நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக.,.
நீங்கள் ஆர்வமுடன் கையில் தாங்கியிருக்கும் இந்த புத்தகம் பல வகைகளில் தனித்துவமிக்கதாக திகழப்போகின்றது (இறைவன் நாடினால்). ஒரே எழுத்தாளரின் நடை, சிந்தனை ஓட்டத்திலிருந்து விலகி உங்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கும் இந்நூல், இணையத்தில் செயலாற்றும் பல்வேறு முஸ்லிம் பதிவர்களின் சிறந்த படைப்புகளை ஒருசேர இங்கு கொண்டுவந்து சேர்க்கின்றது.
வெவ்வேறு விதமான எழுத்து நடைகள், வித்தியாசமான சிந்தனைகள், பலதரப்பட்ட பார்வைகள். இப்படியான ஒரு பயணத்திற்கு தான் நீங்கள் ஆயத்தமாகி கொண்டிருக்கின்றீர்கள். ஒரு தலைப்பிலிருந்து அடுத்த தலைப்பிற்கு மாறும் போது நீங்கள் உணரப்போகும் தனித்துவத்தையும், வாசிப்பு அனுபவத்தையும் உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகின்றேன்.
ஒவ்வொரு முயற்சிக்கும் விதை எங்கிருந்தாவது தூவப்பட வேண்டும். எங்களுக்கான விதை என்றால் அது உம்மத் குழுமம் தான். சில வருடங்களுக்கு முன்பாக, இணையத்தில் நிலவும் தவறான இஸ்லாமிய புரிதல்களை களைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருந்தது. அப்படியான தருணத்தில் சில பதிவர்களை ஒருங்கிணைத்து ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த குழுமம்.
இஸ்லாம் என்னும் அற்புத வழிமுறை இருந்ததால் அனைவரையும் ஒரு புள்ளியில் இணைப்பதில் சிரமம் இருக்கவில்லை. சில பதிவர்களுடன் துவங்கிய இந்த முயற்சி இன்று பல பதிவர்களுடன் ஆரோக்கியமான வழியில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. நபிமொழி தொகுப்பான சஹிஹ் முஸ்லிமை மின்னூல் வடிவில் கொண்டுவந்தததில் தொடங்கி ஒரு கட்டுக்கோப்பான பதிவர் வட்டத்தை எட்டியது வரை இந்த குழுமம் நடத்திக்காட்டிய ஆக்கப்பூர்வமான பணிகள் பல. புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக.
அப்படியான முயற்சிகளில் ஒன்றை தான் நீங்கள் இப்போது வாசித்துக்கொண்டிருக்கின்றீர்கள். முஸ்லிம் பதிவர்களின் எழுத்துக்களை ஒருசேர நூல் வடிவில் கொண்டு செல்ல வேண்டுமென்பது எங்களின் நீண்ட நாளைய இலக்குகளில் ஒன்று. இன்று அது சாத்தியப்பட்டதற்காக இறைவனுக்கு நன்றி சொல்கின்றோம். இம்மாதிரியான எதிர்கால முயற்சிகளுக்கு நிச்சயம் இந்நூல் முன்னோடியாக இருக்கும் என்று கூறிக்கொள்ளும் இத்தருணத்தில் சிலருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
இந்த முயற்சியை நடைமுறைப்படுத்தியத்தில் சகோதரர்கள் சிராஜ், நிஜாம் மற்றும் சகோதரி ஆமினா முஹம்மத் ஆகியோருக்கு பெரும் பங்கு உண்டு. அடுத்ததாக, உம்மத் குழும சகோதர சகோதரிகள். இவர்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால் இந்த பணியை முன்னெடுத்து சென்றிருக்க முடியுமா என்பது சந்தேகமே. கட்டுரைகளை தொகுக்க குழு அமைத்ததில் தொடங்கி, நேர்த்தியான திட்டமிடல் வரை இவர்களின் உழைப்பு அலாதியானது. இவர்கள் அனைவரின் கல்வி ஞானத்தையும் இறைவன் அதிகரித்து தருவானாக என்று பிரார்த்தித்தவனாக என்னுடைய மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்.
ஒரு தரமான படைப்பாக இந்நூல் உங்கள் உள்ளத்தினை ஆக்கிரமிக்கும் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகின்றேன். அஸ்ஸலாமு அலைக்கும்.
சகோதரத்துவத்துடன்,
ஆஷிக் அஹமத் அ,
உம்மத் பதிவர் குழுமம்.
----------------
இன்னும் சில தினங்களில் (இன்ஷா அல்லாஹ்) வெளிவர இருக்கும் முஸ்லிம் பதிவர்களின் நூலுக்காக எழுதப்பட்ட இந்த முன்னுரையே உங்களுக்கு பல தகவல்களை தந்திருக்கும்.
பதிவுலகம் என்பது சவால்கள் நிறைந்த பகுதி. இங்கு நிலைப்பதற்கும் சரி, சிறப்பாக செயல்படுபதற்கும் சரி கடுமையான பொறுமையும், சிறப்பான செயல்பாடுகளும் அவசியம். அதிலும் இஸ்லாம் குறித்த தவறான புரிதல்களை களையவதென்பதே நோக்கம் என்றால் அதற்கு ரொம்பவே மெனக்கெட வேண்டும். அந்த வகையில் இன்றைய முஸ்லிம் பதிவர்களின் செயல்பாடுகள் மிகுந்த திருப்தியையே தருகின்றன.
இஸ்லாம் குறித்த பல தவறான புரிதல்கள் இன்று ஆக்கப்பூர்வமாக எதிர்க்கொள்ளப்படுகின்றன. உதாரணத்திற்கு, தீவிரவாதத்திற்கு மதம் இல்லை என்ற கருத்து, முன்பு எப்போதும் இல்லாத அளவு இன்று வலுப்பெற்று வருகின்றது. இதுவொரு மிக ஆரோக்கியமான முன்னேற்றம்.
ஆனால் இது போதுமா என்றால், இல்லை. ஆம், தமிழ் பேசும் ஒவ்வொரு வீட்டிற்கும் இஸ்லாம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற முயற்சிக்கு "எதிர்க்குரல்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புத்தகம் நிச்சயம் உறுதுணையாக இருக்கும் இன்ஷா அல்லாஹ்.
நூலில் இருந்து சில க்ளிப்ஸ்
கடந்த சில மாதங்களாக, இந்த தளத்திற்கு, குர்ஆன் கேட்டு வரும் முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகளின் கோரிக்கைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. அத்தகைய சகோதர சகோதரிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இந்த நூல் இருக்கும்.
இணையத்தில் எழுதுவதோடு மட்டுமல்லாமல், ஒரு புத்தகமாக வெளிக்கொண்டு வந்து பலருக்கும் சேர்க்க வேண்டும் என்ற எங்களின் தொலை நோக்கு பார்வை இன்று சாத்தியப்பட்டதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றோம்.
எதிர்வரும் சென்னை புத்தக கண்காட்சியின் போது வெளிவரும் இந்த நூல் குறித்த மேலதிக தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
கண்காட்சியில் புத்தகம் கிடைக்கும் இடங்கள்:
நூல் விற்பனையாளர்கள்:
சஜிதா புக் சென்டர்,
248, தம்பு செட்டி தெரு,
முதல் தளம்,
பாரிமுனை,
சென்னை- 600 001
044 - 25224821
Sajitha Book Centre,
248, Thambu Chetty Street,
Ist Floor,
Parrys,
Chennai 600 001.
044 - 25224821
தொடர்புக்கொள்ள:
ஆஷிக் அஹமத் : 90432 99006
சகோதரர் சிராஜ்: 99415 85566
இந்த தளம் மூலம் நேரடியாக நூலை பெறவிரும்புவோர், எத்தனை புத்தகம் தேவை, முகவரி உள்ளிட்ட தகவல்களை எனக்கு மெயில் (aashiq.ahamed.14@gmail.com) மூலம் தெரிவியுங்கள். இன்ஷா அல்லாஹ் அனுப்பி வைக்கின்றேன்.
எங்கள் முயற்சிகளுக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்கும் வாசகர்கள் இந்த பணிக்கும் உங்களின் மேலான ஆதரவை அளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளுங்கள். பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளாதீர்கள் - குர்ஆன் 05:02
இறைவன் என்றென்றும் நம்மை நேர்வழியில் நிலைநிறுத்துவானாக..ஆமீன்.
இறைவனே எல்லாம் அறிந்தவன்.
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ