Pages

Sunday, March 24, 2013

'அநாதை' மரபணுக்கள்...



நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியையும் சமாதானமும் நிலவுவதாக...
"NOT having any family is tough. Often unappreciated and uncomfortably different, orphans have to fight to fit in and battle against the odds to realise their potential. Those who succeed, from Aristotle to Steve Jobs, sometimes change the world. Who would have thought that our DNA plays host to a similar cast of foundlings? When biologists began sequencing genomes, they discovered that up to a third of genes in each species seemed to have no parents or family of any kind" All alone: Helen Pilcher, New Scientist, page 41, 19th Jan 2013.
குடும்பம் இல்லாமல் இருப்பது கடினமானது. ஊக்கமில்லாமலும், அசௌகர்ய உணர்வோடும், இப்படியான ஆதரவற்றவர்கள், தங்களின் திறமைகளை வெளிப்படுத்த போராட வேண்டியிருக்கின்றது. வெற்றிகரமாக இதிலிருந்து மீண்டவர்களோ, அரிஸ்டாட்டில் முதல் ஸ்டீவ் ஜாப்ஸ் வரை, சில நேரங்களில், உலகை மாற்றியமைத்திருக்கின்றார்கள். 
யார் தான் நினைத்திருப்பர், நம்முடைய மரபணுக்களும் இப்படியான அநாதைகளை தன்னிடத்தே கொண்டிருக்குமென்று? மரபணு வரிசைமுறை ஆய்வுகளை மேற்கொண்ட உயிரியல் விஞ்ஞானிகள், ஒவ்வொரு உயிரினத்திலும், 30% வரையிலான மரபணுக்களுக்கு பெற்றோரோ அல்லது குடும்பமோ இல்லாததை கண்டுபிடித்தார்கள் - (Extract from the original quote of) All alone: Helen Pilcher, New Scientist, page 41, 19th Jan 2013. 

'நியூ சயின்டிஸ்ட்' இதழில் சில மாதங்களுக்கு முன்பாக வெளியான கட்டுரையின் முதல் பத்தியை தான் நீங்கள் மேலே படித்தீர்கள். எதைப் பற்றி பேசுகின்றார் கட்டுரையாளர்? 'அநாதை' மரபணுக்களா, அப்படியென்றால் என்ன? - உங்களுக்குள் சுவாரசியத்தை கூட்டியிருக்கும் இத்தகைய கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சிக்கின்றது இந்த பதிவு.

உயிரியல் உலகம் அடுக்கடுக்கான ஆச்சர்யங்களை தொடர்ந்து தந்துவருகின்றது. சில நேரங்களில் ஆச்சர்யம் என்ற வார்த்தைக்கு பதிலாக அதிர்ச்சி என்ற வார்த்தையை போட்டும் நிரப்பிக் கொள்ளலாம். ஆம், அத்தகைய அதிர்ச்சிகளில் ஒன்று தான் 'அநாதை' மரபணுக்கள்.

'அநாதை' மரபணுக்களா, அப்படின்னா???

கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் இவ்வுலகில் முதல் உயிரினம் தோன்றியிருக்க வேண்டும், பின்னர் அந்த உயிரினத்தில் இருந்து சிறிது சிறிதாக மாற்றம் ஏற்பட்டு, காலப்போக்கில், இன்று (வரை) காணப்படும் உயிரினங்கள் வந்திருக்க வேண்டுமென்று கூறுகின்றது பரிணாமக் கோட்பாடு. எளிதாக சொல்ல வேண்டுமென்றால், மனிதர்களையும் சேர்த்து, இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் ஒரே பொதுவான மூதாதையர் தான். இதனை வரைப்படம் வாயிலாக விளக்குவதற்கு பெயர் பரிணாம மரம் என்பார்கள்.

அறிவியலின் ஒரு பிரிவினர் பரிணாம மரத்தை ஏற்றுக்கொண்டாலும் மற்றொரு பிரிவினர் இதுக்குறித்த மாற்றுக்கருத்தை கொண்டிருக்கின்றனர். உதாரணத்திற்கு, பாக்டீரிய ஆராய்ச்சியில் பெரும் புரட்சி ஏற்படுத்திய கிரேக் வென்டர், பரிணாம மரத்தை கட்டுக்கதை என்று குறிப்பிட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம் (படிக்காதவர்கள் <<இங்கே>> சுட்டவும்).

ஓகே...பொதுவான மூதாதையரில் இருந்து உயிரினங்கள் வந்துள்ளதற்கு என்ன ஆதாரம்?  மரபணு ரீதியாக உயிரினங்கள் அனைத்திற்கும் தொடர்பு இருப்பதே என்கிறார்கள் பரிமாணவியலாளர்கள். அதாவது ஒரு உயிரினத்தில் காணப்படும் மரபணுக்களின் மூதாதையரை, காலங்கள் பின்னோக்கி செல்வதின் மூலம் கண்டுபிடித்துவிடலாம் என்பது அவர்களின் நிலைப்பாடு.

இப்படியான நம்பிக்கைக்கு தான் அண்மை கால ஆய்வுகள் மிகப்பெரிய இடியை இறக்கியிருக்கின்றன. சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக ஈஸ்ட் எனப்படும் உயிரினத்தில் நடத்தப்பட்ட மரபணு வரிசைமுறை ஆய்வுகள் பல ஆச்சர்யமான உண்மைகளை வெளிக்கொண்டு வந்தன. இவற்றின் சுமார் 30% மரபணுக்கள் தனித்துவமாக இருந்தன. அதாவது, இந்த மரபணுக்கள் போல வேறு எந்த உயிரினத்திலும் மரபணுக்கள் இல்லை. பொதுவான மூதாதையரில் இருந்து உயிரினங்கள் வந்திருந்தால், இந்த 30% மரபணுக்களுடன் தொடர்புடைய மரபணுக்கள், ஈஸ்ட்டுடன் நெருங்கிய தொடர்புடைய உயிரினங்களிலாவது தென்பட்டிருக்க வேண்டும். ஆனால் உண்மை நிலவரங்கள் அப்படி இருக்கவில்லை. இப்படியான மரபணுக்கள் இந்த உயிரின பிரிவிற்கு மட்டுமே உரித்தானவையாக இருந்தன.

ஒரே வரியில் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இந்த மரபணுக்களுக்கு பெற்றோரோ, மூதாதையரோ அல்லது பரிணாம வரலாறோ இல்லை.    இவை 'அநாதை' மரபணுக்கள் என்று அழைக்கப்படுவதின் காரணம் இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். 


'அநாதை' மரபணுக்கள் (உருவகப்படம்) Image courtesy: New Scientist Magazine

இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். சரி, தனித்துவமான மரபணுக்கள் உள்ளன, ஆனால் இந்த உயிரினம் விதிவிலக்காக இருக்கலாம் அல்லவா? இந்த உயிரினத்தில் மட்டும் எப்படியோ(??) இத்தகைய மரபணுக்கள் வந்திருக்கலாம் இல்லையா? - நல்ல கேள்விகள் தான். ஆனால் இங்கு தான் ஆச்சர்யங்கள் அதிர்ச்சிகளாக உருமாறிக் கொண்டிருந்தன.

இந்த உயிரினத்திற்கென்று இல்லை, அதன் பிறகு பல்வேறு உயிரினங்களில் நடத்தப்பட்ட மரபணு வரிசைமுறை ஆய்வுகள், இப்படியான 'அநாதை' மரபணுக்கள் ஒவ்வொரு உயிரின பிரிவிலும் இருப்பதை உறுதி செய்தன. புழுக்களில் இருந்து எலி வரை, கொசுவிலிருந்து மனிதன் வரை - இந்த வரிசை நீண்டுக்கொண்டே போகின்றது.

"every group of animals also possesses a small proportion of genes which are, in contrary, extremely variable among closely related species or even unique. For example, a gene may be present in one species or animal group, but not in any other. Such genes are referred to as "novel," "orphan" or "taxonomically restricted" 'Orphan' Genes Play An Important Role In Evolution - Science Daily, 18th Nov 2008.
ஒவ்வொரு விலங்கின பிரிவிலும், வழக்கத்திற்கு மாறாக, சிறிய அளவிலான மரபணுக்கள் முற்றிலும் வேறுபட்டவையாக அல்லது தனித்துவமாக காணப்படுகின்றன. உதாரணத்திற்கு, ஒரு உயிரினத்தில் காணப்படும் மரபணு வேறெந்த உயிரினத்திலும் காணப்படவில்லை. இப்படியான மரபணுக்கள் 'அநாதை', 'விசித்திரமான' அல்லது 'வகுப்பு தொகுப்புமுறை கட்டுப்படுத்திய' மரபணுக்கள் என்றழைக்கப்படுகின்றன - (Extract from the original quote of) 'Orphan' Genes Play An Important Role In Evolution - Science Daily, 18th Nov 2008.

இப்படியான மரபணுக்கள் கண்டுபிடிக்கப்பட்டப்போது, எதிர்காலம் இதற்கு பதில் சொல்லுமேன்று நம்பிக்கையுடன் காத்திருந்தார்கள் பரிணாமவியலாளர்கள். ஆதிகால மரபணுக்களின் கடைசியாக பிழைத்திருக்கக்கூடிய மரபணுக்களே இவை என்றும், இவற்றில் ஒரு சிறப்பும் இல்லை எதிர்கால ஆய்வுகள் இவற்றின் மூதாதையர் குறித்த விளக்கத்தை தரும் என்றும் சிலர் எண்ணினார்கள். ஆனால் நடந்ததோ நேர்மாறாக இருந்தது. மேற்கொண்டு இவற்றில் நடத்தப்பட்ட ஆய்வுகள் நிலைமையை மேலும் சிக்கலாக்கினவே தவிர, பரிணாமவியலாளர்கள் எதிர்பார்த்த விடையை தரவில்லை.

'அநாதை' மரபணுக்களால் என்ன பயன்?

இந்த மரபணுக்களின் பயன்பாடுகள் இன்னும் முழுமையாக அறியப்படவில்லை. அதே நேரம், இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தகவல்கள், இவை மிக முக்கிய பணிகளை செய்வதாக கூறுகின்றன. எப்படி? விஷம் நிறைந்த பெட்டகங்களை தங்கள் இரையை நோக்கி செலுத்தி அவற்றை உணர்விழக்கச் செய்கின்றன ஜெல்லி மீன்கள் . இந்த பெட்டகங்களை கட்டமைக்கும் அதிநவீன செல்களின் உருவாக்கத்தில் 'அநாதை' மரபணுக்களே வழிகாட்டுகின்றன.

ஜெல்லி மீன். Image Coutesy: underwater.com.au

மற்றொரு உதாரணத்தையும் கூறலாம். ஆர்ட்டிக் பிரதேசங்களில் வாழும் ஒருவகை மீன்கள் (Polar Cod), அங்கு நிலவும் கடும் குளிரில் பிழைத்திருக்க அவற்றில் இருக்கும் 'அநாதை' மரபணுவே உதவி செய்கின்றது. மனித மூளையின் செயல்பாடுகளிலும் இந்த மரபணுக்கள் பங்காற்றலாம் என சில ஆண்டுகளுக்கு முன்பாக வெளிவந்த ஆய்வுகள் கூறுகின்றன.

ஆக, இவை தனித்துவமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் மிக முக்கியமான செயல்பாடுகளையும் உயிரினங்களில் செய்கின்றன.

எப்படி தோன்றின 'அநாதை' மரபணுக்கள்?

இதுவொரு மில்லியன் டாலர் கேள்வி. இதுவரை படித்த நீங்களும் வியந்திருப்பீர்கள். இந்த மரபணுக்களுக்கு பரிணாம வரலாறும்(?) இல்லை. பின்பு எப்படி உருவாகின? உருவானதோடு நில்லாமல் முக்கிய செயல்களையும் செய்கின்றனவே, அது எப்படி?

'அநாதை' மரபணுக்கள் எப்படி தோன்றின என்பதற்கு 'சைன்ஸ் டெய்லி' தளத்தின் மொழியில் பதில் சொல்ல வேண்டுமென்றால் அது "obscure" என்பதாகும். புரியவில்லை/விளக்கமில்லை என்பது தான் இதன் அர்த்தம்.

மற்றொருமுறை பரிணாமக் கோட்பாட்டின் கணிப்பு தவறாகியிருக்கின்றது. அதனால் என்ன? கோட்பாடு எதிர்பார்க்கும்படி ஆதாரம் இல்லையென்றால், ஆதாரத்திற்கு ஏற்றப்படி கோட்பாட்டை உருவாக்கி/மாற்றியமைத்துக்கொள்ள வேண்டியது தான்.

"where do they come from? With no obvious ancestry, it was as if these genes had appeared from nowhere, but that couldn’t be true" All alone: Helen Pilcher, New Scientist, page 41, 19th Jan 2013.
இவை எங்கிருந்து வருகின்றன? தெளிவான மூதாதையர் இல்லாமல், இவை திடீரென தோன்றியிருப்பது போல தெரியலாம். ஆனால் இது உண்மையாக இருக்க முடியாது - (Extract from the original quote of) All alone: Helen Pilcher, New Scientist, page 41, 19th Jan 2013.

ஆம், உண்மையாக இருக்க முடியாது :-) :-). அடுத்த என்ன, கற்பனைத் திறனை கட்டவிழ்த்துவிட வேண்டியது தான்.

மூதாதையர் இல்லை, பின்பு எப்படித்தான் இந்த மரபணுக்களின் தோற்றத்தை விளக்குவது? 'அநாதை' மரபணுக்கள் இருவழிகளில் தோன்றியிருக்க'லாம்' (Possibility) என்று கருதுகின்றார்கள் பரிணாமவியலாளர்கள்.

1. உயிரினங்களின் DNA-க்களில் உள்ள மரபணுக்களை இருவகையாக பிரிக்கின்றனர். ஒன்று, புரதங்களை உருவாக்கும் விதிமுறைகளை தன்னகத்தே கொண்ட மரபணுக்கள் ( 'அனாதை' மரபணுக்களும் இந்த பிரிவில் அடக்கம்). பல்வேறு புரதங்கள் ஒன்று சேர்ந்து உயிரினங்களை உருவாக்கவும், பராமரிக்கவும் செய்கின்றன. இவை Coding DNA என்றழைக்கப்படுகின்றன.

மற்றொரு பிரிவோ, புரதங்களை உருவாக்காத மரபணுக்களாகும். இவை Non-coding DNA அல்லது 'குப்பை' மரபணுக்கள் என்றழைக்கப்படுகின்றன. இந்த குப்பை மரபணுக்கள் என்பவை உயிரினங்களில் பரிணாமம் ஏற்படுத்திய எச்சம்/மிச்சம் என்று நம்புகின்றார்கள் பரிணாமவியலாளர்கள். அதாவது, இவை ஒருகாலத்தில் பயனுள்ளதாக இருந்து இப்போது பயனற்றவையாக மாறிவிட்டன என்பது அவர்களது யூகம் (இதனால் தான் இவற்றிற்கு பெயர் 'குப்பை' மரபணுக்கள்).


ஆனால் 'குப்பை' மரபணுக்கள் என்பவை மிக முக்கியமான செயல்பாடுகளை உயிரின செல்களில் செய்கின்றன என்ற ஆய்வு முடிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. உதாரணத்திற்கு, புரதங்களை உருவாக்கும் மரபணுக்களை இந்த 'குப்பை' மரபணுக்கள்  ஒழுங்குபடுத்துகின்றன என்பது இவற்றின் அதிமுக்கிய பயன்பாடுகளில் ஒன்றாகும். ('குப்பை' மரபணுக்கள் குறித்த இத்தளத்தின் பதிவை காண <<இங்கே>> சுட்டவும்).

அதெல்லாம் சரி, நான் மேலே குறிப்பிட்ட 'குப்பை' மரபணுக்களும், 'அநாதை' மரபணுக்களுக்கும் என்ன சம்பந்தம்?

'அநாதை' மரபணுக்களுக்கு மூதாதையர் யாரும் இல்லாததால், ஒவ்வொரு உயிரினத்திலும் உள்ள இவை, அந்த உயிரினத்திலேயே, 'குப்பை' மரபணுக்களில் ஏற்படும் தற்செயலான மாற்றங்களால், ஆரம்பத்திலிருந்து (from the scratch) உருவாகியிருக்க வேண்டும் என்கின்றார்கள் பரிணாமவியலாளர்கள். 

எளிதாக சொல்ல வேண்டுமென்றால், 'குப்பை' மரபணுக்களில் இருந்து 'அநாதை' மரபணுக்கள் புதிதாக உருவாகியிருக்க வேண்டும். இதனை 'de Novo origin from Non-coding DNA" என்கின்றார்கள். De Novo என்றால் "ஆரம்பத்திலிருந்து" என்று அர்த்தம். புதிதாக உருவானதால் தான் இவற்றின் மூதாதையரை வேறு உயிரினங்களில் கண்டுபிடிக்க முடியவில்லையாம்.

இது என்னடா விசித்திரமா இருக்கே என்று பார்வையாளர்கள் நினைக்கலாம். ஆனால் இயற்கையின் வல்லமையை :-) :-) நன்குணர்ந்த பரிணாமவியலாளர்களுக்கும் இது விசித்திரமாகத் தான் தோன்றியது. பின்னே இருக்காதா? எது நடக்க வாய்ப்பே இல்லை என்று முன்பு கூறி வந்தார்களோ அதனை நம்பி தொலைக்க வேண்டிய அல்லது வேறு வழியே இல்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைமைக்கு 'அநாதை' மரபணுக்கள் தள்ளிவிட்டனவே...

சில ஆய்வாளர்களின் பார்வையில், 'குப்பை' மரபணுக்களில் இருந்து புரதங்களை உருவாக்கும் 'அநாதை' மரபணுக்கள் உருவாகுவதற்கான சாத்தியக்கூறுகள் சைபர் மட்டுமே (practically zero). மற்றவர்களின் பார்வையிலோ இப்படியான உருவாக்கத்திற்கு மிக அற்பமான (infinitesimally small) வாய்ப்புகளே உள்ளன.

"If de novo emergence does indeed have a large role in orphan evolution, one has to explain how a new functional protein can emerge out of a previously non-coding sequence. This would seem highly unlikely a priori, particularly when one considers our current knowledge of protein evolution - The evolutionary origin of orphan genes" - Diethard Tautz and Tomislav Domazet-Lošo, Nature, VOLUME 12, OCTOBER 2011, Page No. 692.
'அநாதை' மரபணுக்கள் புதிதாக (அல்லது துவக்கத்திலிருந்து) உருவாக முடியும் என்றால், பயனுள்ள புரதங்களை 'குப்பை' மரபணுக்கள் எப்படி உருவாக்கியிருக்கும் என்பதை ஒருவர் விளக்க வேண்டி வருகின்றது. கோட்பாடு ரீதியாக, தற்போதுள்ள நம்முடைய புரத பரிணாம அறிவுப்படி, இதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவாகவே தெரிகின்றன - (Extract from the original quote of) Diethard Tautz and Tomislav Domazet-Lošo, Nature, VOLUME 12, OCTOBER 2011, Page No. 692. 

ஆக, எதனை நம்புவது கடினமாக இருந்ததோ, அதனை வேறு வழி இல்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை. சரி போகட்டும், 'குப்பை மரபணுக்களில் இருந்து 'அநாதை' மரபணுக்கள் உருவாகலாம் என்ற இப்போதைய புரிதலிலாவது தெளிவு இருக்கின்றதா என்றால் 'இல்லை' என்பதையே பதிவு செய்ய வேண்டியிருக்கின்றது.

இந்த பதிவிற்காக, இந்த தலைப்பில் கடந்த சில வருடங்களில் வெளியான ஆய்வுக் கட்டுரைகளை படிக்க வேண்டியிருந்தது (அந்த ஆய்வுக் கட்டுரைகளை கீழே மேற்கோள் காட்டியுள்ளேன். பதிவிற்கு எதிர்வினையாற்ற விரும்புபவர்கள் அனைத்து மேற்கோள்களையும் முழுமையாக பார்த்துவிட்டு செயலாற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன்). அவற்றில் எதுவுமே 'அநாதை' மரபணுக்கள் இப்படித்தான் உருவாகின என்று அறுதியிட்டு கூறவில்லை. மாறாக எல்லாமே அனுமானம் தான். இப்படி நடந்திருக்கலாம் (may be), வாய்ப்பிருக்கலாம் (possible) என்று எல்லாமே 'லாம்' தான்.

அதுமட்டுமல்லாமல், இப்படியாக 'அநாதை' மரபணுக்கள் உருவாகுவதற்கு மில்லியன்கணக்கான ஆண்டுகள் ஆகலாம் என்பதால் இந்த யூகத்தை டெஸ்ட் செய்வதும் கடினமாகின்றது.

ஸ்ப்பா...... வாய்ப்பே இல்லை என்று கருதப்பட்டதற்கு இன்று வாய்ப்பிருக்கின்றது, இன்று வாய்ப்பிருப்பதாக எண்ணப்படுவதற்கு நாளை வாய்ப்பில்லாமல் போகலாம்...என்னவோ போங்க :-) :-)

2. மேலே சொன்னதே கண்ண கட்டுது, இதுல அடுத்தது வேறயா? அதிக நேரம் எடுக்காது, இதையும் கேட்டுவிடுங்கள். 'அநாதை' மரபணுக்கள் என்பவை ஒரிஜினல் மரபணுக்களில் இருந்து நகல் எடுக்கப்பட்டு, பின்னர் நகல் எடுக்கப்பட்ட மரபணுக்களில் வேகமாக பரிணாமம் நடந்ததால் மூதாதையருடன் உள்ள ஒற்றுமைகள் துடைத்தெரியப்பட்டுவிட்டன என்கின்றது இரண்டாவது யூகம். இதனை 'Duplication followed by quick divergence' என்கின்றார்கள்.

இப்படியான விளக்கம் அனைத்து 'அனாதை' மரபணுக்களுக்கும் ஒத்துவராது என்று பரிணாமவியலாளர்களே கூறுவதால் இங்கு அதிகம் அலசப்படவில்லை. அவசியம் ஏற்பட்டால் பின்னூட்டங்கள் வாயிலாக அல்லது தனி பதிவாக பார்ப்போம் (இறைவன் நாடினால்).

முடிவாக..

தன்னுடைய 'அநாதை' மரபணுக்கள் குறித்த கட்டுரையில், நான் மேலே கூறியுள்ள இரண்டு வழிமுறைகளையும் மிக சுருக்கமாக ஒரே வரியில் குறிப்பிட்டுள்ள விக்கிப்பீடியா, அந்த கட்டுரையின் கடைசி பத்தியை இப்படி தொடங்கி நிறைவுச் செய்கின்றது.

"It is still unclear how orphan genes arise" - Wikipedia.
'அநாதை' மரபணுக்கள் எப்படி தோன்றின என்பது இன்னும் தெளிவாகவில்லை - (extract from the original quote of) Wikipedia.

Yeah, it is still unclear :-) :-) இந்த பதிவின் முதல் படத்தில் இருக்கும் 'அநாதை' மரபணுக்கள் சிரிப்பது தெரிகின்றதா???

மூடநம்பிக்கைகளில் இருந்து காத்து, இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.

இறைவனே எல்லாம் அறிந்தவன்.

My Sincere thanks to:
1. Nature education
2. DNA learning Center.
3. New Scientist Magazine.
4. Science Daily.
5. Dr.Paul Nelson.
6. Tamil cube dictionary website.

References:
1. All alone -  Helen Pilcher, New Scientist, page 41, 19th Jan 2013. link
2. A happy ending for orphan genes -  Helen Pilcher, Science Monkey, 17th Jan 2013. link
3. Orphan Gene - Wikipedia. link
4. 'Orphan' Genes Play An Important Role In Evolution - Science Daily, 18th Nov 2008. link
5. Biological Common Descent is a Doctrine in Crisis - Dr. Paul Nelson. link
6. Ribosomes, Transcription, and Translation - Nature Educaton. link
7. Transcription and Translation Tool - Attotron.com. link
8. Phylogenetic patterns of emergence of new genes support a model of frequent de novo evolution - Rafik 9. Neme and Diethard Tautz, BMC Genomics 2013, 14:117 doi:10.1186/1471-2164-14-117, 21st Feb 2013. link
10. The evolutionary origin of orphan genes - Diethard Tautz and Tomislav Domazet-Lošo, Nature, VOLUME 12, OCTOBER 2011, Page No. 692. link
11. The Evolutionary Origin of Orphan Genes - Dr.Cornelius Hunter, Darwin's God, 30th Dec 2012. link
12. De-novo Evolution of Genes - Max Planck Institute for Evolutionary Biology. link
13. Must a Gene Have a Function? - LAURENCE A. MORAN, Sandwalk, 8th feb 2012. link
14. Orphan Genes and the Myth of De Novo Gene Synthesis - Designed DNA, 6th March 2012. link
15. Gene Birth, de novo - Biobabel. 4th July 2012. link
16. How Can There Be Orphan Genes? -  Molecular Evolution Forum, 29th May 2009. link
17. Mechanisms and Dynamics of Orphan Gene Emergence in Insect Genomes - Genome Biology and Evolution, Oxford journals, Volume 5, Issue 2, Page No. 439-455. doi: 10.1093/gbe/evt009, 24th Jan 2013. link
18. Orphans as taxonomically restricted and ecologically important genes - Microbiology, 10.1099/mic.0.28146-0, August 2005, vol. 151 no. 8 2499-2501. link
19. De Novo Genes: The Evolutionary Explanation -  Dr.Cornelius Hunter, Darwin's God, 23rd Nov, 2009. link
20. De Novo Origin of Human Protein-Coding Genes - PLoS Genet 7(11): e1002379, doi:10.1371/journal.pgen.1002379, 20th Nov 2011. link 
21. Recent de novo origin of human protein-coding genes - Genome Res.  2009 October; 19(10): 1752–1759, doi:  10.1101/gr.095026.109. link
22. Gene - Wikipedia. link
23. Darwinian alchemy: Human genes from noncoding DNA - Adam Siepel, Genome Res. 2009. 19: 1693-1695, doi:10.1101/gr.098376.109. link
24. Unique “Orphan Genes” Are Widespread; Have No Evolutionary Explanation - Creation Evolution Headlines, 19th Nov 2008. link
25. New Genes, New Brain - The Scientist, 19th Oct 2009. link
26. Orphan Genes - Youtube. link
27. Assessing the NCSE's Citation Bluffs on the Evolution of New Genetic Information - Evolution News, 25th Feb 2010. link
28. Fighting about ENCODE and junk -  Brendan Maher, NATURE NEWS BLOG, 6th Sep 2012. link
29. Gene duplication - Wikipedia. link

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ