவல் என்ற இடம், இன்று, உலகின் மிகச் சிறந்த கட்டமைப்பை பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான "மன்னர் அப்துல்லாஹ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழக (KAUST)" கட்டிடங்களால் நிரப்பப்பட்டிருக்கின்றது.

சுமார் இருபது பில்லியன் டாலர்கள் மதிப்பீட்டில் உருவாகியுள்ள இந்த பல்கலைக்கழகம், உலகின் டாப்-10 சூப்பர் கம்ப்யூட்டர்களில் ஒன்றை தன்னிடத்தே கொண்டிருக்கின்றது.

உலகிலேயே மிகப்பெரிய "பெண்கள் மட்டும்" பயிலும் பல்கலைக்கழகத்தையும் சென்ற ஆண்டு சவுதி அரேபியா திறந்துள்ளது. இங்கே சுமார் 50,000 மாணவிகள் வரை பயிலலாம். ஐந்து பில்லியன் டாலர்கள் மதிப்பீட்டில் உருவாகியுள்ள இந்த பல்கலைக்கழகம், சுமார் 700 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையையும் தன்னிடத்தே கொண்டுள்ளது.

இவை மட்டுமல்லாமல் மேலும் பல அறிவியல் மையங்களை உருவாக்குவதில் சவூதி அரசாங்கம் முனைப்புடன் செயல்படுகின்றது.

உலகிலேயே, கல்விக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் வரிசையில் சவூதி அரேபியாவிற்கு ஐந்தாவது இடம்.

சவூதி அரேபியாவின் இத்தகைய நடவடிக்கைகள் உலகளவில் மாணவர்களை கவர்ந்து இழுப்பதாக குறிப்பிடும் இராயல் கழகம், ஒரு மிகச் சிறப்பான எதிர்காலத்திற்கு சவூதி அரேபியா தயாராகிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கின்றது.

மலேசியா:

ஆசியாவின் அதிநவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாம்பியன்களில் ஒன்றாக மலேசியா திகழ்கின்றது. அறிவியல் ஆய்வுகளுக்கு செய்யப்பட்ட முதலீடுகள் சாதகமான முடிவுகளை தர ஆரம்பித்திருக்கின்றன. 2004-ஆம் ஆண்டு வாக்கில், மலேசியாவின் ஆய்வாளர்களின் எண்ணிக்கை 31,000-த்தை தொட்டது. இது 1998-ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 270% அதிகம். அதுபோல, புதிய கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை கோரிக்கைகளும் மலேசியாவில் இருந்து அதிகம் வருகின்றன. OIC உறுப்பு நாடுகளிலேயே, அதிக காப்புரிமை கோரிக்கை வைக்கும் நாடுகளின் வரிசையில் மலேசியாவிற்கு முதல் இடம்.

கத்தார்:

மிகச் சிறிய நாடாக இருந்தாலும், கத்தாரின் அறிவு சார்ந்த பொருளாதாரத்தின் வளர்ச்சி ஆச்சர்யப்பட வைக்கின்றது. கல்வி மற்றும் அறிவியல் வளர்ச்சிக்காக, சவூதி அரேபியாவிற்கு நிகரான முதலீட்டை கத்தார் செய்கின்றது. 1990-ஆம் ஆண்டிலிருந்து மட்டும் கல்வி, ஆராய்ச்சி மற்றும் கட்டமைப்பிற்காக சுமார் 133 பில்லியன் டாலர்களை அது செலவிட்டுள்ளது.

கத்தாரின் அறிவியல் மகுடத்தில் ஒரு இரத்தினகல்லாக "கல்வி நகரம் (Education City)" இருப்பதாக கூறுகின்றது இராயல் கழகம். சுமார் 2500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த நகரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பூங்காவையும் தன்னிடத்தே கொண்டுள்ளது. கத்தாரின் மற்றுமொரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம், சுமார் எட்டு பில்லியன் டாலர்கள் மதிப்பிலான சிட்ரா மருத்துவ ஆய்வுக் கழகம்.

பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ்:

இந்த இரண்டு நாடுகள் குறித்த சில வித்தியாசமான செய்திகள் கவனத்தை ஈர்த்தன.

சில நேரங்களில், புதுமையான முயற்சிகள் உலகளாவிய ஆய்விதழ்களில் வராமலேயே போய்விடுகின்றன என்று குறிப்பிடும் இராயல் கழகம், இதற்கு உதாரணமாக பங்களாதேஷையும், பாகிஸ்தானையும் சுட்டிக்காட்டுகின்றது.

பங்களாதேஷின் ஆய்வாளர்கள், குடிதண்ணீரில் இருந்து அர்சனிக் என்னும் நச்சுபொருளை நீக்கும் புதுமையான வழிமுறையை கண்டுபிடித்துள்ளனர். இந்த யுக்தியை கொண்டு, நாட்டின் மூன்று நகராட்சிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியுள்ளனர். பங்களாதேஷ் பற்றி பேசும் போது, அந்நாடு, மைக்ரோ-பைனான்ஸ் துறையில் முன்னோடியாக விளங்குவதையும் குறிப்பிட மறக்கவில்லை இராயல் கழகம்.

அது போல, சேரிகள் சார்ந்த நகராட்சிகளை மேம்படுத்த பாகிஸ்தான் மேற்கொள்ளும் இயக்கமுறைகளையும் புதுமையான முயற்சி என்று வர்ணிக்கின்றது அந்த அறிக்கை.

உள்நாட்டு பிரச்சனைகளால் பெரிதும் பாதிப்படைந்திருந்தாலும், 2000-ஆம் ஆண்டிலிருந்து ஒரு உறுதியான முன்னேற்றத்தை சந்தித்து வருகின்றது பாகிஸ்தான். 2001-2003 இடையேயான காலக்கட்டத்தில் மட்டும் அறிவியல் ஆய்வுகளுக்கான பட்ஜெட் 6000% உயர்ந்துள்ளது. உயர் கல்விக்கான பட்ஜெட், 2004-2008 இடையேயான காலக்கட்டத்தில் 2400% உயர்ந்துள்ளது.

2002-2008 இடையேயான காலக்கட்டத்தில், சுமார் ஐம்பது புதிய பல்கலைக்கழகங்கள் துவக்கப்பட்டிருக்கின்றன. மாணவர்களின் எண்ணிக்கை 1,35,000-திலிருந்து 3,65,000-மாக உயர்ந்துள்ளது. டிஜிட்டல் நூலகங்கள் மற்றும் ஆய்விதழ்களில் அதிக முதலீடு, ஆய்வு கட்டுரைகள் அதிகமாக வெளிவர புதிய முயற்சிகள் என்று பாகிஸ்தான் சிறப்பாக செயல்படுகின்றது.

இத்தகைய முயற்சிகளாலேயே, ஐ.நாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆணைக்குழு, "சிறந்த முன்மாதிரி வளரும் நாடு (best practice example for developing countries)" என்று பாகிஸ்தானுக்கு புகழாரம் சூட்டியது.

மேலும்:

நாம் மேலே பார்த்த தகவல்கள் மட்டுமல்லாமல், இராயல் கழகத்தின் அறிக்கை மேலும் பல நாடுகளின் புதுமையான முயற்சிகளை பட்டியலிடுகின்றது.

அறிவியல் வளர்ச்சியில், உலக சராசரியை விட 2.5 மடங்கு வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கும் UAE-யின் சுத்தமான சுற்றுசூழலை கொண்டுவர முயற்சிக்கும் மஸ்டர் நகரம் (Masdar City), காற்றாற்றலை (Wind Energy) உருவாக்குவதில் முன்னணியில் இருக்கும் எகிப்து என்று அந்த பட்டியல் நீளுகின்றது.

அரசியல்:

இஸ்லாமிய உலகின் பெரும்பாலான நாடுகளில் இஸ்லாமிய கட்சிகளே மக்களின் ஆதரவை பெற்று வருகின்றன என்கின்றது இராயல் கழகம். பல நாடுகளின் ஆட்சி கட்டிலிலும் இவையே உட்கார்ந்திருக்கின்றன என்று அது மேலும் குறிப்பிடுகின்றது. இதற்கு உதாரணமாக ஈரான், துருக்கி, மலேசியா மற்றும் சவூதி அரேபியா போன்ற நாடுகளை நோக்கி கை நீட்டுகின்றது. இந்த பட்டியலில் தற்போது மொராக்கோ, துனிசியா மற்றும் எகிப்தையும் சேர்த்துவிடலாம். இஸ்லாமிய கட்சிகள் ஆட்சியில் இல்லாத நாடுகளில், அவை பிரதான எதிர்கட்சியாக இருக்கின்றன.

இஸ்லாமிய உலகின் தற்போதைய அறிவியல் முன்னேற்றம் குறித்து நான் இங்கே பகிர்ந்துக்கொள்ள முயற்சித்திருப்பது மிகச் சிறிதே. இதுக்குறித்து முழுமையாக அறிந்துக்கொள்ள விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலங்களில் இருந்து அறிக்கைகளை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

மீண்டும் பொற்காலம் திரும்புமா?

இஸ்லாமிய அறிவியல் பொற்காலம் உலகிற்கு அளித்த பங்களிப்புகளை பிரசித்திப்பெற்ற அறிவியல் அமைப்புகள் நன்கு உணர்ந்தே இருக்கின்றன. அதனாலேயே, இராயல் கழகம் முதற்கொண்டு New Scientist வரை, அத்தகைய பொற்காலம் மறுபடியும் திரும்புகின்றதா என்று தலைப்பிட்டு கட்டுரைகளை வடிக்கின்றன.

குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை கல்வி மற்றும் அறிவியலில் தற்போதைய இஸ்லாமிய உலகம் கண்டுள்ள நிலையில், எந்த லட்சியத்தை முன்நோக்கி அவர்கள் முதலீடு செய்கின்றார்களோ அது கூடிய விரைவில் ஈடேறி உலக மக்கள் பயன்பெற இறைவனை பிரார்த்திப்போம்.

இஸ்லாமிய உலகிற்கு அப்பால் வாழும் முஸ்லிம்களாகிய நாம், இஸ்லாமை சரிவர பின்பற்றி, இஸ்லாமை அடுத்தவர்களுக்கு எடுத்துச் சொல்லி, நாம் சார்ந்த நாடு மற்றும் மக்களுக்கு நம்மால் முடிந்த அதிகபட்ச பங்களிப்பை நல்கி நம் வாழ்வை அமைத்துக்கொள்வோம். இதற்கு வல்ல இறைவன் உதவி புரிவானாக...ஆமீன்.

இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் வரலாற்றில் எந்த காலக்கட்டத்திலும் வென்றதில்லை. இறைவன் நாடினாலன்றி இப்போதும் வெற்றிப்பெற போவதில்லை. ஆகையால் இவர்களுக்கான முக்கியத்துவத்தை குறைத்துக்கொண்டு lets move ahead......

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.

இறைவனே எல்லாம் அறிந்தவன்.

One can download the royal society's entire report from:
1. A new golden age? The prospects for science and innovation in the Islamic world - The Royal Society. link

My sincere thanks to:
1. The Royal Society.
2. New Scientist Website

References:
1. A new golden age? The prospects for science and innovation in the Islamic world - The Royal Society. link
2. The Mathematical Legacy of Islam - Mathematical Association of America. link
3. Science and Islam: The Language of Science - BBC. link
4. A rebirth of science in Islamic countries? - Research Trends. link
5. Islamic science: The revival begins here - New Scientist. link
6. Iran's science progress fastest in world: Canadian report - Press tv. link
7. Saudi Arabia opens largest women’s university in the world - Al Arabiya News. link
8. Iran showing fastest scientific growth of any country - New Scientist. link
9. Science and technology in Iran - wikipedia. link
10. Royal Society - wikipedia. link
11. Science Metrix - 30 years in Science. link
12. Conference of Women Scientists of Islamic World - themuslim.org. link

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ