Tuesday, October 30, 2012

National Geographic: பித்தலாட்டங்கள் - சொல்லப்படாத உண்மைகள்



நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

ரலாற்றில் சில தருணங்கள் சொல்லப்படாதபோதும், அவை தெரியவரும்போதும், நமக்குள் அவை ஏற்படுத்தும் அதிர்வலைகள் மிகுந்த தாக்கத்தை உண்டாக்குகின்றன. நேஷனல் ஜியோகிராபிக் (நே.ஜி) ஊடகம் குறித்து நீங்கள் அறிந்துக் கொள்ளப்போகும் இந்த செய்தியும் அந்த ரகத்தை சார்ந்ததே. 

விசயத்தை சில வரிகளில் சுருக்கமான சொல்ல வேண்டுமென்றால் அது இதுதான். டைனாசர்களில் இருந்து பறவைகள் வந்ததாக கூறி ஒரு ஆதாரத்தை நே.ஜி முன்வைக்க, அது பித்தலாட்டம் என்று நிரூபிக்கப்பட்டு, அறிவியல் ஊடகத்துறையில் நீங்காத கரையை நே.ஜி-க்கு ஏற்படுத்தி தந்துவிட்டது. 

நீங்கள் சில வரிகளில் பார்த்த இந்த விவகாரத்திற்கு பின்னால் ஆய்வாளர்கள் வெட்கி தலைகுனியும் அளவு அசிங்கமான உண்மைகளும், நம்பிக்கை சார்ந்த துரோகங்களும் ஒளிந்திருக்கின்றன. 

டிஸ்கவரி ஊடகம் இந்த பித்தலாட்டதிற்கு இரண்டாம் இடத்தை கொடுகின்றது (முதல் இடம் நம்ம பில்ட்டவுன் மனிதனிற்கு தான். பார்க்க <<இங்கே>>). இந்த முக்கிய செய்தியை சரியாக புரிந்துக்கொள்ள சில கிளைச்செய்திகளை நாம் நிச்சயம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் ஒரு கேள்வியை நமக்குள் கேட்டுக்கொள்வோம். வேறெந்த துறையையும் விட பரிணாமத்துறையில் பித்தலாட்டங்கள் பரவலாக காணப்பட காரணமென்ன? 

மேலே காணும் கேள்விக்கு விடையை கண்டுபிடிப்பது இந்த பதிவுக்கு அவசியமாகின்றது. ஒரு உயிரினம் மற்றொரு உயிரினமாக காலப்போக்கில் மாறுவதாக பரிணாமம் கூறுகின்றது. டார்வின் காலத்திலிருந்தே இதற்கான ஆதாரங்களை அதன் நம்பிக்கையாளர்கள் தேடிக்கொண்டு தான் வருகின்றனர். தங்களின் இந்த நம்பிக்கையை நிரூபிக்குமாறு ஒரு படிமம் கிடைத்தால் அதனை பெரும் தொகை கொடுத்து வாங்கவும் இவர்கள் தயாராகவே இருக்கின்றனர். 

டைனாசர் படிமங்கள் அதிகம் கிடைக்கக்கூடிய இடமாக சீனா திகழ்கின்றது. இங்குள்ள பல விவசாயிகள் நிலத்தை தோண்டி படிமங்கள் எடுப்பதை தொழிலாக கொண்டுள்ளனர். தாங்கள் எடுக்கும் படிமங்களை இடைத்தரகர்களிடம் விற்றுவிடுவார்கள். இந்த இடைத்தரகர்கள் அவற்றை ஆய்வாளர்களுக்கோ அல்லது அருங்காட்சியகங்களுக்கோ விற்று விடுவார்கள். 

இங்கு தான் நீங்கள் ஆழ்ந்து கவனிக்க வேண்டிய இடம் வருகின்றது. ஒரு படிமம் பரிணாம கொள்கையை உறுதிப்படுத்துவது போல இருந்தால் அதற்கு விலை அதிகம். இதனாலேயே விவசாயிகள் இப்படியான படிமங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதிக விலைக்கு ஆசைப்பட்டு, பரிணாம கொள்கை எதிர்பார்ப்பது போன்று, படிமங்களில் மாற்றம் செய்து விற்றுவிடுகின்றனர். 

படிம வியாபாரத்தின் இத்தகைய இருண்ட பக்கத்தில் தான் நே.ஜி மாட்டிக்கொண்டது. காசுக்கு ஆசைப்பட்டு விவசாயிகள் தவறை செய்கின்றனர். ஆனால் பரிணாம ஆய்வாளர்களுக்கு என்ன வந்தது? அந்த படிமங்களை நன்கு ஆராய்ந்தாலே இவை பித்தலாட்டம் செய்யப்பட்டவை என்று புரிந்துவிடுமே? இத்தகைய கேள்விகள் உங்களுக்கு எழுவது புரிகின்றது. இதனை நோக்கி தான் இப்போது பயணிக்க போகின்றோம், பதிவின் மையமும் அதுதான். 

சிறிய அளவிலான டைனாசர்கள் படிப்படியாக உருமாறி பறவைகளாக பரிணமித்ததாக ஒரு கோட்பாடு உண்டு. (இதனை அறிந்த) ஒரு விவசாயி அதிக விலைக்கு ஆசைப்பட்டு, தான் கண்டெடுத்த பழங்கால பறவையின் படிமம் ஒன்றில் அதன் உடலுடன், டைனாசரின் வாலை கொண்ட மற்றொரு படிமத்தை ஒட்டவைத்து ஒரு இடைத்தரகரிடம் விற்றுவிட்டார். 

நுணுக்கமாக செய்யப்பட்ட இந்த பித்தலாட்டம், இயல்பாகவே, ஒரு அதிரடி ஷோவிற்கு ரெடியாகிவிட்டது. காரணம், பறவையின் உடலமைப்பும் டைனாசரின் உடலமைப்பும் ஒருசேர இருந்ததால் "டைனாசரில் இருந்து பறவைகள் வந்தது" என்ற யூகத்திற்கு ஆதாரமாக காட்டப்பட சிறந்த படிமம் இது. டைனாசர்களுக்கும் பறவைகளுக்கும் இடைப்பட்ட உயிரினமாக  (missing link) இதனை காட்டி பரிணாமம் உண்மை என்று நிரூபிக்கலாம் (பின்னாளில் இந்த படிமத்திற்கு ஆர்க்கியோராப்டர் என்று பெயர் சூட்டப்பட்டது)

ஆர்க்கியோராப்டர் படிமம் 

காட்சிகள் வேகமாக நகர ஆரம்பித்தன. விவசாயிடம் படிமத்தை பெற்ற தரகர் அதனை சட்ட விரோதமாக அமெரிக்காவிற்கு கடத்திவிட்டார் (ஜூன் 1998). அங்கு இந்த படிமம் எதிர்பார்த்தது போல சலசலப்பை உருவாக்க ஆரம்பித்தது. இந்த படிமம் ஆர்வத்தை தூண்ட, யுடா (Utah) பகுதியில் உள்ள டைனாசர் அருங்காட்சியகத்தின் தலைவரான ஸ்டீபன் ஜெர்கஸ் இதனை சுமார் 80,000 டாலர்களுக்கு வாங்கினார் (பிப்ரவரி 1999). ஒருவித பரவச உணர்வு அவரை ஆட்கொள்ள ஆரம்பித்தது. சும்மாவா, இந்த படிமம் உலகளவில் ஏற்படுத்தப்போகும் அதிர்வால் அவருக்கு கிடைக்கக்கூடிய புகழ் லேசுப்பட்டதா என்ன?

பிரபல தொல்லுயிரியலாளரும், துறைச்சார்ந்த வல்லுனருமான பில் க்யூரி-க்கு இதுக்குறித்து ஜெர்கஸ் தெரியப்படுத்த, க்யூரி நே.ஜி-வை தொடர்புக்கொண்டார். இதுக்குறித்த ஆய்வுகளை நே.ஜி முடுக்கிவிட்டது. மற்றொரு பிரபல தொல்லுயிரியலாளரான ஜூ ஜின்க்-கும் இந்த பணியில் இணைக்கப்பட்டார். 

ஆரம்ப கால ஆய்வுகளிலேயே இந்த படிமத்தில் பிரச்சனை இருப்பது க்யூரிக்கு தெரிந்தது. படிமத்தில் காணப்படும் வால், உடலுடன் ஒருசேர ஓட்டவில்லை. மேலும் இந்த படிமத்தின் பகுதிகள் ஒரே கற்பலகையை சேர்ந்தவை இல்லை என்பதும் தெளிவானது. படிமத்தை சி.டி ஸ்கேன் ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர் க்யூரியும், ஜெர்கசும். இந்த ஆய்வை மேற்கொண்டவர் டாக்டர் டிமோத்தி ரோவ் என்னும் மற்றொரு வல்லுநர். வால் மற்றும் கால் பகுதிகள் ஒரே படிமத்தை சார்ந்தவை அல்ல என்பது சி.டி ஸ்கேன் ஆய்வில் உறுதிசெய்யப்பட்டது. இந்த முழு படிமமும் பித்தலாட்டமாக இருக்கலாம் என்று கூறினார் ரோவ். 

சி.டி ஸ்கேன் செய்யப்பட்ட ஆர்க்கியோராப்டர் படிமம் (இடது)

எப்போது பிரச்சனைகள் இருப்பது தெளிவானதொ, அப்போதே இந்த படிமத்திற்கு end card போடப்போட்டிருக்க வேண்டும். இங்கேயே இந்த படிமம் தூக்கி எரியப்பட்டிருக்க வேண்டும். 

ஆனால் நடந்ததோ வேறு. ஆசை யாரை தான் விட்டது? 'டைனாசர்களில் இருந்து பறவைகள் வந்தன' என்ற யூகத்தை நிரூபிக்க  கிளம்பிய ஆய்வாளர்களின் கண்ணை நம்பிக்கை மறைத்தது. பின்னாளில் இதுக்குறித்து கருத்து தெரிவித்த நே.ஜி, படிமத்தில் இப்படியான பிரச்சனைகள் இருந்ததை இந்த ஆய்வாளர்கள் தங்கள் பார்வைக்கு கொண்டு வரவே இல்லை என்று கூறியது. அட்ரா சக்க....அட்ரா சக்க....

ஆக, நே.ஜி கூறுவதை உண்மை என்று நம்பினால், இந்த படிம பித்தலாட்டத்தை நன்கு அறிந்துக் கொண்டே இந்த ஆய்வாளர்கள் மேற்கொண்டு சென்றிருக்கின்றனர் என்பது தெளிவாகின்றது. விவசாயிகள் காசுக்கு ஆசைப்பட்டு உண்மையை மறைத்தனர். ஆய்வாளர்கள் என்று அறியப்பட்ட இவர்களோ தங்களின் நம்பிக்கையை நிரூபிக்க பித்தலாட்டதிற்கு ஒத்துப்போயினர். இந்த இரண்டு தவறுகளுக்கிடையே உங்களுக்கு ஏதாவது வேறுபாடு தெரிகின்றதா?

சரி, அது போகட்டும். அடுத்ததுக்கு வருவோம். அறிவியல் உலகை பொருத்தமட்டில் ஒரு கண்டுபிடிப்பு முழுமை பெற வேண்டுமென்றால் அது ஆய்விதழ்களில் (Peer review) தான் முதலில் வெளியிடப்பட வேண்டும். பிறகு தான் நே.ஜி போன்ற அறிவியல் ஊடங்களில் வெளிவரும். இந்த படிமம் குறித்த ஆய்வுகளும் அங்கீகாரத்திற்காக Nature மற்றும் Science போன்ற ஆய்விதழ்களுக்கு அனுப்பப்பட்டன. ஜெர்கஸ், க்யூரி, ரோவ், ஜூ ஆகியோரின் பெயரில் கட்டுரை சமர்பிக்கப்பட்டிருந்தது. 

இந்த படிமத்தை ஆய்வு செய்ய கால அவகாசம் குறைவாக இருப்பதாக கூறி ஆய்வுக்கட்டுரையை நிராகரித்துவிட்டது நேச்சர். Science இதழை பொறுத்தமட்டில், விலை அதிகம் பெறுவதற்காக இந்த படிமம் மாற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உருவானதால் அந்த ஆய்விதழும் கட்டுரையை நிராகரித்துவிட்டது (இந்த விசயமும் நே.ஜிக்கு தெரிவிக்கப்படவில்லையாம்...ம்ம்ம்ம்) ஆக, இரண்டு ஆய்விதழ்களும் ஜெர்கஸ் குழுவினரின் கட்டுரையை நிராகரித்துவிட்டன. 

உங்கள் கண்டுபிடிப்பை இரண்டு ஆய்விதழ்கள் நிராகரித்துவிட்டன. அட்லீஸ்ட் இப்போதாவது இந்த படிமத்தை பிரசுரிப்பதில் இருந்து பின்வாங்கியிருக்க வேண்டும். நடந்ததா? இல்லையே. 

நே.ஜி, தன்னிச்சையாக படிமம் குறித்த தகவல்களை வெளியிட முடிவு செய்தது. அக்டோபர் 1999-இல் இந்த படிமம் பத்திரிக்கை உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டு, நவம்பர் 1999-ஆம் ஆண்டு நே.ஜியின் அறிவியல் இதழில் பிரசுரிக்கப்பட்டது. 'T.Rex எனப்படும் சிறிய அளவிலான டைனாசர்களுக்கு சிறகுகளா (Feathers for T.Rex?)' என்ற கேள்வி தான் கட்டுரையின் தலைப்பு. 

படுகலர்புல்லான அந்த கட்டுரையை எழுதிய கிறிஸ்டோபர் ஸ்லோன், நே.ஜியின் ஆர்ட் எடிட்டர் ஆவார். இந்த படிமத்திற்கு ஆர்க்கியோராப்டர் (Archaeoraptor) என்று பெயர் சூட்டியிருந்தது நே.ஜி. பெரும் பரபரப்பை உண்டாக்கியது கட்டுரை. 

நே.ஜி பிரசுரித்த கட்டுரையின் முதல் பக்கம் 

டைனாசர்களுக்கும், பறவைகளுக்கும் இடைப்பட்ட உயிரினமாக  (missing link) ஆர்க்கியோராப்டர் இருப்பதாகவும், எப்படி மனிதர்கள் பாலூட்டிகள் என்பது தெளிவோ அதுபோல 'டைனாசர்கள் தான் பறவைகள்' என்பது இதன் மூலமாக தெளிவாவதாக அந்த கட்டுரை குறிப்பிட்டிருந்தது. 

இந்த கட்டுரை வெளிவந்தது தான் தாமதம். பிரபல ஸ்மித்சோனியன் இயற்கை அருங்காட்சியகத்தின் பறவைகள் பிரிவு பாதுக்காப்பாளரான ஸ்டோர்ஸ் ஒல்சொன் (Storrs L. Olson) பொங்கி எழுந்துவிட்டார். பறவைகளில் குறிப்பிடத்தக்க ஆய்வுகளை மேற்கொண்டிருந்தவர் இவர். 'டைனாசர்களில் இருந்து பறவைகள் வந்தன' என்ற யூகத்தில் மாற்றுக்கருத்து கொண்டவர். நே.ஜியை கடுமையாக விமர்சித்து தள்ளினார் ஒல்சொன். பரபரப்பான, பொருள் இல்லாத செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இதுவரை இல்லாத அளவுக்கு நே.ஜி கீழே இறங்கிவிட்டதாக குற்றஞ்சாட்டினார் ஒல்சொன். 

மேலும், 'டைனாசர்களில் இருந்து பறவைகள்' என்ற யூகம் குறித்து சில மாதங்களுக்கு முன்னர் வெளியாக இருந்த மற்றொரு கட்டுரைக்காக தன்னை நே.ஜி கூப்பிட்டு கருத்து கேட்டதாகவும், மாற்றுக்கருத்தை அவர்கள் பரிசீலிக்க மறுத்ததில் இருந்து, எவ்வகையான ஆக்கப்பூர்வமான விசயங்களுக்கும் நே.ஜி தயாரில்லை என்பதை தான் புரிந்துக்கொண்டதாகவும் கூறினார். விமர்சனங்களுக்கு எல்லாம் கிரீடமாக, தங்கள் நம்பிக்கைக்கு பிரச்சாரம் செய்பவர்களாக சில ஆய்வாளர்கள் மாறிவிட்டதாக ஒரு காட்டு காட்டினார் ஒல்சொன்.

நம் தலைமுறையின் மிகப்பெரிய அறிவியல் பித்தலாட்டங்களில் ஒன்றாக இது மாறப்போவதாக கூறிய ஒல்சொனின் வார்த்தைகள் காலப்போக்கில் நிரூபனமாயின. ஆம், இந்த படிமத்தில் மேற்கொண்டு நடந்த ஆய்வுகள் இந்த படிமத்தின் உண்மைநிலையை உறுதிப்படுத்தின. நே.ஜி தலைகுனிந்தது. கூடவே இந்த தவறை செய்த ஆய்வாளர்களும் மன்னிப்பு கோரினர். 

அறிவியல் போர்வையில் நடந்த நாடகம் மிக சோகமான க்ளைமாக்ஸ்சுடன் முடிவுற்றது. 

தவறை ஆய்வாளர்கள் மீது சுமத்தி நே.ஜி தப்பிக்க நினைத்த போதிலும் சில கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை. 

  • ஒரு அறிவியல் கட்டுரையை ஆர்ட் எடிட்டர் எழுத அனுமதித்தது ஏன்?
  • மிக விரைவாக இப்படியான கட்டுரையை கொண்டு வந்ததற்கான காரணம் என்ன?
  • இந்த படிமம் சட்ட விரோதமாக கடத்தப்பட்டது என்று நே.ஜிக்கு தெரியும். விரைவில் இந்த படிமம் சீனாவிடம் ஒப்படைக்கப்படும் என்று அந்த கட்டுரையில் கூறப்பட்டிருந்தது. இப்படியான சூழலில், என்ன காரணத்தை கூறினாலும், இப்படியாக ஒரு கட்டுரை பிரசுரிப்பது ஒரு சட்டவிரோத செயலை ஊக்கிவிப்பது போலாகாதா?

இந்த பிரச்சனையில் செமையான காமெடிகளும் உண்டு. இந்த பித்தலாட்டம் வெளிச்சத்திற்கு வந்தபோது, இதுக்குறித்து பரிணாம ஆதரவாளர்கள் கவலைப்பட்டிருப்பார்களோ இல்லையோ, படைப்புவாதிகள் குறித்து தான் அதிகம் கவலைப்பட்டார்கள். வேறென்ன, இதனை வைத்து படைப்புவாதிகள் எப்படியெல்லாம் ஆடப்போகின்றார்களோ என்ற பீலிங் தான். 

'இது பித்தலாட்டம் தான், ஆனா டைனாசரில் இருந்து பறவை வந்ததற்கு வேறு சில ஆதாரங்கள் உண்டு' என்பார்கள் பரிணாம ஆதரவாளர்கள். அட எப்பா, இப்ப டைனாசரில் இருந்து பறவை வந்ததா பிரச்சனை?, பித்தலாட்டம்னு தெரியுமுல்ல, தெரிந்தே அதனை மேற்கொண்டு தொடர வேண்டிய அவசியம் என்ன? அதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க. 

இன்னொரு சாராரோ, இந்த கட்டுரையை எழுதியது விஞ்ஞானி அல்ல, அவர் ஒரு ஆர்ட் எடிட்டர் மட்டுமே என்று சப்பை கட்டுகட்டுகின்றனர். ஆனால் சிறிதேனும் அவர்கள் யோசித்தால் இப்படியான வாதத்திற்கு வாய்ப்பிருக்காது. எழுதியது ஒரு ஆர்ட் எடிட்டர் என்றாலும், கட்டுரை என்ன தானாகவா வந்து குதித்துவிட்டது? நே.ஜியின் எடிட்டர் மற்றும் ஆய்வு குழு அனுமதித்தால் தானே பிரஸ்சுக்கே போக முடியும்?. மேலும், பித்தலாட்டம் என்று தெரிந்தும் இதனை தொடர்ந்த ஆய்வாளர்கள் தானே இந்த கட்டுரைக்கு பின்னால் இருந்தது? அவர்களின் கருத்துக்கள் தானே அந்த கட்டுரையை அலங்கரித்தது? எய்தவர்கள் இருக்க அம்பின் மீது குறை சொல்வது முட்டாள்தனம் இல்லையா? நல்ல காமெடி தான் போங்க...

இந்த பதிவுக்கு பதில் சொல்ல விரும்புபவர்கள் தயவுக்கூர்ந்து ஒன்றை புரிந்துக்கொள்ளுங்கள்.  "டைனாசரில் இருந்து பறவை" வந்தது என்ற யூகத்தை இந்த கட்டுரை விமர்சிக்கவில்லை (அதற்கு இத்தளத்தின் ஆர்க்கியாப்டெரிக்ஸ் குறித்த கட்டுரையை பார்க்கவும்) அதனால் பதில் சொல்கின்றேன் என்று கிளம்பி நேரத்தை வீணடிக்க வேண்டாம். மாறாக, பரிணாம ஆய்வாளர்கள் அறிவியலுக்கு செய்த துரோகத்தை தான் இந்த கட்டுரை விமர்சிக்கின்றது. முடிந்தால் அதனை மறுத்து காட்டுங்கள். 

மேலும், "இது பித்தலாட்டம் தான், ஆனா இத யாரு கண்டிபிடிச்சா, நாங்க தானே" என்ற அறிவுக்கு பொருந்தாத கேள்வியையும் தூக்கிக்கொண்டு வரவேண்டாம். குழந்தையை கிள்ளிவிட்டுட்டு தொட்டிலையும் ஆட்டுவது என்பது சாதனை அல்ல, வேதனை மட்டுமே. 

நம் அனைவரையும் இறைவன் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக..ஆமீன். 

இறைவனே எல்லாம் அறிந்தவன். 

References: 
1. Two open letters from Storrs Olson (LONG). link
2. All mixed up over birds and dinosaurs - 15th jan 2000, Science News. link
3. The 5 Greatest Palaeontology Hoaxes Of All Time - 7th June 2011, Science 2.0. link
4. Archoearaptor - wikipedia. link
5. Fake bird fossil highlights the problem of illegal trading - Nature 404, 696 (13 April 2000, doi:10.1038/35008237. link
6. Feathers fly over Chinese fossil bird's legality and authenticity - Nature 403, 689-690 (17 February 2000), doi:10.1038/35001723. link
7. Giant feathered dinosaur found in China was too big to fly - 5th April 2012, The Guardian. link
8. Top 10 scince hoaxes - Discovery Scince. link
9. Philip J. Currie -wikipedia. link
10. Expert: 80% fossils in Chinese museums are fakes - 13th jan 2011. China.org.cn. link
11. Timothy B. Rowe - The University of Texas at Austin. link

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ






Saturday, October 6, 2012

கூரி முஸ்லிம்கள்...



நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன் 

ஸ்லாமிய தழுவல்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், பழங்குடியின சமூகங்களில் இஸ்லாம் ஆழ்ந்த பாதிப்பை  ஏற்படுத்தியிருக்கின்றது என்பது பலருக்கும் ஆச்சர்யமான செய்தியாகவே இருக்கின்றது. தென் அமெரிக்காவின் மாயன் முஸ்லிம் சமூகம் இதற்கு சிறந்த உதாரணம். முஸ்லிம் மாயன்கள் குறித்த செய்தி சில வருடங்களுக்கு முன்னால் வெளிவந்த போது பலரும் அதனை வியப்புடனே பார்த்தார்கள் (முஸ்லிம் மாயன்கள் குறித்த இத்தளத்தின் பதிவை <<இங்கே>> காணலாம்). 

இதோ மற்றொரு பழங்குடியின முஸ்லிம் சமூகம். ஆஸ்திரேலியாவின் கூரி பழங்குடியினரிடையே இஸ்லாம் தனது இருப்பை ஆழமாக பதித்துக்கொண்டிருக்கின்றது. கடந்த மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி பழங்குடியின முஸ்லிம்களின் எண்ணிக்கை 60% உயர்ந்திருக்கின்றது.

பழங்குடியின முஸ்லிம்கள் என்றாலே இவர்கள் குறித்து அறிந்துக்கொள்ளும் ஆர்வம் இயல்பாகவே அதிகரித்துவிடுகின்றது. ஏன் இவர்கள் முஸ்லிமானார்கள்? ஏதேனும் தனித்துவமான காரணங்கள் இருக்கின்றனவா? இவர்கள் இஸ்லாமை தழுவியதின் பின்னணி என்ன?

இவர்களின் வாழ்வை உற்றுநோக்கினால் இவர்களின் மனமாற்றத்துக்கு பின்னால் மிகவும் நெகிழ்ச்சியான, தனித்துவமான, உணர்வுப்பூர்வமான காரணங்களை நாம் அறிய முடியும். அவற்றை நான் விவரிப்பதை விட துறைச்சார்ந்த வல்லுநர் ஒருவர் விவரிப்பது சிறந்ததாய் அமையும்.

டாக்டர் பீட்டா ஸ்டீவன்சன், ஆசிய இன்ஸ்டிடியுட்டின் மதிப்புமிகு உறுப்பினராக இருப்பவர். தன்னுடைய "Dreaming Islam" என்ற புத்தகத்திற்காக ஆஸ்திரேலிய பழங்குடியின முஸ்லிம்களிடையே ஆய்வு மேற்கொண்டிருந்தார் ஸ்டீவன்சன். ஆஸ்திரேலியாவின் SBS ஊடகத்திற்காக அவர் அளித்த நேர்காணல் பழங்குடியின முஸ்லிம்கள் குறித்த பல சுவாரசியமான தகவல்களை நமக்கு தருகின்றது.

டாக்டர் ஸ்டீவன்சன், ஆஸ்திரேலிய பழங்குடியினத்தவரிடையே இஸ்லாமிய தழுவல்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனவா?

2006-ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பையும், அதற்கு முந்தைய இரண்டு கணக்கெடுப்புகளையும் நாம் பார்த்தோமேயானால் இஸ்லாமிய தழுவல்கள் அதிகரித்துக்கொண்டிருப்பதை அறியலாம். 1996 மற்றும் 2001 ஆகிய கணக்கெடுப்புகளில் 600-க்கும் சற்றே அதிகமான பழங்குடியின முஸ்லிம்கள் ஆஸ்திரேலியாவில் இருந்தனர்.

அதேநேரம், 2006-ஆம் ஆண்டு, இந்த தொகை சுமார் 60% அதிகரித்து தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின முஸ்லிம்கள் இருக்கின்றனர். ஆஸ்திரேலிய மக்கட்தொகையை கணக்கிடும்போது இது பெரிய அளவு இல்லையென்றாலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றமே.

இந்த இஸ்லாமிய தழுவல்களுக்கு பின்னணி காரணங்களாக நீங்கள் உங்கள் ஆய்வில் கண்டரிந்தவை?

ஆண்களும் சரி, பெண்களும் சரி, இவர்கள் கூறும் பல காரணங்கள் சர்வதேசரீதியாக இஸ்லாமை ஏற்றுக்கொண்டவர்கள் கூறும் காரணங்களை ஒத்தே இருக்கின்றன.

தங்கள் அனுபவங்கள் குறித்து கூறும்போது, உலகளாவிய இஸ்லாமிய சமூகத்தில் தாங்களும் ஒரு பகுதி என்ற உணர்வு மகிழ்ச்சியடைய செய்திருப்பதாகவும், முஸ்லிம்கள் தங்களை மிகச் சிறந்த முறையில் உபசரிப்பதாகவும் கூறுகின்றனர்.

இஸ்லாமை ஏற்றுக்கொண்டதின் மூலம், பல வழிகளில், காலனி ஆதிக்கத்திற்கு முன்பான தங்களின் பழங்குடியின அடையாளத்திற்கும், பாரம்பரியத்திற்கும் திரும்புவதாக இவர்கள் எண்ணுகின்றனர். தங்களின் பழங்குடியின சமூகத்திற்கும்,  இஸ்லாமிய கோட்பாடுகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதாகவும் இவர்கள் கூறுகின்றனர்.

உதாரணத்திற்கு, இஸ்லாம் அனுமதிக்கும் சிலதாரமணம், பெற்றோர்களால்   முன்னேடுத்து செல்லப்படும் திருமணங்கள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி பொறுப்புகள் போன்றவற்றை கூறலாம்.

முஸ்லிமானதால் தங்களின் பழங்குடியின அடையாளம் திரும்ப உறுதி செய்யப்பட்டுள்ளதாக நான் பேசியவர்கள் கூறுகின்றனர். இப்படியான பதிலை நான் நிச்சயம் எதிர்ப்பார்க்கவில்லை. இஸ்லாமை தழுவும் பழங்குடியினர் அல்லாத மக்களுடன் ஒப்பிடும்போது இத்தகைய பதில்கள் தனித்துவம் வாய்ந்தவை.

மற்றொரு வித்தியாசம் என்னவென்றால், இவர்கள் கிருத்துவ மிஷனரிகளை எதிர்க்கொண்டு இஸ்லாமை தழுவுகின்றனர். இஸ்லாம் என்பது இவர்கள் மீது திணிக்கப்பட்டதல்ல, இவர்களாக விரும்பி ஏற்றுக்கொண்டது.

இந்த இரண்டு கலாச்சாரங்களுக்கு இடையே ஒத்துவராத தன்மை என்று எதையேனும் நீங்கள் காண்கின்றீர்களா?

அப்படியான எதையும் நான் காணவில்லை. சிலர், தாங்கள் முஸ்லிமானதின் மூலம் தங்களின் பழங்குடியின அடையாளம் கலைந்துவிட்டதாக எண்ணுகின்றனர். இன்னும் சிலரோ, நான் மேலே கூறியது போல, இஸ்லாம் தங்களின் பழங்குடியின அடையாளத்தை உறுதி செய்துள்ளதாக நம்புகின்றனர். ஏனென்றால் நிற வேறுபாடுகளும், மொழி வேறுபாடுகளும் இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்டவை. மக்களை வெவ்வேறு விதமாக படைத்தது இறைவனின் நாட்டமாகவே பார்க்கப்படுகின்றது.

ஆகையால், இந்த பழங்குடியினரை பொருத்தவரை, தங்கள் மொழியை மாற்ற வேண்டியதில்லை தங்களின் கலாச்சாரத்தை மாற்ற வேண்டியதில்லை. இவற்றுடனேயே இஸ்லாம் இவர்களை ஏற்றுக்கொள்கின்றது.

இவர்கள் சந்திக்கும் பிரச்சனை என்றால், இவர்களின் நண்பர்களும் குடும்பத்தாரும் மக்களும் இவர்களின் இஸ்லாமிய தழுவலை புரிந்துக்கொள்ளாதது தான். இவர்களின் மனமாற்றத்தை வெள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கையாகவே அவர்கள் பார்க்கின்றனர்.

மால்கம் எக்ஸ் குறித்து என்ன சொல்ல போகின்றீர்கள்? அவருடைய பாதிப்பு இங்கே தெரிகின்றதா?

நான் பேசியவர்களில் பலரும், குறிப்பாக சிறைவாசம் அனுபவித்தவர்கள், மால்கம் எக்ஸ் என்ற மனிதர் மீதே முதலில் ஈர்க்கப்பட்டிருக்கின்றார்கள். அவரின் சுயசரிதையை படித்திருக்கும் இவர்களில் சிலர், தாங்கள் கோபக்காரர்களாகவும், தங்களின் கடுமையான அணுகமுறை மூலம் சட்டரீதியான பிரச்சனைகளை உருவாக்கியதாகவும் வெளிப்படையாக ஒப்புக்கொள்கின்றனர். சொந்த நாட்டிலேயே அன்னியர்களாக தாங்கள் நடத்தப்படுவதாக உணர்ந்த இவர்கள், வெள்ளையர்களுக்கு எதிரானவராக நினைத்து மால்கம் எக்ஸ்சை நோக்கி ஈர்க்கப்பட்டுள்ளனர். (மால்கம் எக்ஸ் குறித்த இத்தளத்தின் பதிவை <<இங்கே>> காணலாம்)

ஆனால், (மால்கம் எக்ஸ் மூலமாக) இஸ்லாம் குறித்து அறிந்துக்கொள்ள ஆரம்பித்தவுடன் தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொண்டனர். தங்களை ஏற்றுக்கொண்ட, வெள்ளையர்களில் இருந்தும் தாங்கள் வித்தியாசமானவர்கள் என்று புரிந்துக்கொண்ட, தங்கள் இனத்திற்காக தங்களை தீர்மானிக்காத ஒரு நம்பிக்கையை இஸ்லாமில் அவர்கள் கண்டனர். இஸ்லாமை பொருத்தவரை உலக மக்கள் அனைவரும் சமமே.

ஆகையால், எப்போது அவர்கள் தங்களை புரிந்துக்கொள்ள ஆரம்பித்தார்களோ, அப்போதே அவர்களிடம் இருந்த தவறான பண்புகள் விலகிவிட்டன.

இஸ்லாமை ஏற்பதற்கு முன்னால் தாங்கள் கோபக்காரர்களாக இருந்ததாகவும், தற்போது அமைதியை விரும்புபவர்களாக மாறியுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இஸ்லாமை தழுவியதின் மூலம் சிலருக்கு அவர்களது வாழ்க்கை காப்பாற்றப்பட்டது என்று கூறுகின்றீர்களா?

ஆம், எல்லாருக்குமே, பல வழிகளில்.

பழங்குடியின சமூகத்தில் மதுவும், சூதாட்டமும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. இஸ்லாமை பொருத்தவரை நீங்கள் மது அருந்தக்கூடாது, சூதாடக்கூடாது. இஸ்லாமின் இத்தகைய அடிப்படை கொள்கைகளில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்வதை மிகவும் பயனுள்ளதாகவே இவர்கள் காண்கின்றனர்.

இஸ்லாமை தழுவியதற்கு ஆண்களும் பெண்களும் சில பொதுவான காரணங்களை கூறினாலும் பாலினம் சார்ந்த சில தனித்துவமான காரணங்களும் உண்டு.

குடும்பத்தை காப்பாற்றுவதும், பராமரிப்பதும் ஆண்களின் கடமை என்று குர்ஆன் கூறுகின்றது. பழங்குடியின ஆண்களை பொருத்தவரை, மனைவி மற்றும் குழந்தைகளை காக்கும் பொறுப்புணர்வு தங்கள் மீது சுமத்தப்படுவதை விரும்புகின்றனர்.

பெண்களை பொருத்தவரை, பெற்றோரில் ஒருவர் மட்டுமே இருக்கக்கூடிய குடும்பங்கள் (Single-headed household) பழங்குடியின சமூகத்தில் நிறைய உண்டு. அவற்றில் பலவற்றில் பெண்கள் மட்டுமே உள்ளனர். ஆகையால், இஸ்லாம் ஆண்களுக்கு குடும்ப பொறுப்புணர்வை சுமத்துவது இவர்களை ஈர்க்கின்றது. மேலும், திருமணத்தின் மீதான அழுத்தமும், குடும்பத்தின் முக்கியத்துவமும், அதில் பெண்களின் பங்கும் இஸ்லாமை நோக்கி இந்த பெண்கள் கவரப்பட காரணமாக இருக்கின்றன.

--- End of Interview ---

ம்ம்ம்....அனைத்து தரப்பு மக்களையும் இஸ்லாம் எளிதாகவே கவர்ந்துவிடுகின்றது. பிரபல ஆஸ்திரேலிய குத்துச்சண்டை நட்சத்திரமான ஆண்டனி முண்டேன் ஒரு பழங்குடியின முஸ்லிமே. இவர் இஸ்லாமை ஏற்றுக்கொண்டதில் இருந்து அதன் பாதிப்பு சமூகத்தில் உணரப்பட்டே வருகின்றது. தற்போது இவர்களிடையே 'கூரி முஸ்லிம் அசோசியேஷன்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு பழங்குடியின முஸ்லிம்கள் சந்திக்கும் சவால்கள் எதிர்க்கொள்ளப்பட்டு வருகின்றன.

இங்கே இப்படி என்றால், அமெரிக்காவிலோ, கடந்த பத்து ஆண்டுகளில், முஸ்லிம் மக்கள்தொகை சுமார் 16 லட்சம் அதிகரித்திருக்கின்றது. சில மாதங்களுக்கு முன்பாக வெளியான மக்கட்தொகை ஆய்வு இதனை கூறுகின்றது. இதன் மூலமாக அமெரிக்காவின் வேகமாக வளரும் மார்க்கம் இஸ்லாம் என்பது மறுபடியும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மத்திய வடக்கு மற்றும் தெற்கின் பல பகுதிகளில், வரலாற்றில் முதன் முறையாக யூதர்களை விட முஸ்லிம்கள் அதிகமாக இருக்கின்றனர்.

"இஸ்லாம் மீதான எதிர்மறை செண்டிமெண்ட்கள் வரும்போதெல்லாம் முஸ்லிம்கள் எழுச்சியே பெற்றிருக்கின்றனர். முஸ்லிம்களுக்கு எதிரான போக்குகள் அவர்களை மிகுந்த மார்க்கப்பற்றுள்ளவர்களாகவே மாற்றுகின்றன" என்று இந்த ஆய்வுக்குறித்து கருத்து தெரிவிக்கும்போது குறிப்பிடுகின்றார் கென்டகி பல்கலைகழகத்தின் துணை பேராசிரியரான டாக்டர் பக்பி. (இந்த ஆய்வுக்குறித்த விரிவான கட்டுரையை இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் காண்போம்).

அதிரடியா சொன்னீங்க சார் :-)

இறைவன் நம்மை நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.

இறைவனே எல்லாம் அறிந்தவன்.

Please Note:
டாக்டர் ஸ்டீவன்சன் அவர்களின் நேர்காணல் பதிவின் நீளம் கருதி முழுமையாக மொழிப்பெயர்க்கப்படவில்லை. முழுமையாக படிக்க கீழே உள்ள சுட்டியை பயன்படுத்தவும்.

References:
1. Q&A: Indigenous and Muslim 'a growing trend' - ABS. 20th July 2012. link
2. A new faith for Kooris - The Sydney morning herald. 4th May 2007. link
3. Koori - wikipedia. link
4. Number of Muslims in the U.S. doubles since 9/11 - New York Daily News, 3rd May 2012. link
5. Anthony Mundine - Wikipedia. link

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ